Ad

ஞாயிறு, 9 மே, 2021

`ஒவ்வொரு வாக்குக்கும் இணையாக ஒரு மரம் நடுங்கள்!' - அரசியல்வாதிகளுக்கு கரூர் இளைஞரின் கோரிக்கை

``தி.மு.க-வுக்கு மட்டும், 37.7 சதவிகித வாக்குள் விழுந்திருக்கு. கிட்டத்தட்ட 1,74,36,100 பேர் வாக்களிச்சுருக்காங்க. அ.தி.மு.க கூட்டணிக்கும் கணிசமான பேர் வாக்களிச்சுருக்காங்க. தங்களுக்கு வாக்களிச்ச மக்களின் வருங்காலத்தைக் காக்க, ஒரு வாக்குக்கு ஒரு மரம் என்று, தங்களுக்கு விழுந்த வாக்குகளின் எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், இதை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்" என்று வித்தியாசமான கோரிக்கையை முன் வைத்திருக்கிறார் நரேந்திரன் கந்தசாமி.

மரக்கன்றுகள் நடும் நரேந்திரன் கந்தசாமி

Also Read: நெகிழிக்கு மாற்றாக வாழை இலைப் பொருள்கள்... `இளம் விஞ்ஞானி' பட்டம் வென்ற அரசு பள்ளி மாணவன்!

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள வ.வேப்பங்குடியைச் சேர்ந்த இளைஞர் நரேந்திரன் கந்தசாமி. தனது கிராமத்தைப் பசுமையாக்க, கிராமம் முழுக்க மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். அதோடு, ஊருக்கு பொதுவான இடத்தில், இயற்கை முறையிலான `சமுதாயக் காய்கறித் தோட்டம்' அமைத்து, அதில் விளைந்த காய்கறிகளை மக்களுக்கு இலவசமாக வழங்கினார். அதோடு, பல்வேறு கிராமங்களுக்கு மரக்கன்றுகள், விதைப்பந்துகள், நாட்டு காய்கறி விதைகளை வாங்கி, வழங்கி வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள கம்பெனியில் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றி வந்தார். மாதம் ரூ. 5 லட்சம் வரை சம்பளம் தந்த அந்த வேலையை உதறிவிட்டு, கடந்த தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட வந்தார். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போக, ஆட்சியமைக்கப் போகும் கட்சிக்கும், மற்றக் கட்சிகளுக்கும், `ஒவ்வொரு வாக்குக்கும் ஒரு மரம்' என்ற திட்ட யோசனையை முன்வைத்திருக்கிறார்.

இதுகுறித்து, நரேந்திரன் கந்தசாமியிடம் பேசினோம்.

நரேந்திரன் கந்தசாமி

``வளர்ந்த நாடுகள் சுற்றுச் சூழலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்தியாவும் கையாண்டிருந்தால், இந்நேரம் கொரோனா பெருந்தொற்றில் இருந்தெல்லாம் நாம் நம்மை தற்காத்துக்கொள்ள ஏதுவாக இருந்திருக்கும். மருத்துவத்துக்காக ஆக்சிஜன் இல்லை என்று செய்தியை மீம்ஸ் வழி பகிர்ந்துகொண்டு இருக்கிறோம். ஆனால், நாம் சாதாரணமான சுவாசத்துக்கான காற்றை இன்று எந்தளவு மாசாக்கி வைத்திருக்கிறோம் என்று சிந்திக்கிறோமா என்றால், இல்லவே இல்லை. டெல்லி காற்று மாசுபாடு உச்சம் தொட்டதால், கார்களைப் பயன்படுத்த கட்டுப்பாடு, கருவில் இருக்கும் சிசுவையும் காற்று மாசு பாதிக்கும்' என்று இந்திய தேசத்தின் தலைநகரை பற்றிய செய்திகளில் படித்துக்கொண்டே இருக்கிறோம். காற்றில் தூசியின் அளவானது 100-க்குள் இருந்தால், பிரச்னை இல்லை என்றும் 100 முதல் 200 ஆக இருந்தால், குழந்தைகள், வயதானவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்கள். தற்போது டெல்லியில் மாசுபாட்டின் அளவு 400-க்கும் மேலாக உள்ளது என்பது மோசமான அளவு. தமிழகத்தின் காற்று மாசுபாட்டை பற்றிய தகவல்களை அதிகமாகப் பேசுவதில்லை.

`கத்தரி வெயில் காலத்தில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம்' என்று செய்திகளை அதிகம் பார்க்கிறோம். ஆனால், மழைக் காலத்தில் மரங்களை நட்டிருந்தால், இந்நேரம் வெயிலை சமாளிக்க உதவி இருக்குமே. ஆனால், அந்த சிந்தனை மக்கள் மனதில் இன்னும் ஆழமாகப் பதிய, மரங்களை அதிகம் வளர்க்க நினைக்கும் முயற்சி உதவும் என்றே நம்புகிறோம். `வேகாத வெயிலில் வாக்கு சேகரிக்க நடையாய் நடந்தோம். அடடா எத்தனை வெயில்' என்று உணராத கட்சியினர் இல்லை. வேட்பாளர்கள் இல்லை. கொரோனா காலத்தில் ஊரடங்கு, உலகடங்கு, வீட்டோடு அடங்கு என்று பல சாவுகளை நம் கண் முன் நிறுத்தி இருந்தாலும், தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு மட்டும் கொரோனா விடுமுறையும் விலக்கும் அளித்துவிட்டதாக எந்த பயமும் இன்றி தான் சார்ந்த கட்சியின் வெற்றிக்காக, வெற்றி கொண்டாட்டத்துக்காகப் பாடுபட்ட பலரும் கொரோனாவின் பாதிப்பை உணர்ந்திராவிட்டாலும், வெயிலின் பாதிப்பை உணர்ந்திருப்பார்கள்.

சமுதாய காய்கறித் தோட்டம்

எனவே, தேர்தலில் வெற்றி பெற்ற ஒவ்வொரு வேட்பாளரும், `ஓட்டுக்கு ஒரு மரம்' என்ற அளவில் அவர்கள் பெற்ற ஒவ்வொரு வாக்கையும் கணக்கில் கொண்டு 234 தொகுதியிலும் நட வேண்டும். எத்தனை மரங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் இருக்கும் என்று அவர்கள் யோசித்தால், அடுத்த தேர்தலில் பிரசாரம் செல்லும்போது எங்கள் பசுமைக்குடி அமைப்பின் திட்டமான, `சாலைகள் சோலைகள்' என்பது மெய்யாகும். தேர்தல் வெற்றியில் சால்வைகள், துண்டுகள், இனிப்புகள், பட்டாசுகள், விருந்துகள் என்று பலவும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால், மரக்கன்றுகளை ஒவ்வொருவரும் வெற்றிக்குப் பகிருங்கள்.

அது போல, இந்த மரங்கள் உயிருடன் இருந்து பல உயிரைக் காக்க உதவும். இந்த முயற்சியை, கடந்த சில ஆண்டுகளாக விதைப்பந்து, நாட்டு காய்கறி விதைகள், பனை விதை, மரக்கன்றுகள் என்று பல பசுமைப் பணிகளைச் செய்திருக்கிறோம். மேலும், நாங்கள் நட்ட மரங்களுக்குச் சொந்த செலவில் மாதமிருமுறை தண்ணீர் விட்டு பராமரித்தும் வருகிறோம். இதுபோல, பலரும் செய்தால், பசுமை வனமாக மாறும் என்பதால், இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறோம். ஒவ்வொரு மரமும் ஒரு வரம். ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் அளவின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ரூ. 23 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மனித உயிர் விலை மதிக்க முடியாதது. அதுபோல, ஒரு மரத்தின் மதிப்பு விலை அதைவிட மதிக்க முடியாதது. ஆனால், அதன் உண்மையான மதிப்பை உணர்ந்துகொள்ளப் பொருளாதார ரீதியில் அதை மதிப்பிட வைக்கிறது இந்த கொரோனா.

விதைகள் வழங்கும் நிகழ்வில் நரேந்திரன் கந்தசாமி

உயிர்வளி ஆக்சிஜன் தயாரிக்க எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது கணக்கிட்டால், சாதாரணமாக சுவாசிக்க இந்த மரங்கள் எவ்வளவு விலைமதிப்பில்லாத காற்றை நமக்கு தருகிறது என்பது புரியும். மரங்கள் நமக்குத் தரும் மற்ற பயன்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மரத்தைப் போன்று இயற்கையும், அதிலுள்ள பல்வேறு உயிரினங்களும் தாவரங்களும் மனித குலத்துக்குக் காலங்காலமாகச் செய்துவரும் சேவைகளைப் புரிந்துகொண்டு இருக்கிறது. இப்படி, மரத்தின் தேவையை, அதன் அவசியத்தை சொல்லிக்கொண்டே போகலாம். அதேபோல், புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, நீராதார மேம்பாடு, சுகாதாரமான சுற்று சூழல் என்று பல முன்னெடுப்புகளை அரசு செய்ய வேண்டும்.

மரங்கள் இருந்தால்தான் சுவாசிக்க காற்று கிடைக்கும், காற்று இருந்தால் சுவாசித்து மனிதன் உயிர்வாழ்வான், மனிதன் இருந்தால்தான் மதங்களும் தத்துவங்களும் கொள்கைகள், கோட்பாடுகளும் பேச முடியும். மனிதன் இருந்தால்தான் கட்சிகளும் அரசியல்களும் ஆட்சியாளர்களும் ஏன் ஒட்டுமொத்த ஜீவராசிகளும் உயிர் வாழ முடியும். எனவே, மரங்களே மண் காக்கும், மண்ணே மக்களை காக்கும், நல்ல மக்களே மானுடத்தை காப்பார்கள். நல்ல மனிதமே இந்த உலகை காக்கும். எனவே, பசுமைக்குடியின் முழக்கத்தை மீண்டும் நினைவுறுத்துகிறோம். மரம் வளர்ப்போம். எனக்கு சீட் கிடைத்து, எம்.எல்.ஏ-வாக ஜெயிக்க ஒரு வேளை எனக்கு வாய்ப்பு கிடைத்து இருந்தால், முதல் பணியே பதவி ஏற்கும் நாளன்று வீட்டுக்கு ஒரு மரமோ, பெற்ற வாக்குக்கு ஒரு மரமோ நட்டு பசுமைப்பணியுடன் பசுமை வெற்றியாக செய்திருப்பேன். வாய்ப்பு கிடைக்கவில்லை.

சமுதாய காய்கறித் தோட்டம்

அதனால், ஆட்சியை அமைக்கும் தி.மு.க-வும், மற்றக் கட்சிகளும், தாங்கள் பெற்ற வாக்குகளுக்கு சமமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மரக்கன்றுகளை நட வேண்டும். தி.மு.க கட்சி, சுற்றுச்சூழல் அணியெல்லாம் அமைத்து, மக்கள் நலனில் அதிக அக்கறை காட்டியிருக்கிறது. அதோடு, அவர்களுக்கு ஆட்சியமைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், முதலமைச்சர் ஸ்டாலின், மரக்கன்றுகளை நட்டு, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். அதோடு, ஒவ்வொரு எம்.எல்.ஏ-வையும் தாங்கள் பெற்ற வாக்குகளுக்கு இணையாக மரக்கன்றுகளை அவரவர் தொகுதிகளில் வரும் ஐந்து ஆண்டுகளில் நட வைக்க அறிவுறுத்தலாம். அப்படிச் செய்தால், வெற்றி, தோல்வி என்பதையெல்லாம் கடந்து, தி.மு.க-வை வரும் சந்ததியினர் நன்றியோடு நினைத்துப் பார்க்கும் சூழல் ஏற்படும்" என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/environment/karur-youth-requested-politicians-to-plant-trees-as-much-as-votes-they-got

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக