Ad

திங்கள், 24 மே, 2021

`எட்டாம் வகுப்பில் எழுந்த ஆசை!' - விமான பைலட் ஆன கேரள கடற்கரை கிராமத்துப் பெண்

கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த முதல் பெண் பைலட் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் கேரள மாநிலம் கோவளம் கொச்சுத்துறையைச் சேர்ந்த ஜெனி ஜெரோம். 23 வயதான ஜெனி ஜெரோம், வயது குறைந்த விமானி என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். விமானம் ஓட்டும் பயிற்சியை முடித்து தற்போது முதன்முதலாக விமானத்தையும் இயக்கியுள்ளார் ஜெனி ஜெரோம்.

கடந்த சனிக்கிழமை இரவு 10.25 மணிக்கு ஷார்ஜாவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு வந்த ஏர் அரேபியா விமானத்தில் இணை பைலட்டாகச் செயல்பட்டார் ஜெனி ஜெரோம். அரபிக்கடலின் மேல் விமானத்தில் பறந்து தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்துக்கு வந்திருக்கிறார். விமானியாகியிருக்கும் மீனவ கிராமத்துப் பெண் ஜெனி ஜெரோமை கேரளமே கொண்டாடி வருகிறது. கேரளத்தின் வயது குறைந்த பெண் பைலட் என்ற பெருமையும் ஜெனி ஜெரோமுக்குக் கிடைத்திருக்கிறது.

ஜெனி ஜெறோம்

இதுகுறித்து ஜெனி ஜெரோம் கூறுகையில், ``நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ப்ளஸ் டூ முடித்த பிறகு பெற்றோரிடமும் உறவினர்களிடமும் எனது ஆசையைச் சொன்னேன். `பெண் பிள்ளையான நீ எப்படி பிளேன் ஓட்ட முடியும்' என்பது போன்ற வார்த்தைகள், என்னை சோர்வடையச் செய்யவில்லை. என் அப்பா எனது ஆசைக்கு பெரும் துணையாக நின்றார்.

கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு விமானம் ஓட்டும் பயிற்சிக்கு அனுப்புவதாக அப்பா சொன்னார். அதன்படி சார்ஜா ஆல்ஃபா ஏவியேஷன் அகாடமியில் பயிற்சியில் சேர்ந்தேன். 18 மாதங்கள் பயிற்சி, கொரோனா காரணமாக காலதாமதம் ஆனது. ஒருமுறை பிலிப்பைன்ஸில் விமானப் பயிற்சியின்போது கோளாறு ஏற்பட்டதால் விமானத்தை தரையில் மோதி நிறுத்தும் நிலை ஏற்பட்டது. எனக்கு பெரிய அளவில் காயம் இல்லை. அந்த விபத்தால் நான் தளர்ந்துபோகவில்லை, மேலும் சாதிக்கும் எண்ணமே ஏற்பட்டது.

விமான பைலட் ஜெனி ஜெறோம்

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நான் விமானத்தை இறக்கியபோது என் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிறைந்தன. முதன்முதலில் என் சொந்த ஊருக்கு விமானம் ஓட்டியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரத்துக்கு விமானத்தில் பறக்க வேண்டும். சிறந்த பைலட் என்ற பெயர் எடுக்க வேண்டும் என்பதுதான் என் கனவு" என்றார்.

எட்டாம் வகுப்பில் மனதில் துளிர்விட்ட ஆசையை விடாது எட்டிப்பிடித்திருக்கும் ஜெனி ஜெரோமிற்கு சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



source https://www.vikatan.com/news/tamilnadu/kerala-woman-becomes-first-woman-pilot-from-fishermen-community

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக