கர்ப்பமான நிலையிலும் விடுப்பு எடுக்காமல் மருத்துவ சேவையாற்றி வந்த அரசு மருத்துவர் சண்முகப்ரியா கொரோனா பாதிப்பால் மரணமடைந்த சம்பவம் மதுரை மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கோவிட் இரண்டாம் அலை தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த மருத்துவ அலுவலர் சண்முகப்பிரியா கொரோனா தொற்றால் நேற்று காலமானார்.
மதுரை மருத்துவக்கல்லூரியின் 2006-பேட்ச் மாணவியான சண்முகப்பிரியா சின்னமனூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி, தற்போது மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் விடுப்பு எடுக்காமல் அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார். மூன்று நாள்களுக்கு முன் அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் கோவிட் பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு கோவிட் பாசிட்டிவ் எனத் தெரிய வர, மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று மரணமடைந்தார். கர்ப்பிணியாக இருந்த நிலையில் மருத்துவ சேவையாற்றியதால் கொரோனா பாதிப்பில் அவர் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் முன்களப் பணியாளர்களாக பணியாற்றும் மருத்துவர்கள் மிக வேதனை அடைந்துள்ளார்கள்.
அரசு மருத்துவர் சங்க மாநில தலைவர் மருத்துவர் செந்தில், "கோவிட்-19 பணியில் மிகவும் முனைப்போடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டவர். காய்ச்சலுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் அனைத்து சிகிச்சையும் வழங்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்துவிட்டது பெரும் வேதனையை அளிக்கிறது" என்றார்.
மருத்துவர் சண்முகப்பிரியா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பல்வேறு மருத்துவர் அமைப்புகள், சமூக அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/lady-doctor-who-was-pregnant-is-now-dead-because-of-covid-infection
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக