Ad

வெள்ளி, 21 மே, 2021

பள்ளிக் கல்வித்துறைக்கு ஆணையர் நியமிப்பதில் என்ன சிக்கல்? - எதிர்ப்பு வலுப்பது ஏன்?

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் அதிகாரிகள் மட்டத்தில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனுக்கு பதிலாக இறையன்பு ஐ.ஏ.எஸ் புதிய தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். முதல்வரின் செயலாளர்களாக, உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். சென்னை மாநகர ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக வேளாண் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்த வரிசையில், கடந்த வாரத்தில் ஒரே நாளில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், பள்ளிக் கல்வித் துறை ஆணையராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருப்பதுதான் தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் வழிவகை செய்திருக்கிறது.

நந்தகுமார் ஐ.ஏ.எஸ்

கடந்த அதிமுக ஆட்சியில் தான் பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. சிஜி தாமஸ் வைத்தியன் முதல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பள்ளி கல்வி இயக்குநரிடமிருந்து செய்திகள், ஆணையரின் மூலமாகவே அரசுக்கு கொண்டு செல்லப்பட்டன. இனி இயக்குநரின் முழுப்பொறுப்பையும் ஆணையரே எடுத்து நடத்துவார் என தற்போது அரசு அறிவித்துள்ளதையடுத்து ஆணையராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அரசின் இந்த அறிவிப்பிற்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

``தமிழக அரசு இதுவரை, கல்வித்துறையில் பல்லாண்டுகாலம் அனுபவம் வாய்ந்த ஒருவரையே, பள்ளிக் கல்வி இயக்குநர் பணியில் நியமித்துள்ளது. ஆனால், அந்தப் பதவியை ரத்து செய்துவிட்டு, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை பள்ளிக் கல்வி ஆணையராக நியமித்திருப்பது எதிர்காலத்தில் தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தும்'' என ஒரு சில கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ``பள்ளிக் கல்வித்துறையில் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஏற்கனவே இருக்கும்போது ஆணையர் அந்தஸ்தில் இன்னொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எதற்கு'' என கேட்டு ஆசிரியர்கள் சங்கங்கள் போர்க்கொடி உயர்த்துகின்றன.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. அவர்கள் மட்டுமல்லாது, பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ``இந்த புதிய அறிவிப்பை ரத்து செய்துவிட்டு பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும்'' என தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன்

இந்தநிலையில், நியமனம் குறித்து, குழந்தைகள் உரிமை செயற்பட்டாளர் தேவநேயன் பேசும்போது,

``பள்ளிக்கல்வித்துறையின் உயர் பொறுப்பில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை நியமித்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கல்வியியல் நிபுணத்துவம் பெற்றவர்களை, இந்தத் துறையில் பல்லாண்டுகாலம் அனுபவம் வாய்ந்தவர்களை நியமிப்பதே சரியானது. பொதுவாக மற்ற துறைகளை நிர்வகிப்பதற்கும் கல்வித்துறையை நிர்வகிப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களின் பின்புலத்துக்கும் தகுந்தார்போல செயல்பட வேண்டியதிருக்கும். என்னைப் பொறுத்தவரை, ஆணையர் என்கிற இந்த நியமனமே மறைமுகமாக தேசிய கல்விக்கொள்கையை உள்புகுத்தும் வேலையாகவே நான் பார்க்கிறேன்.

பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். எந்தவொரு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க கல்வியாளர்களையோ, குழந்தைகள் செயற்பாட்டாளர்களையோ அழைக்காமல் அவர்களுக்குள்ளாகவே பேசிக் கொள்ளும் நடைமுறையே இருக்கிறது. ஆனால், அதற்காக நிர்வாகத்துறை சார்ந்த ஒருவரை நியமித்திருப்பது சரியல்ல. காரணம், கல்வி என்பது வெறுமனே நிர்வாகம் சார்ந்த விஷயமல்ல. இது மனித வளத்தை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்பாடு. அதனால், இந்த நியமனத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும்.

தற்போது ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பவரே முழுமையாக இந்தப் பதவியில் நீடிப்பார் என்று சொல்ல முடியாது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வேறொருவரை நியமிப்பார்கள். அவர் இந்தத் துறை குறித்து அறிந்துகொள்வதற்கே பல காலம் ஆகிவிடும். ஆனால், பள்ளிக் கல்வி இயக்குநர் பதவிக்கு வருபவர்கள், ஆசிரியராக பணியைத் தொடங்கி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மை மாவட்டக் கல்வி அலுவலர், பள்ளிக்கல்வி இணை இயக்குனர், பள்ளிக் கல்வி கூடுதல் இயக்குனர் என பல்வேறு பொறுப்புகளை சுமந்து, அவற்றில் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு தான் பள்ளிக் கல்வி இயக்குனர் பொறுப்புக்கு வருகிறார்கள். இவர்களின் பன்முக அனுபவம் நிச்சயமாக மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவும். தமிழக அரசின் தற்போதைய முயற்சி தேவையில்லாதது என்பதே என் கருத்து'' என்கிறார் அவர்.

பேராசிரியர் சிவக்குமார்

இந்த நியமனம் குறித்து, பேராசிரியர் சிவக்குமார் பேசும்போது,

``நந்தகுமார் ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சிறப்பாக செயல்பட்ட அதிகாரி. பள்ளி கல்லூரி நலன்களில் அக்கறையோடு பணியாற்றியவர். தனது மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு பல வகையிலும் பல்வேறு உதவிகளை செய்து வந்தவர். மாநில கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஒருவர் ஆட்சிப்பணி அலுவலராக இருப்பதால், அவரின் திறமையையும் அரசுப்பள்ளி மாணவர்கள் மீது அக்கறை கொண்ட அணுகுமுறையும் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று கருதி குறிப்பிட்ட நோக்கத்துக்காக தமிழக அரசு பணியமர்த்தியிருக்கிறது.

ஆனால், நந்தகுமாரின் பணியானது செயலகத்திலிருந்து செயல்படக்கூடிய செயலாளர் போன்ற பணியாக இருந்தால் வரவேற்கலாம். ஆனால் ஆணையராக பணியமர்த்தப்பட்டதை ஏற்க முடியாது. தற்போது மத்திய அரசு ஒட்டு மொத்த கல்வித்துறையையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலும் சூழலில் ஆட்சிப்பணி அலுவலர் ஒருவரை பள்ளிக்கல்வி ஆணையராக பொறுப்பில் நியமிப்பது தமிழ்நாட்டின் தனித்தன்மையை இழக்கச் செய்யும். வேறு மாநிலத்தவர் நமது கல்வித் துறை ஆணையராக வந்து அமர்கையில் அவருக்கு நம் தமிழர்களின் பண்பாடும் தமிழ்நாட்டின் கல்விமுறையும் பற்றி தெரியப்போவதில்லை. வேறு மாநிலத்தவரை ஆணையராக அனுமதித்தால் வருங்காலங்களில் வேறு சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். இயக்குநர் பணி நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தேவையற்றது"என்றார்.

தியாகராஜன்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் தியாகராஜன் பேசும்போது,

``பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரையில் இயக்குநர் பணியை நீக்கி ஆணையரை அமர்த்தியுள்ளது தவறான முடிவு. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை தான் பின்தங்கியது போலும் மற்ற துறைகள் வளர்ச்சியின் உச்சத்தை தொட்டு விட்டது போலும் சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கும் எத்தனையோ துறைகள் என்ன நிலைமையில் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் ஒரு துறை, ஐஏஎஸ் அதிகாரியால்தான் செழிப்பாகும் என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கல்வித்துறையில் கமிஷனர் பதவியை அனுமதித்த போதே எதிர்த்து வந்தோம். கடந்த ஆட்சியில் அதிகார மையங்கள் குவிந்து இருந்ததால் முடிவெடுக்க முடியாமல் பள்ளிக்கல்வித்துறை சிரமப்பட்டு இருந்தது. மேலும் முன்பைவிட ஆணையரை பணியமர்த்திய பிறகுதான் பள்ளிக்கல்வித்துறை பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இந்த அரசு இதையெல்லாம் சீர் செய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அரசு இப்படி அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து இயக்குனர் பணியை உருவாக்கித் தரும் என நம்புகிறோம்." என்றார்

பிரின்ஸ் கஜேந்திரபாபு

பள்ளிக் கல்வி ஆணையர் பணியிடம் 2019-ல் உருவாக்கப்பட்ட போதே பள்ளிக் கல்வித்துறையில் அத்தகைய பணியிடம் தேவையற்றது என்ற கருத்தைப் பதிவு செய்தது, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை. அந்த அமைப்பின் பொதுச்செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு இது குறித்துப் பேசுகையில்,

`` ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கக்கூடாது என இனிமேல் வலியுறுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆனால், இதில் இருக்கும் ஒரு ஆபத்தை நாம் அரசுக்கு சுட்டிக் காட்ட வேண்டும். தற்போது ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் நந்தக்குமார் மிகச்சிறந்த அதிகாரிதான். ஆனால், எதிர்காலத்தில் இவருக்குப் பதிலாக வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஆணையராக வந்து அமர்ந்துகொண்டால் என்ன செய்வது என்பதற்காகத்தான் ஆணையர் பதவி தேவையில்லை என்பதை வலியுறுத்துகிறோம். ஆனால், ஒருமுறை சுட்டிக்காட்டியதோடு நிறுத்திக் கொள்ளலாம். ஆறு மாதமோ, ஒரு வருடமோ நந்தகுமார் பணி செய்யட்டும்.

இதுவரை இயக்குநர்களாக இருந்தவர்களிடம் மக்கள் நலன் சார்ந்து நாம் எவ்வளவோ மனுக்கள் கொடுத்திருக்கிறோம். அவர்கள், ஒருமுறை கூட நம்மை அழைத்து விவாதித்ததில்லை. நியாயமான கோரிக்கைகளையும் அரசிடம் கொண்டு சேர்த்ததில்லை. ஆசிரியராக இருந்து படிப்படியாக இயக்குநரானவர்களுக்கு, பள்ளிக்கல்வி குறித்து அனைத்து விஷயங்களும் தெரியும் என்பது உண்மைதான். ஆனால், அவ்வாறு இயக்குநர்களாக இருந்தவர்கள், ஏன் ஆசிரியர்களை அழைத்துப் பேசியதில்லை, துறை சார்ந்த குழுக்களில் ஆசிரியர்களை ஏன் நியமிக்கவில்லை. ஆசிரியராக இருந்து இயக்குநராக வந்துவிட்டால் பள்ளிக்கல்வியை மேம்படுத்துவார்கள் என்பது நம் நம்பிக்கைதான். ஆனால் அது நடக்கவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு அந்த அனுபவம் இருக்காது என்பது நம் சந்தேகம்தான், ஆனால் உண்மையல்ல.

கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி

அரசுப் பள்ளியையும் அரசுப் பள்ளி மாணவர்களையும் நேசித்தவர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தவர் நந்தகுமார். அவருக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம் என்பதே என் கருத்து. உடனடியாக அவரை எதிர்த்து எழுதி, வழக்கம்போல, மோசமான ஒருவர் இயக்குநராக வந்தமர்வதால் யாருக்கும் எந்த நன்மையும் கிடையாது. அரசு இந்த விஷயத்தில் மிகவும் வெளிப்படைத்தன்மையோடு நடந்துகொள்கிறது. எதிர்காலத்தில் தவறான நபர் இந்தப் பதவிக்கு வரும்போது நாம் கடுமையாக எதிர்த்துக்கொள்ளலாம். பழையபடி இயக்குநர் பதவியையே கொண்டு வாருங்கள் என்கிற கோரிக்கையை முன்வைத்து போராடலாம்'' என்கிறார் அவர்.

Also Read: புதிய அரசின் கவனத்துக்கு: பள்ளிக்கல்வியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் என்னென்ன?

ஓய்வு பெற்ற சட்டக் கல்லூரி பேராசியரும் சமூக ஆர்வலருமான விக்டர் தேவசகாயம் பேசும்போது,

``பள்ளிக்கல்வித்துறையில் ஆணையரை பணியமர்த்தியதை நூறு சதவிகிதம் வரவேற்கிறேன். இங்கிருக்கும் ஆசிரியர்கள் யாருமே இணை இயக்குனர் பதவிக்குக் கூட முயற்சி செய்வதில்லை. டி.ஒ தேர்வு எழுதியே பணிக்கு வருகிறார்கள் அப்படி பணிக்கு நியமிக்கப்படுபவர்களும் பதவி உயர்வு என்று வந்தவுடன் வேறு எந்தத் துறைக்கும் செல்லத் தயாராகி விடுகிறார்கள். மேலும் இங்கு அனைத்து இயக்குனர் பணியும் தற்காலிகமான பணிதான். இதன் விளைவாகத்தான், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 90 சதவிகிதம் கல்வி சம்பந்தப்பட்ட வழக்காக உள்ளது.

விக்டர் தேவசகாயம்

பள்ளிக்கல்வி, கல்லூரி, கால்நடை மருத்துவம், சட்டம் எல்லாம் ஒன்றாக இருந்தபோது இயக்குனர் தேவைப்பட்டது. மேலும் மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பு இதைப் பின்பற்றினோம். மாநில சூழலிலும் பள்ளி கல்வித் துறையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மாற்றங்களை வரவேற்போம். அது சரியான மாற்றமாக இருந்தால் வெற்றி தானே... அது தவறும் பட்சத்தில் பிறகு அதை எதிர்ப்போம். அதேபோல, 'வேறு மாநிலத்தவர் ஐஏஎஸ் அதிகாரியாக, ஆணையராக வருவதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தவிர்க்க முடியாது" என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-school-education-commissioner-nandhakumar-ias-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக