Ad

சனி, 22 மே, 2021

`தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு?!’ - `விடுமுறை எனச் சிலர் ஊர்சுற்றுவதாக’ ஸ்டாலின் வேதனை

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 10-ம் தேதி முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. இது வரும் 24-ம் தேதி அதிகாலை 4 மணியுடன் முடிவடையும் நிலையில், புதிய ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவக்குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழ்நாடு தலைமைச் செயலகம்

இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவக் குழுவினர் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தனர். மருத்துவக்குழுவுடன் ஆலோசனைக் கூட்டத்தை முடித்த முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மருத்துவக் குழுவினருடனான ஆலோசனையில் தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாகப் பரிசீலிக்கப்படும். தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தினால்தான் நோய் கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஸ்டாலின்

முழு ஊரடங்கை சிலர் விடுமுறை என நினைத்து ஊர் சுற்றுகிறார்கள். காவல்துறையினர் அன்பாக அறிவுரை கூறியும் சிலர் கேட்பதில்லை. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றார். இது தொடர்பான அறிவிப்பு இன்றைய ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/news/stalin-speaks-about-new-lock-down-restrictions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக