Ad

புதன், 12 மே, 2021

இந்தியாவின் உருமாறிய Triple Mutant கொரோனா வைரஸ் 3.0... அச்சம் கொள்ளும் உலக சுகாதார நிறுவனம்!

புது புது சவால்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். அடிக்க அடிக்க எழுந்து வரும் திரைப்பட வில்லன்களை போல மீண்டும் மீண்டும் நம் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்துக் கொண்டிருக்கிறது.

Covid-19

கோவிட் 19 வைரஸ் அடிக்கடி மாறுவேடத்தில் வரும் வில்லன்களைப் போலத் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. கோவிட் 19 கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் B.1.1.7, பிரேசிலில் P.1 வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் B.1.351, இந்தியாவில் B.1.617 என பல உருமாற்றங்களை இதுவரை சந்தித்துள்ளது. பொதுவாகவே ஒரு வைரஸ் பரிணாம உயிரியல் விதியின் அடிப்படையில் எப்போதுமே உருமாறிக் கொண்டேயிருக்கும். Mutation என அழைக்கப்படும் இந்த உருமாற்ற நிகழ்வு சில சமயம் அந்த வைரசினுடைய வீரியத்தைக் குறைக்கும், சில சமயம் அதிகரிக்கும்.

மத்திய அரசு, இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பதை 2021 மார்ச் மாதம் உறுதி செய்தது. சமீபத்தில் இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை ஆகியவை அதிகரிக்கவும் இந்த உருமாறிய கொரோனா வைரஸே காரணம் நம்பப்படுகிறது. B.1.617 எனும் இந்தியாவின் இரட்டை உருமாறிய கொரோனா வைரஸ் (Double mutant) E484Q மற்றும் L452R என்ற இரு உருமாற்றங்களுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. தற்போது இதோடு மூன்றாவது திரிபையும் கொண்டு இந்த கொரோனா வைரஸ் மூன்றாவது முறையாக உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது என்பது சமீபத்திய செய்தி.

கோவிட் - 19 கொரோனா வைரஸ்

இந்நிலையில், மீண்டும் அப்டேட் ஆகியிருக்கிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் மூன்றாவது முறை உருமாறி இருக்கும், புதிய Triple Mutant வைரஸ் இந்திய மாநிலங்களான டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டிருக்கின்றன. இந்த வைரஸ் ''மிகவும் கவலையளிக்கக் கூடிய உருமாறிய வைரஸ்'' என உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது.

இந்தியாவில் டிசம்பர் மாதமே இந்த உருமாற்றங்களுக்கான அச்சுறுத்தல் இருந்தபோதும், முறையாக இதுகுறித்து முழு ஆராய்ச்சிகள் முடக்கி விடப்படவில்லை. இதற்கு கோவிட் தொற்று எண்ணிக்கை குறைந்ததால் வந்த அலட்சியமும், நிதிப் பற்றாக்குறையும்தான் காரணம் என விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த புதிய வைரஸ் திரிபு அதிக வீரியமான நோய் தாக்குதலை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது என எச்சரித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். அதாவது, ''மிகவும் கவலையளிக்கக் கூடிய உருமாறிய வைரஸ்'' எனச் சொல்வது, இந்த வைரஸ் வேகமாகப் பரவும், நோயின் தீவிரத்தை அதிகரிக்கும், சில பரிசோதனைகளில் இதைக் கண்டறியமுடியாது, தற்போது பயன்படும் மருந்துகள் புதிய திரிபு வைரசிற்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படாது, தடுப்பூசிகள் செயல்பாடு குறையும் என்பன போன்ற பல அபாயங்கள் இருப்பதைக் குறிக்கிறது.

டாக்டர். ரோட்ரிகோ

அதேசமயம் உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர். ரோட்ரிகோ, இதுகுறித்து அளித்த பேட்டியில், " இந்தியாவில் புதிய மூன்றாம் திரிபு வைரஸ், variant of concern என உலக சுகாதார நிறுவனம் சொல்லியிருக்கிறது. இந்த வைரஸ் திரிபு குறித்து ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. தற்போதைய ஆய்வுகளின் படி, இந்த வைரஸுக்கு எதிராகவும் தற்போதைய தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் கண்டறியும் பரிசோதனைகளின் செயல்திறன் சிறப்பாகவே இருக்கும்" என நம்பிக்கை அளித்திருக்கிறார்.

கொரோனாவின் வேகத்தைவிட நாம் வேகமாகச் செயல்பட்டு, அதிகப்படியான பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளை மிகத் துரிதமாகச் செய்வதன் மூலமே இதற்குத் தீர்வு காண முடியும். காலம் பதில் சொல்லும்.



source https://www.vikatan.com/health/healthy/third-mutant-strain-of-india-is-a-variant-of-concern-says-who

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக