Ad

செவ்வாய், 11 மே, 2021

மேடம் ஷகிலா 17: பொன்னுத்தாய், பாலபாரதி, ஜோதிமணி… அரசியலில் இந்தப் பெண்களின் பங்கு ஏன் முக்கியமானது?!

இன்று அரசியலில் பெண்களுக்கான இடம் என்பது போராட்டங்கள் நிரம்பிய மிக நீண்ட வரலாறு உடையது. கள அரசியலில் ஈடுபடுவது மற்றும் வாக்களிப்பது என்பது பெண்களுக்கான இரண்டு முக்கிய அரசியல் செயல்பாடுகள் என்கிறார்கள். சுதந்திரம் பெற்றதும் குடியரசு இந்தியாவின் முதல் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை வந்துவிட்டது. ஆனால் 75-வது சுதந்திர தின ஆண்டான 2021-ல்கூட நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இடஒதுக்கீடு கோரிக்கையை சட்டமாக்க முடியவில்லை.

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அரசியல் அதிகாரத்தில் நுழைய பெண்கள் போராடி வந்திருக்கிறார்கள். அன்றைய காலக்கட்டத்திலேயே தேசியக் கட்சிகள் இந்திய அளவில் பெண்கள் அணியை கொண்டிருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் நடைபெற்றன. அதற்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தியும் போராட பெண்களுக்கான அரசியல் அமைப்புகள் உருவாகின. பெரும்பாலும் இந்த அமைப்புகள் இடதுசாரி கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வந்தன. உதிரியாக இருந்த பல பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரே வலுவான அமைப்பாகவும் பின்னாளில் மாறியது.

பெண் வாக்காளர்கள்

அதற்கு முன்னரே பல்வேறு கட்சிகளில் தனி அணியாக இல்லாமல் பெண்கள் சேர்ந்தே இயங்கி வந்திருக்கிறார்கள். ஆனாலும் களப்பணியில் சிறந்து விளங்கும் பலருக்கும் சட்டமன்றத்தில் நுழையும் வாய்ப்புகள் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. எல்லாக் காலத்திலும் களப்பணியில் மட்டுமே ஈடுபடுத்திக் கொண்டு அதிகாரத்தில் நுழைய விடாமல் பெண்களை தடுப்பதும், பெண்கள் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவதும் கட்சி பேதமில்லாமல் நடக்கிறது.

1930-ல் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட இரண்டு பெண்களில் ஒருவரான ராதாபாய் சுப்பராயன் 1937-ல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் மறுக்கப்பட்டதற்கு “பெண் எனும் காரணத்தினால் மட்டும் அரசியல் சலுகைகள் அளிக்க முடியாது” என்று காரணம் சொல்லப்பட்டது. இவ்வளவிற்கும் அன்றைய சூழ்நிலையில் ராதாபாய் பெண்ணிய செயல்பாடுகள் மற்றும் கள அரசியலில் ஈடுப்பட்டு வந்தவர். இரண்டு வட்டமேசை மாநாடுகளிலும் பெண்களின் பிரதிநிதியாக கலந்துகொண்டவர். பெண்களுக்கான வாய்புகள் அந்த காலம்தொட்டே 'பெண் எனும் காரணத்தினால்' மட்டுமே மறுக்கப்பட்டு வருகிறது என்பதுதான் வரலாறு சொல்லும் செய்தி.

இன்னொரு பக்கம் பெண் எனும் காரணத்திற்காக மட்டும் ஒரு வேட்பாளருக்கு பெண்களேகூட வாக்களிப்பது இல்லை என்று தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் உறுதி செய்திருக்கிறது. இடதுசாரிகளின் அரசியல் நுழைவு பெரும்பாலும் பள்ளி, கல்லூரி நாள்களிலேயே தொடங்கிவிடும். அப்போதிருந்தே மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். போராட்டங்களில் பங்கு கொள்வது மட்டுமல்லாமல் போராட்டங்களை வழி நடத்தவும் செய்யவேண்டும்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக களமிறங்கி தோல்வியுற்றவர் எஸ்.கே.பொன்னுத்தாய். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் உள்ளவர். 11-ம் வகுப்பு படிக்கும்போதிருந்து அறிவொளி இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியவர். அதன்பின் இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மூலம் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும், உள்ளூர் பிரச்னைகளுக்காகவும் தொடர் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர்.

பொன்னுத்தாய், கனிமொழி

“பெண்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும். அப்படியென்றால் அரசியலுக்குள் நடக்கும் போராட்டங்களிலும் நாம் பங்கெடுக்க வேண்டும்” என்று சொல்லும் பொன்னுத்தாய் அவர்கள் 1996-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சாத்தூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மக்களுக்கு நன்கு அறிமுகமானவர், எப்போதும் களத்தில் இருப்பவர் என்று அறியப்பட்ட இவர் இந்தச் சட்டமன்ற தேர்தலிலும் தோற்றதற்கு மற்ற கட்சிகளின் படைபலமும், பண பலமும் முக்கிய காரணமாக இருப்பதாக கூறுகின்றனர். இது இடதுசாரிகளின் தொடர் குற்றச்சாட்டாகவே இருந்து வருகிறது.

வாக்கு அரசியலில் பணத்தின் அடிப்படையில் மட்டுமே மக்கள் வாக்களிக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 2001, 2006 மற்றும் 2011 எனத் தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலபாரதி அவர்கள்.

மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்கும் இயக்க அரசியலையும், வாக்கு அரசியலையும் மக்கள் அணுகும் முறையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கின்றது. 7 வடகிழக்கு மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று மணிப்பூரில் 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா. 16 ஆண்டுகளுக்கு பிறகு 2016-ல் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு சட்டப்படி இராணுவத்தை எதிர்கொள்ள நினைத்தார். அதிகாரம் கையில் இருக்க வேண்டுமானால் வாக்கு அரசியலில் நுழைய வேண்டும் என முடிவு செய்து அன்றைய முதலமைச்சரை எதிர்த்து அவரது தொகுதியில் தேர்தலில் நின்றார். மணிப்பூரின் ’இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்பட்ட அவர் வாங்கியது வெறும் 90 வாக்குகள் மட்டுமே. மனமுடைந்து அரசியலில் இருந்து விலகிக்கொண்டார். 28 வயதில் இருந்து 44 வயது வரை தன் இளமைக்காலம் முழுவதும் போராட்டம், வழக்கு, கைது என்று மக்களுக்காகவே போராடிய போராளி இரோம் ஷர்மிளா மக்களுக்கு தேவைப்படவே இல்லை. களத்தில் பெரும் போராளியாக இருப்பவர்கள் பலரும் நேரடி வாக்கு அரசியலில் ஈடுபடும்போது தோற்றுப் போகின்றனர்.

ஏமாற்றப்பட்டேன்; கைவிடப்பட்டேன் - இரோம் ஷர்மிளா

எந்தப் பின்புலமும், அரசியல் இயக்கங்களும், பெருங்கூட்டமும் இல்லாமல் அநீதியை எதிர்த்து போராடுவது என்பது தற்போதைய நிலையில் புகழை ஈட்டித் தருமே தவிர ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைப்பது இல்லை. அரசியலில் தொடர் மாற்றங்கள் தேவை, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், மூன்றாவது அணி அல்லது கட்சி உருவாகும்போது ஆட்சியாளர்கள் நேர்மையாகச் செயல்படுவார்கள் என ஒவ்வொரு தேர்தலின்போதும் பேச்சுகள் எழுகின்றன. ஆனால், அது தேர்தல் முடிவுகளில் பிரதிபலிப்பது இல்லை. அந்த மூன்றாவது அணி அல்லது மாற்றத்திற்கான கட்சியாக தங்களை முன்னிறுத்துபவர்கள் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைகிறார்கள்.

வாக்கரசியலில் சாதி, மதம், பணம் முக்கிய அங்கமாக இயங்குகிறது என்றாலும் பெரும்பான்மையான மக்கள் கட்சி, அதன் கொள்கைகள், உள்ளூரில் அக்கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பு, முந்தைய ஆட்சிக் காலத்தின் செயல்பாடுகள் போன்றவற்றை முதன்மையாக மனதில் கொண்டே வாக்களிக்கிறார்கள். தற்போது தமிழ்நாட்டிலுள்ள பெரிய கட்சிகளின் அனைத்து நிர்வாகிகளும் கொள்கை ரீதியாக மட்டுமே இயங்குகிறவர்களா என்று கேட்டால் பதில் இல்லை என்பதுதான்.

ஆனால், இந்த நிலை மாறி வருகிறது. புதிதாக கட்சி தொடங்குபவர்களுக்கு தமிழ்நாட்டின் அடிப்படை அரசியல் பற்றி தெரிந்திருப்பது அவசியம் என்று மக்கள் கருதுகின்றனர். அதேபோல் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புவரை மக்களுக்கு அரசியல் களத்தில் அறிமுகம் இல்லாதவர்கள் திடீரென்று வேட்பாளராக நிற்கும்போதும் அவர்கள் தொகுதி சார்ந்து தெரிந்து வைத்திருப்பது கட்டாயம் எனும் நிலை உருவாகி இருக்கிறது. சமூக வலைதளங்களும், ஊடகங்களும் சம்பந்தபட்டவரிடம் நேரடியாக அவர்களின் அரசியல் நிலைப்பாடு, கொள்கை, சித்தாந்தம் பற்றி கேள்விகள் எழுப்புகின்றன. பதில் தெரியாதவர்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகின்றனர். அதன் விளைவாகத்தான் ”உங்கள் கொள்கை என்ன என்று கேட்டார்கள்… எனக்கு தலைசுத்திடுச்சு” என்று சொல்லியவர்கள் தாமாகவே அரசியலை விட்டு விலகிக் கொள்கிறார்கள்.

குஷ்பு

நடிகர்கள் தங்கள் புகழை பயன்படுத்தி மட்டுமே அரசியலில் வென்று விடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு காலங்காலமாக இருக்கிறது. ஆனால், அது உண்மை இல்லை. அ.தி.மு.க-வை தொடங்கி முதலமைச்சர் ஆவதற்கு முன்பு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தி.மு.க-வில் பணியாற்றி இருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரன். தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அதேபோல் ஜெயலலிதாவும் 10 ஆண்டுகள் அ.தி.மு.க-வில் கட்சிப்பணி செய்துள்ளார். நடிகர்களாக அவர்கள் ஈட்டிய புகழ் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பிரபலமாக இருப்பதால் மட்டுமே அரசியலில் வென்றுவிட முடியாது என்பதற்கு நடிகர் சிவாஜிகணேசன் முதல் தற்போது கமல்ஹாசன் வரை எண்ணற்றோரை குறிப்பிடலாம். குஷ்புவுக்காக கோயிலே கட்டிய தமிழ்நாட்டில் அவரால் தேர்தலில் வெற்றிபெறமுடியவில்லை என்பதில் இருந்து பல விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம்.

பெண்களை அரசியல்படுத்துவது, கட்சி நிர்வாகத்தில் பங்கேற்கச் செய்வது, வேட்பாளர் பட்டியலில் உரிய இடஒதுக்கீடு போன்றவை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த கட்சிகள் செய்யவேண்டியவை. அதற்கு கட்சிகளின் தலைவர்கள் பெண்களுக்கு அரசியல் களம் பாதுகாப்பு அளிக்கும் என்றும், கட்சித் தலைமைகள் அணுகுவதற்கு எளிதானவர்களாக இருப்பார்கள் என்றும் உறுதியளிக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கலந்து கொண்ட ஒரு சமையல் நிகழ்ச்சி அத்தகைய நம்பிக்கையை உருவாக்குவதாக இருக்கிறது. மூன்று தலைமுறையினர் பிரதமராக இருந்த குடும்பத்தைச் சேர்ந்தவரான ராகுல் காந்தி தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் எளிய மக்களுடன் உணவு சமைத்து சாப்பிட்டு ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தியின் மொழிப்பெயர்ப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இருந்தார்.

கரூரில் பேசும் ராகுல் காந்தி, மொழிப்பெயர்ப்பாளர் ஜோதிமணி

ஜோதிமணி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து தனது இளம் வயது முதல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருபவர். பணபலம், வாரிசு என்று எந்தப் பின்புலமும் இல்லாமல் அரசியலில் முன்னேறியவர். அவரைப் போன்ற சாமானியர்களுக்கு கட்சியின் தலைவராக இருக்கும் ஒருவருடன் சமமாக உட்கார்ந்து, சாப்பிட்டு உரையாடும் வாய்ப்பு மிக அரிது. இவையெல்லாம் அரசியல் நாடகம் என்று ஒரு தரப்பு கேலி செய்தாலும், இத்தகைய நிகழ்வுகள் எண்ணற்ற எளிய பெண்களுக்கு அரசியல் களம்மீது நம்பிக்கை ஏற்படுத்தும். இதுபோன்ற இந்தத் தலைமுறை அரசியல் மாற்றங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன.

சட்டமன்றத்தில் பெண்களின் இடஒதுக்கீடு பற்றி பேசும்போது நாம் தமிழர் கட்சி 50% பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்துவதை பலரும் உதாரணமாக கூறுகின்றனர். அக்கட்சியில் கள போராட்டங்களை முன்னெடுக்கும் பெண்கள் மற்றும் கட்சி நிர்வாகியாகப் பொறுப்பு வகிக்கும் பெண்கள் எத்தனை பேர் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். நிர்வாகத்தில் பங்களிக்காமல் வேட்பாளர் பட்டியலில் மட்டும் பெண்களுக்கு 50% தருவது தேர்தல் நேர விளம்பரமே அன்றி பெண்ணுரிமை மற்றும் பெண் முன்னேற்றத்திற்கான வழியாக எடுத்துக்கொள்ள முடியாது.

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களின் எண்ணிக்கை 12. வெறும் 5%. இங்கு 33% இட ஒதுக்கீடு சட்டமானால் மட்டுமே அனைத்து கட்சிகளும் பெண்களை கட்சி நிர்வாகத்தில் பங்கு பெறச் செய்யும் வாய்ப்புகள் அதிகரிக்கும். பெண்களுக்கு சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். அதற்குப் பெண்கள் நேரடி அரசியலில் களம் காணவேண்டும்!


source https://www.vikatan.com/social-affairs/women/madam-shakeela-the-need-for-women-politics-like-ponnuthai-balabharathi-and-jothimani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக