Ad

வெள்ளி, 21 மே, 2021

மொராக்கோ:'கடலில் பிளாஸ்டிக் பாட்டிலை கட்டிக்கொண்டு நீந்திய சிறுவன்'-உயிரைப் பணயம் வைத்து ஒரு பயணம்

மொராக்கோ நாட்டில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து வரும் அகதிகளில் ஒரு சிறுவன் பிளாஸ்டிக் சோடா பாட்டில்களை தன் உடலில் கட்டிக்கொண்டு கடலில் அழுதுகொண்டே நீந்தி ஸ்பெயின் எல்லையை அடைந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆப்ரிக்கா நாடான மொராக்கோவின் எல்லையில் அமைந்துள்ளது சியூட்டா, கடற்கரை நகரமான சியூட்டா மொராக்கோவில் இருந்தாலும் இது ஐரோப்பியா நாடான ஸ்பெயினின் பகுதியாகும்.

அகதியாக வந்தவர்களை இழுத்துச்செல்லும் காவலர்கள்

வறுமை, உள்நாட்டுப் போர் போன்ற காரணங்களால் அவ்வப்போது மொராக்கோ நாட்டில் உள்ள ஸ்பெயினின் சியூட்டா பகுதியில் உள்ள எல் தாராஜல் கடற்கரையில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு கடல்வழியாக நீந்தி இடம்பெயர்ந்து வந்தனர். ஆனால் இந்த வாரத்தில் மட்டும் திடீரென 8000 பேர் வரை அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். திடீரென இவ்வளவு அதிகமான மக்கள் வருவதை அறிந்த ஸ்பெயின் அரசு அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. பின் காவல்துறையினரைக் கொண்டு அகதிகளில் பலர் திருப்பி அனுப்பப்பட்டும், குழந்தைகள் ஸ்பெயினில் உள்ள அகதிகள் முகாமிலும் தங்க வைக்கப்பட்டனர்.

அகதிகளாக புலம்பெயர்ந்த 8000 பேரில் ஒருவர்தான் அந்த சிறுவன், ஸ்பெயின் நாட்டிற்கு செல்வதற்கு கடலில் நீந்திதான் செல்லவேண்டும் என்பதால், தன் உடல் முழுவதும் பிளாஸ்டிக் சோடா பாட்டில்களை கட்டிக்கொண்டு கடலை நீந்திக் கடக்க முயன்றுள்ளான். இந்த நிலையில் ஸ்பெயினில் உள்ள காவல்துறையினரால் கடலில் இருந்து இந்த சிறுவன் மீட்கப்பட்டார். அழுதுகொண்டே அந்த சிறுவன் கடலில் மிதக்கும் காட்சி மக்களை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. இது போன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ரப்பர் மிதவைகள் கொண்டும், மிகச் சிறிய படகுகள் கொண்டும் எல்லையைக் கடக்கின்றனர்.

இதுகுறித்து ஸ்பெயின் அரசு கூறுகையில் 'இவ்வளவு பெரிய தொகையிலான மக்கள் எல்லையைக் கடக்கும்வரை, அவர்களைக் கட்டுப்படுத்தாமல் மொராக்கோ அரசு வேடிக்கை பார்க்கிறது. மொராக்கோ அரசு பிளாக்மெயில் அரசாக உள்ளது' என்று குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக கொரோனாவால் பாதிப்படைந்துள்ள பாலிசாரியோ முன்னணியின் தலைவரான பிரஹிம் காலிக்கு சிகிச்சை அளிக்க முன் வந்த ஸ்பெயினின் முடிவால் மொராக்கோ அரசு கோபமடைந்துள்ளது. இவர் பல ஆண்டுகளாக மொராக்கோ அரசை எதிர்த்துப் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வாறு புலம்பெயர்வதை தடுப்பதற்காக புதன்கிழமை முதல் ஸ்பெயின் நாட்டின் கடற்கரைப் பகுதியிலும், மொராக்கோவில் உள்ள ஸ்பெயின் பகுதியான சியூட்டாவிலும் ஸ்பெயின் அரசு பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/international/refugee-boy-swimming-from-morocco-to-spain-by-using-plastic-bottles

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக