Ad

ஞாயிறு, 9 மே, 2021

'உளமாற உறுதிமொழி' ஏற்றுக்கொண்ட ஸ்டாலின்... பின்னணியில் பேரறிஞர் அண்ணா!

தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாக பொறுபேற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.  அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று காலை ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கவனிக்கத்தக்க ஒரு மாற்றம் நிகழ்ந்தது.  முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஸ்டாலின் உட்பட அனைத்து அமைச்சர்களும் உறுதிமொழி ஏற்கும்போது ஒரே குரலாக 'உளமாற உறுதி மொழிகிறேன்' என்ற சொற்களைப் பயன்படுத்தினர். கடந்த முறை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டபோது 'ஆண்டவன் மீது ஆணையிட்டு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஜெயலலிதாவின்  மறைவுக்குப் பின்னரும், முதல்வர்களாகப்  பதவியேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக அனைத்து அதிமுக அமைச்சர்களும் ஆண்டவன் பெயர் சொல்லியே பதவியேற்றுக்கொண்டனர். ஆனால், பத்தாண்டுகளுக்குப் பின் அமைந்த திமுக அமைச்சரவையில் ஒரே பதமாக 'உளமாற உறுதிமொழி' ஏற்றுக்கொண்டதற்குப் பின்னால் சுவாரஸ்மான வரலாறு ஒன்று உள்ளது.

கருணாநிதி முதல்வராக பதவியேற்ற போது...

பிரிட்டனில் சார்லஸ் பிராட்லா தொடங்கிய மாற்றம்:

19- ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் நாட்டின் தீவிர நாத்திகராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் அறியப்படுபவர் சார்லஸ் பிராட்லா ( Charles Bradlaugh) இவர், 1880-ம் ஆண்டு நார்த்தாம்ப்டனிலிருந்து, பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும்போது, 'கடவுளின் பெயரால்' உறுதிமொழி எடுக்க மறுத்துவிட்டார். இதனால், அவரை அதிகாரப்பூர்வ உறுப்பினராக அங்கீகரிக்க பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. நாத்திகக் கொள்கையில் உறுதியாக இருந்த பிராட்லாவும் கொள்கை சமரசம் செய்துகொள்ளாமல் இறுதிவரை போராடினார். பிராட்லா போட்டியிட்ட பகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது, மீண்டும் பிராட்லாவே வெற்றிபெற்றார். இம்முறையும் கடவுளின் பெயரால் பதவியேற்க மறுத்துவிடவே, அவரை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. இப்படியாக, தொடர்ந்து மூன்றுமுறை மறுதேர்தல் நடத்தப்பட்டு, ஒவ்வொரு முறையும் பிராட்லாவே வெற்றி பெறுகிறார். நாடாளுமன்றம் ஒப்புக்கொள்வதாய் இல்லை. பிராட்லாவும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. மேலும், பிராட்லா, “இல்லாத கடவுளை சாட்சிக்கு  கொண்டுவரமுடியாது” என்று கூறி “நான் யார், என் கொள்கைகள் என்ன என்பதை நன்கு தெரிந்து கொண்டுதான் என் தொகுதி மக்கள் என்னை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். என் தேர்வை ரத்துசெய்வதன் மூலமாக என்னை தேர்ந்தெடுத்த மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள் அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை இழிவு செய்கிறீர்கள்” என்று கடுமையாக குற்றம் சுமத்துகிறார்.

சார்லஸ் பிராட்லா

இறுதியாக பிராட்லாவின் இடைவிடாத போராட்டத்தினாலும், உறுதியான நிலைப்பாட்டாலும் பிரிட்டன் நாடாளுமன்றம் தனது முடிவை மாற்றிக்கொண்டது. 1886-ம் ஆண்டு 'கடவுளின் பெயரால்' என்பதற்குப் பதிலாக, 'உளமார அல்லது மனசாட்சி'யின்படி உறுதிமொழி கூறி பதவியேற்பதற்கு பிராட்லா அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, பிராட்லாவின் முயற்சியால் 1888ஆம் ஆண்டு பிரிட்டன் பொதுச் சபை அதற்கான சட்டத்தை நிறைவேற்றியது. மேலும், 1909-ம் ஆண்டு உறுதி ஏற்புக்கான சட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. பிராட்லாவின் தொடர்முயற்சி வெற்றிபெற்று, கடவுளின் பெயர் மட்டுமல்லாது உளமாற மனசாட்சிப்படி என்று உறுதி கூறி பதவிப்பிரமாணம் செய்துகொள்ளலாம் என்று அந்த சட்டதிருத்தம் தெரிவித்தது.

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா போட்ட விதை:

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொடங்கிய மாற்றம் தமிழக சட்டமன்றத்தையும் விட்டுவைக்கவில்லை. பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்புவரை, அப்போதைய சென்னை மாகாண தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்து வந்த அனைத்து அரசுகளும், 'கடவுள் அறிய' அல்லது 'இறைவனின் பெயரால்' என்று குறிப்பிட்டே சத்தியப் பிரமாணம் எடுத்து வந்தனர். இந்த முறையை முதன்முறையாக மாற்றியமைத்தவர் அண்ணாத்துரை. 1967-ம் ஆண்டு நடந்த சென்னை மாகாணத் தேர்தலில் போட்டியிட்ட திமுக, காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி  மாநிலக்கட்சியான தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது. திராவிடக் கருத்தியலை பின்பற்றி அண்ணாவின் தலைமையில் மாற்று அரசியலை முன்னெடுத்த திமுக, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது.

அண்ணா

அதில் முதன்மையானது 'பதவிப் பிரமாண' நிகழ்ச்சி.தேர்தலில் வெற்றிபெற்ற அண்ணா உள்ளிட்ட அனைத்து திமுக உறுப்பினர்களும், பகுத்தறிவுக்  கொள்கையில் நாட்டம்கொண்டிருந்ததால், 'இறைவன் பெயரால்' எடுக்கும் சத்தியப்பிரமாணத்தை நிராகரித்தனர். அதற்கு மாற்றாக 'உளமாற' அல்லது 'மனசாட்சிப்படி' என்று உறுதிமொழி கூறி தங்களின் மாற்றத்திற்கான முதல் இன்னிங்சை தொடங்கி வைத்தனர். அதற்கு அண்ணா, "கடவுளின் பெயரால் பதவி ஏற்றால் அவரிடம் வேண்டுதல், பரிகாரம், காணிக்கை கொடுத்து சமரசம் செய்ய வாய்ப்பு உள்ளது. ஆகவே, உளமார என்றால் மனசாட்சி உடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை.” என விளக்கமளித்ததாகவும் கூறப்படுகிறது. பிரிட்டனின் பிராட்லா முன்னோடி என்றாலும், தமிழ்நாட்டு அரசியலில் இதற்கான 'விதை'யிட்டது அண்ணா. அதனைத்தொடர்ந்து ஆட்சிக்குவந்த கருணாநிதி முதல், திமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்த எம்ஜிஆர் வரை, அண்ணா வழியிலேயே 'உளமாற' என்று கூறி உறுதிமொழி எடுத்து வந்தனர்.

அண்ணாவின் மரபை உடைத்த ஜெயலலிதா:

அண்ணா தொடங்கி, அவர் மறைவுக்குப் பின்னால்  முதல்வரான கருணாநிதி, 1969 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட இரண்டு முறையும் 'உளமாற' என்றே உறுதியேற்றுக்கொண்டார். அதன்பின்னர், அதிமுகவைத் தொடங்கிய எம்ஜிஆர், தான் திமுகவிலிருந்து பிரிந்து வந்தபோதும்கூட அண்ணாவின் வழிமுறையை மாற்றாமல், தொடர்ச்சியாக ஆட்சியமைத்த 1977, 1980 மற்றும் 1989-ம் ஆண்டுகளில், மூன்று முறையும் 'உளமாற' என்று கூறியே ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவ்வாறு, திராவிட கட்சிகளின் வழக்கமாகிப்போயிருந்த அண்ணாவின் வழிமுறையை முதன்முதலாக மாற்றியமைத்தார் ஜெயலலிதா. எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, 1991-ம் ஆண்டு முதன்முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா, 'ஆண்டவன் மீது ஆணையிட்டு' என்று கூறி கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். ஆனால், திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவில் இணைந்திருந்த, திராவிடக் கருத்தியலில் ஊறிப்போன நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ. கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மட்டும் அண்ணா வழியிலேயே 'உளமாற' உறுதியேற்றனர்.

ஜெயலலிதா பதவியேற்பு!

அதன்பிறகு, 1996-ம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியமைத்தபோது, மீண்டும் 'உளமாற' என்றுகூறி ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்டது கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவை. அதேபோல், 2006-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றபோதும் இதே முறையை மாறாமல் கடைபிடித்தது, கருணாநிதி தலைமையிலான திமுக.  ஆனால், 2001-ம் ஆண்டின் போதும், 2011 மற்ரும் 2016-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக அமைந்த ஒவ்வொரு அதிமுக ஆட்சியிலும், ஜெயலலிதா உட்பட அனைத்து அதிமுக அமைச்சர்களும் கடவுளின் பெயராலேயே உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து,  ஜெயலலிதா மட்டுமல்லாமல், அவர் மறைவுக்குப்பிறகு ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் ஜெயலலிதா வழியிலேயே 'ஆண்டவன் மீது ஆணையிட்டு' என்று கூறியே உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஸ்டாலின் - ட்விட்டர்

மீண்டும் ஓங்கி ஒலித்த 'உளமாற' அண்ணா வழியில் ஸ்டாலின்:

 மே 7, 2021 நேற்று காலை முதன்முறையாக ஸ்டாலின் முதல்வாராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது, ஆளுநர் பன்வாரிலால் "ஐ, எம்.கே. ஸ்டாலின்" என்று ஆங்கிலத்தில் தொடங்கி வைக்க, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...” என்று உறுதிமொழிப் படிவத்தை வாசித்த ஸ்டாலின், இறுதியாக  பத்தி முடிவில், 'உளமாற' என்று கூறி அரங்கையே அதிரவைத்தார். 2006-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்குப்பிறகு, சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து ஸ்டாலின் குரலில், 'உளமாற' என்று கூறியதும் கட்சியின் மூத்தத் தலைவர்கள் அனைவரும் பெருமிதம் கொண்டனர். அதனைத்தொடர்ந்து, பொறுப்பேற்றுக்கொண்ட 33 அமைச்சர்களும் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் வழியில் 'உளமாற' என்றே உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பதவியேற்புக்குப்பின், முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் கணக்கில், M.K. Stalin, Chief Minister of Tamil Nadu | President of the DMK | என்று குறிப்பிட்டதோடு 'Belongs to the Dravidian stock' என்று கூறி தன்னை திராவிடத்தின் நீட்சியாக தீர்க்கமாக நிலைநிறுத்திக்கொண்டார். ஆட்சிப்பொறுப்பேற்ற நாளில், ஸ்டாலினின் இத்தகைய செயல்பாடுகள் திமுகவினர் மட்டுமின்றி  ஒட்டுமொத்த  திராவிட கருத்தியலாளர்களையும் கவர்ந்து, வெகுவாக பாராட்டப்பட்டும் வருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/interesting-facts-during-mkstalins-chief-minister-oath-ceremony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக