Ad

புதன், 26 மே, 2021

''புளூ சட்டை மாறன் படத்துக்கு சென்சார்ல பிரச்னைனா கொண்டாடுறாங்க!'' - `ஆண்டி இண்டியன்' தயாரிப்பாளர்

தமிழ் திரை உலகில் புளூ சட்டை மாறனை தெரியாத நபர்கள் இருக்க முடியாது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வரும்போதெல்லாம் இவரின் பட விமர்சன வீடியோ பேசுபொருளாக மாறும். இவர் ஒரு படத்தை இயக்கப்போகிறார் என்ற தகவல் வெளியானதும், எல்லா படங்களையும் கலாய்த்து தள்ளிய இவரின் படம் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பார்க்க, சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையில் இருக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களே மிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மாறன் இயக்கிய 'ஆன்டி இண்டியன்' என்ற படத்தை ஆதம்பாவா தயாரித்திருக்கிறார். படத்தின் பணிகள் நிறைவுபெற்று சென்சார் வாங்குவதற்காக சென்ற இடத்தில் படத்தைப் பார்த்த சென்சார் குழு, படத்திற்கு தடை விதித்தனர். ஆகையால், படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு எடுத்துச் சென்றனர். அங்கேயும் சில முட்டுக்கட்டைகள். ஏன் இந்தப் படத்திற்கு இந்தளவுக்கு பிரச்னை, அப்படி அந்தப் படத்தில் என்ன இருக்கிறது, ரிவைசிங் கமிட்டியில் நடந்தது என்ன என்பதை அறிந்துகொள்ள படத்தின் தயாரிப்பாளரிடம் பேசினேன்.

'ஆன்டி இண்டியன்'

''இங்க சென்சார்ல படத்துக்குத் தடைனு சொன்னதும் பெங்களூர்ல ரிவைசிங் கமிட்டிக்கு எடுத்துட்டுப் போனோம். அங்க நாகபரணானு ஒரு பெரிய இயக்குநர் இருக்கார். அவர் தலைமையில பத்து பேர் படம் பார்த்தாங்க. பார்த்து முடிச்சவுடன், 'ரொம்ப டேரிங்கான படமா எடுத்திருக்கீங்க. ரொம்ப நல்ல படம்'னு பாராட்டி முடிச்சுட்டு, 'சில விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணா, இந்தப் படம் எந்த சிரமும் இல்லாமல் வெளியே வந்திடும்'னு சொன்னார். என்னமாதிரியான கரெக்‌ஷன் பண்ணணும்னு கேட்டதுக்கு, 'முதல்ல படத்துடைய டைட்டிலை மாத்துங்க. யாரை ஆன்டி இண்டியன்னு சொல்றீங்க?'னு கேட்டார். 'மத ஒற்றுமையை சீர்குலைக்கிற, அரசியலுக்காக மக்களை பலிகடாவாக்குறவங்களை ஆன்டி இண்டியன்னு சொல்றோம். அந்த மாதிரியான கதாபாத்திரங்களை படத்தில் பார்த்திருப்பிங்க'னு சொன்னோம். 'சரிதான். ஆனாலும், அந்த டைட்டிலை மாத்தணும்'னு சொன்னாங்களே தவிர, தெளிவான காரணத்தை சொல்லலை. அதிலேயே வாக்குவாதமாகிடுச்சு.

அப்புறம், படத்துல நடிகர் கபாலினு ஒரு கேரக்டர் பத்தி சிலர் பேசுறாங்க. 'நீங்க ரஜினி சாரைத்தான் சொல்றீங்களா?'னு கேட்டாங்க. 'அது ஒரு கேரக்டர் அவ்ளோதான். அப்படிதான் பார்த்தோம். ஆனா, நீங்க அவரைத்தான் சொல்றோமான்னா எப்படி சொல்ல முடியும். கபாலினா ரஜினி சார் மட்டும்தானா? எம்.ஜி.ஆர் படங்கள்ல பெரும்பாலும் வில்லன் பெயர் கபாலிதான். ரஜினி சார் நடிச்ச பெரும்பாலான படங்களுக்கு படத்துல அவர் பெயர் என்னவோ அதுதான் டைட்டிலா இருக்கும். அந்தப் பெயர்கள் எல்லாம் எப்படி அவருக்கு சொந்தமாக முடியும்? நாங்க கபாலினு ஒரு நடிகர் கேரக்டரை சொல்றோம். அதை நீங்க அவரைதான் சொல்றோம்னு நினைச்சுக்கிட்டா நாங்க என்ன பண்ணமுடியும் என்றோம். சரி, ஒரு லெட்டரை இது ரஜினியைக் குறிக்குது, மாத்துங்கன்னு எழுதிக்கொடுங்க என்று கேட்டோம். 'அதெல்லாம் முடியாது' என மறுத்துவிட்டார்கள்.

தயாரிப்பாளர் ஆதம்பாவா

தவிர, 'ராஜானு ஒரு கேரக்டர் வருது. அது பிஜேபி அரசியல்வாதியை குறிப்பிடுற மாதிரி இருக்கு. அதையும் மாத்துங்க'னு சொன்னாங்க. இதையும் லெட்டர் ஃபார்மேட்ல கொடுங்கன்னு கேட்டதுக்கு நோ சொல்லிட்டாங்க. இப்படியே பேச்சுவார்த்தை போய்க்கிட்டிருந்தது. சரி கட் லிஸ்ட் சொல்லுங்கன்னு கேட்டா, 38 கட்னு சொன்னாங்க. அதுக்கெல்லாம் ஓகே சொன்னா, சில இடங்கள்ல ம்யூட் பண்ணனும்னு சொன்னாங்க. ஒரு படத்துடைய காட்சிகளை நீக்க சென்சாருக்கு உரிமையே இல்லை. அப்படியில்லைனா, 'ஏ' சான்றிதழ் கொடுக்கலாம். ஆனா, இவங்க அப்படி பண்ணலை. இன்னும் சொல்லணும்னா, காட்சியின் அளவை குறைக்க சொன்னாங்க. இவங்க சென்சார் போர்டா இல்லை எடிட்டரானு தெரியலை. இவங்க சொன்ன எந்த கரெக்‌ஷனுக்கும் தெளிவான விளக்கம் கொடுக்கலை. இந்தப் படத்தை காலி பண்ணனும்ங்கிற நோக்கத்துலதான் இருந்தாங்க.

சென்சார் போர்டுக்கு பின்னாடி அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கு. யாருன்னும் சொல்றேன். இந்தப் படத்துக்கு தடைனு செய்தி வந்தவுடன், தமிழ்நாடு நடப்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடைய வாட்ஸ் அப் குரூப்ல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, 'God is great'னு மெசேஜ் பண்றார். லிப்ரா ரவீந்திரன் 'Double Great'னு போடுறார். மாறனுக்கும் உங்களுக்கும் ஆயிரம் பிரச்னை இருக்கலாம். அது உங்களுக்கும் அவருக்குமானது. அவர் என்கிட்ட ஒரு கதை சொன்னார். அது பிடிச்சிருந்தது. நான் தயாரிச்சேன். சக தயாரிப்பாளருடைய முதலீடு முடங்கிறதுல இவங்களுக்கு என்ன சந்தோஷம்? பொதுத்தளத்திலேயே இப்படி பண்றாங்கன்னா, பின்னாடி இந்தப் படத்துக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்திருப்பாங்க. தமிழ் திரையுலகமே மாறனுக்கு எதிரா பெரிய அழுத்தம் கொடுத்திட்டிருக்கு. படம் நல்லாயில்லைனா நீங்களும் திட்டுங்க. நாங்க ஏத்துக்க தயாரா இருக்கோம். ரிவைசிங் கமிட்டியிலயும் இப்படி சொல்லிட்டதனால, அடுத்து ட்ரிபூனலுக்கு போகணும். எங்க நேரமோ என்னவோ அதை கலைச்சுட்டாங்க. அதனால, நீதிமன்றத்துக்கு போகலாம்னு இருக்கோம். அதே மாதிரி, யாரை காப்பாத்துறதுக்கு சென்சார் போர்ட் இருக்குனு தெரியலை. இவங்களுடைய நடவடிக்கையெல்லாம் பார்க்கும்போது ஒரு கட்சியுடைய கட்டுப்பாட்டுக்குள்ள இருக்குனு தெரிய வருது. ஏந்த சமரசமும் இல்லாமல் எந்த கட்டும் இல்லாமல் எடுத்தது எடுத்த மாதிரியே, இந்தப் படம் வெளியாகுற வரை போராடுவேன்'' என்றார் தயாரிப்பாளர் ஆதம் பாவா.



source https://cinema.vikatan.com/tamil-cinema/problems-behind-blue-stattai-maran-anti-indian-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக