Ad

வெள்ளி, 21 மே, 2021

தஞ்சாவூர்: கொரோனா பாதிப்பில் மனைவி உயிரிழப்பு; துக்கத்தில் கணவர், மகன் சோக முடிவு!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் கனகராஜன் (57). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைஸராகப் பணிபுரிந்து வந்தார். இதற்காகத் தன் மனைவி மீனா (45) மற்றும் மகன் மனோஜ்குமார் (26) ஆகியோருடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மீனா சிகிச்சைப் பலனளிக்காமல் கிருஷ்ணகிரியிலேயே உயிரிழந்தார். கொரோனாவின் விதியைப் பின்பற்றி மீனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மீனாவின் இழப்பைத் தாங்க முடியாமல் அவரின் கணவர் கனகராஜனும், மகன் மனோஜ்குமாரும் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து மீனாவின் அஸ்தியைக் கரைப்பதற்காக மீனாவின் பெற்றோர் ஊரான தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நரங்கிப்பட்டு கிராமத்துக்கு வந்ததுடன் அஸ்தியைக் கரைத்து செய்ய வேண்டிய காரியத்தை செய்து முடித்தனர்.

மீனாவுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை மகன்

அதன் பின்னரும் தந்தையும் மகனும் சோகமாகவே இருந்துள்ளனர். உறவினர்கள், `நடந்தது நடந்து போச்சு, அதையே நெனச்சுக்கிட்டி இருக்காதீங்கப்பா' எனத் தேற்றியுள்ளனர். ஆனாலும் கனகராஜனும் மனோஜ்குமாரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உறவினர்கள் தரப்பில் பேசியபோது, ``கனகராஜன், மீனா, மனோஜ்குமார் மூன்று பேரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசம் கொண்டிருந்தனர். மீனாவுக்கு தன் கணவர் மற்றும் மகன்தான் உலகம். கொரோனா பரவலில் இரண்டாவது அலையில் கிருஷ்ணகிரியில் இருந்த மீனா ஒரு மாதத்துக்கு முன்பே கொரோனா பாதிப்புக்கு ஆளானார். அப்போதே தந்தையும் மகனும் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து மீனா உயிரிழந்தார். கிருஷ்ணகிரியிலேயே முறைப்படி இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. பின்னர் மீனாவின் அஸ்தியைக் கரைப்பதற்காக நரங்கிப்பட்டுக்கு வந்தனர். கடந்த 18-ம் தேதி மீனாவின் அஸ்தி கரைக்கப்பட்டு செய்ய வேண்டிய காரியங்கள் செய்யப்பட்டன. அதன் பிறகும் தந்தை மற்றும் மகன் சகஜ நிலைக்கு வரவில்லை. யாரிடமும் பேசாமல் கடும் மன வருத்தத்தில் இருந்து வந்தனர்.

`அவள் இல்லாத உலகத்தில் எப்படி வாழ்வேன்' எனக் கணவரும், `அம்மாதான் எனக்கு எல்லாமே, என்னை தவிக்க விட்டுட்டு அவங்க மட்டும் போய் சேர்ந்துட்டாங்க' என மகனும் புலம்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்துப் பார்க்காமல் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

India Covid Outbreak

கொரோனா உண்டாக்கிய பாதிப்பில் ஒரே மாதத்துக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளது உறவினர்கள் மட்டுமன்றி அப்பகுதியையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது' எனத் தெரிவித்தனர்.

கொரோனா பரவலால் கடும் மன உளைச்சலுக்கு பலர் ஆளாகி வருகின்றனர். இந்தக் கடுமையான சூழலை எதிர்கொண்டு கடக்க வேண்டுமே தவிர தவறான முடிவுகளை யாரும் எடுத்து விடக் கூடாது என்ற அக்கறை குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.

மூளை நரம்பியல் மற்றும் மனநல ஆலோசகர் டாக்டர் அலீம், இதுபோன்ற சூழல்களில் தற்கொலை எண்ணத்தை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

``ஒரு குடும்பத்தில் திடீரென ஒருவர் அகால மரணம் அடையும்போது அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவரை நினைத்து பெரும் துயரத்தில் தவிப்பது தவிர்க்க முடியாதது. என்றாலும், எல்லா துயரங்களுமே மீளக்கூடியதுதான் என்று உணர வேண்டும். குறிப்பாக, இதுபோன்ற கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அவநம்பிக்கையோடு இருப்பதை தவிர்க்க வேண்டும். நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடனேயே மருத்துவரை நாடும் எளிய செயல், இதுபோன்ற துயர்மிகு விளைவுகளிலிருந்து காப்பாற்றும்.

டாக்டர் அலீம்

கொரோனா பாதிப்பால் உயிரிழப்பைச் சந்தித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மனதை விட்டுவிடக் கூடாது. மன இறுக்கமும், கவலையும் தொடர்ந்தால் உடனடியாக டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். தற்கொலை எண்ணம் தோன்றினால், குடும்பத்தில் நம்மை நம்பியுள்ள மற்றவர்களின் அன்பை, எதிர்காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். இந்த வாழ்க்கை இடர்களையும் சேர்த்தே கொடுத்துத்தான் வாழச்சொல்கிறது. `இதுவும் கடந்து போகும்' என்ற எண்ணமே உலகை பல துயர்களையும் மீறி சுழலச் செய்கிறது. மீள்வோம், வாழ்வோம்.

குறிப்பாக, சிறிய பொறியாக தற்கொலை எண்ணம் எழுந்தாலே, உடனடியாக மனநல ஆலோசகரிடம் சென்றுவிட வேண்டும்'' என்றார்.

தற்கொலை எண்ணம் எழுந்தால் தமிழக அரசின் 104 என்ற 24 மணி நேர சேவை எண்ணுக்கு அழைக்கலாம். இந்த இலவச தொலைபேசி சேவையில் உங்களின் மனநலக் குழப்பங்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.


source https://www.vikatan.com/news/tamilnadu/husband-and-son-dies-of-suicide-after-wife-passed-away-due-to-covid-19-in-thanjavur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக