Ad

செவ்வாய், 11 மே, 2021

திருச்சி: ஓடும் காரில் நகைக்கடை ஊழியர் கொலை! - உடலை காட்டில் புதைத்த கும்பல் சிக்கியது எப்படி?

சென்னையில் நகைகளை வாங்கிக் கொண்டு காரில் வந்தபோது கடை ஊழியரைக் கொன்று புதைத்து விட்டு நகைகளைக் கொள்ளையடித்த டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு நகைக்கடை உரிமையாளரிடம் நாடகமாடிய நிகழ்வுதான் காவல்துறையை மிரள வைத்துள்ளது.

கொலை செய்யப்பட்ட மார்ட்டின்

திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளதுள்ளது பிரணவ் ஜுவல்லரி. புதிய நகைகள் வாங்கக் கடை ஊழியர் மார்ட்டின், காரில் சென்னை சென்றுள்ளார். கடையின் உரிமையாளர் மதன் ஆன்லைன் மூலமாகப் ரூ.75 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பியிருக்கிறார்.

மார்ட்டின் மனைவி அவரது தாய்

சென்னையில் உரிய இடத்திற்குச் சென்ற அவர் ஒன்றரை கிலோ நகைகளை வாங்கிக்கொண்டு திருச்சிக்குக் கிளம்பும்போது மார்ட்டின் நகைக் கடை உரிமையாளரான மதனிடம் போனில் தகவலைச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு அந்த நம்பர் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. பதறிய கடையின் உரிமையாளர் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் போலீஸாரிடம் புகார் அளித்த நகைக்கடையின் உரிமையாளர் மதனிடம் பேசினோம். ”மார்ட்டின் ரொம்ப நல்ல மனிதர் எங்கிட்ட ஆறுவருஷமா வேலைப்பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் சென்னையில்தான் நகை வாங்குவேன். ஒவ்வொரு முறையும் ஆன்லைன் மூலமாக பணத்தை அனுப்புவேன்.

நகைக்கடை உரிமையாளர் மதன்

மார்ட்டின் நகையை வாங்கிக்கொண்டுவருவார். இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நகைகளை வாங்கிட்டு வரச்சொல்லி மார்ட்டினை அனுப்பி வைத்தேன். சென்னை சென்றவர் நகையை வாங்கிவிட்டதாக போன் அடித்தவர், அதன்பிறகு அவரது செல்போன் சுவிட் ஆப் ஆகிறது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கொஞ்சநேரத்தில் வெளியில் விசாரிக்க ஆரம்பித்தேன். எல்லோரும் தெரியவில்லை என்று சொன்னார்கள். இதற்கு முன்பு எனது கடையில் ஓட்டுநராக வேலைப்பார்த்த பிரசாந்த்திடம் பேசுகையில், நகைகளோடு அவர் தலைமறைவு ஆகிவிட்டார் என்று அவரது உறவினர்கள் சொல்வதாக என்னிடம் சொன்னார்.

மார்ட்டின் அதுபோல செய்யமாட்டாருன்னு என்மனசுல ஓடிக்கிட்டு இருந்துச்சி. வரவழியில்ல எங்கும் விபத்து நடந்திருக்கான்னு பாத்துட்டு வாங்கப்பான்னு. என்கடையில் வேலை பாக்குற ரெண்டு பசங்களையும் பிரசாந்த்தையும் அனுப்பிவைத்தேன்.

நகைக்கடை

எனக்கு பிரசாந்த் மீது சின்ன சந்தேகம் ஏற்பட்டது. பிறகு வெளியில் விசாரித்து பார்த்தபோது மார்ட்டினை பிரசாந்த் தான் அழைத்துச்சென்றதாகத் தகவல் வந்தது. பிரசாந்த்தை கூட்டிட்டு போக கூடாதுன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். பிறகு எப்படி மார்ட்டின் பிரசாந்த்தை அழைத்துச் சென்றார் என்று விசாரித்தபோது பல உண்மைகள் வந்தன.

கொலை செய்தவர்களை அழைத்துச்செல்லும் போலீஸார்

அதனை போலீஸாரிடம் சொல்லி விசாரித்தபோது அவர்கள் கால் ட்ரேஸ் பண்ணிப் பார்த்தபோது மார்ட்டின், பிரசாந்த் இருவருடைய செல்போன்னும் பெரம்பலூர் எல்லைப் பகுதியான தொழுதூரில் கட் ஆகியுள்ளது. அவன் தான் கொலை செய்திருக்கவேண்டும் என்று தெரியவந்தது. பின்பு போலீஸார் கைது செய்தனர். அத்தோடு எங்களது நகையையும் மீட்டுள்ளனர். ஒரு நகை மற்றும் பணத்திற்காக ஒரு உயிர் பரிதாபமாகப் போயிருக்கிறது" என்று கண்கலங்கினார்.

வழக்கை விசாரித்துவரும் இன்ஸ்பெக்டர் மணிராஜிடம் பேசினோம். ”மார்ட்டின் செல்போன் டவர் கடைசியாக தொழுதூர் பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து அங்குச் சென்று விசாரணை நடத்தியதில், மார்ட்டின் வந்த கார் ரொம்ப நேரமாக அங்கு நின்றிருக்கிறது. என்ன நடந்தது என்று பிரசாந்திடம் விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லிக்கொண்டே இருந்தார். எங்களுக்கே உண்டான பாணியில் விசாரணை நடத்தப்பட்டதில் உண்மைகளைச் சொல்லத் தொடங்கினார்.

கொலை செய்தவர்கள்

பிரசாந்த் தனது காரை பிரணாவ் நகைக்கடைக்கு வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதில் கணக்கு வழக்கு உரிய வகையில் காட்டாததால் அதிக செலவு இருந்து வந்துள்ளது. இதனைக் கண்டறிந்த மார்ட்டின் அவரின் வாடகை கார்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, வேறொரு டாக்சி நிறுவன வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளார். இதனால் பிரசாந்த்தின் வருமானம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த் அவரை கொல்ல நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் வழக்கமாக செல்லும் கார் இல்லாததால் பிரசாந்தை அழைத்திருக்கிறார். அவன் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தவன்.

திருச்சி உறையூர் காவல்நிலையம்

தொழுதூர் பகுதிக்கு அருகே கார் வந்து கொண்டிருந்த போது திட்டமிட்ட படி மற்றொரு காரில் வந்த விக்ரம், அரவிந்த், பிரசாந்த் ஆகியோர் இவர்கள் சென்ற காரை வழிமறித்து மார்ட்டினை கொலை செய்துவிட்டு காரின் பின்பகுதியில் உள்ள டிக்கியில் ஏற்றி மண்ணச்சநல்லூர் காட்டுப்பகுதியில் உடலைப் புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். நகையை அவனது வேறு வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறான். அதனையும் பறிமுதல் செய்துவிட்டோம். கொலைக்குத் தொடர்புடைய நால்வரையும் கைது செய்துள்ளோம். வேறு யாரும் தொடர்பில் இருக்கிறார்களா என்று விசாரித்து வருகிறோம். புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து போஸ்ட்மார்டம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்" என்று முடித்துக்கொண்டார்.



source https://www.vikatan.com/news/crime/jewelry-store-employee-killed-in-trichy-car-gang-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக