Ad

செவ்வாய், 11 மே, 2021

கொரோனா ஊரடங்கு: அதிகரித்த மது விற்பனை... அடகுக்குப் போன குடும்ப அட்டைகள்!

தமிழகத்தில் கடந்த 9-ம் தேதி மட்டும் ரூ. 428.69 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஒருபக்கமென்றால்,

மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள கந்து வட்டிக்கு கடன் வாங்கியும், வீட்டிலுள்ள பொருள்களை மட்டுமல்லாமல், குடும்ப அட்டைகளை அடமானம் வைத்தும் மது வாங்கியவர்களின் செயல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் கடை

கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்காக அரசு, கடந்த ஆண்டிலிருந்து அவ்வப்போது ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஊரடங்கு காலத்தில் உணவுப் பொருள்களை வாங்கி இருப்பு வைப்பதில் பெரும்பாலான மக்கள் அலைகின்ற நிலையில், இன்னொரு பக்கம், மதுவை வாங்கி இருப்பு வைப்பதில் மது பழக்கமுள்ளவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பொருளாதார வசதி உள்ளவர்களுக்கு மது வாங்கி வைப்பதில் பெரிய பிரச்னையில்லை. ஆனால், நிரந்தர ஊதியம் இல்லாதவர்கள், சிறு வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் மதுவுக்காக கடனாளியாகி வருகிறார்கள்.

டாஸ்மாக் கடை

விவசாய கூலித் தொழிலாளர்களும், கட்டுமானத் தொழிலாலார்கள், பட்டறைத் தொழிலாளர்கள், மீனவத் தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் உதிரித் தொழிலாளர்கள் நிறைந்த மதுரை மண்டலத்தில் மது விற்பனை தமிழக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மதுவுக்காக வீட்டில் உள்ள பொருள்களை எடுத்து வந்து விற்றோ, அடமானம் வைத்தோ மது வாங்கியதை ஞாயிறன்று பல ஊர்களில் காண முடிந்தது.

இதைவிடக் கொடுமையாக, திமுக அரசு, குடும்ப அட்டைக்கு முதல் தவணையாக ரூ.2000 கொரோனா நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளதைக் கேட்டு குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சியுடன் இருக்கும் நிலையில், அவர்களுக்கு தெரியாமல் குடும்ப அட்டைகளை எடுத்து வந்து, அரசு தரும் பணத்தின் உத்தரவாதத்தை கூறி அடமானம் வைத்து பலபேர் மது வாங்கியுள்ளார்கள். இந்த சம்பவம் கடற்கரை பகுதிகளில் அதிகம் நடந்துள்ளது.

முன்பெல்லாம் இதுபோன்று ஊரடங்கு அறிவிக்கும்போது மதுக்கடைகளில் ஒரு நபருக்கு ஒன்று அல்லது இரண்டு மதுப்பாட்டில்கள்தான் விற்பனை செய்வார்கள்.

டிராவல் பேக்கில் மது பாட்டில்கள் வாங்கி செல்லும் இளைஞர்

ஆனால், இந்த முறை அப்படி எந்த கட்டுப்பாடும் விதிக்காததால் ஆளாளுக்கு பெட்டி பெட்டியாக வாங்கி சென்றார்கள். இதில் வியாபார நோக்கில் வாங்கி சென்றவர்கள் அதிகம் என்கின்றனர்.

ஊரடங்கு நடைமுறைக்கு வரும் முந்தின நாளில் அதிகரித்து செல்லும் மது விற்பனையால் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டு வருகிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/poor-people-mortgage-their-ration-cards-to-buy-and-stockpile-liquor-during-lockdown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக