Ad

ஞாயிறு, 23 மே, 2021

புதுச்சேரி: `பி.பி.இ கிட்டுக்காக பிச்சை எடுக்கிறோம்!’- அதிர வைக்கும் செவிலிய அதிகாரியின் வாக்குமூலம்

புதுச்சேரியில் தீவிரமெடுத்துவரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களுக்கு நிகராக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகிவருகிறார்கள்.

இந்நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையின் கொரோனா பிரிவில், செவிலியர் அலுவலராக பணியாற்றி வந்த நிரஞ்சனா என்பவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மரணத்தால் அதிர்ச்சியில் இருக்கும் சக செவிலிய அலுவலர்கள், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லததாலேயே தொற்று ஏற்பட்டு நிரஞ்சனா உயிரிழந்தார் என்று குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

நிரஞ்சனா

இந்நிலையில், நேற்று சமூக வலைத்தளங்களில் செவிலிய அதிகாரி ஒருவர் வெளியிட்ட ஆடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஆடியோவில்,``எங்களுக்கு எந்த நஷ்ட ஈடும் தேவையில்லை. தரமான பி.பி.இ கிட் வாங்கிக் கொடுத்தால்போதும். தரமான பி.பி.இ கிட் வேண்டுமென்று கவர்னருக்கும், சுகாதாரத்துறை செயலருக்கும் கடிதம் போட்டுவிட்டேன். இப்போது கொடுக்கப்படும் தரமில்லாத பி.பி.இ கிட்டை ஒரு மணி நேரம் கூட அணிய முடியவில்லை. மூச்சுத் திணறல் ஏற்படுவதால் அதனை கழற்றிவிடுகின்றனர் செவிலியர்கள்.

நாங்கள் எவ்வளவுதான் மன்றாடுவது? மருத்துவமனையில் வேலை செய்வதால் மருத்துவமனை குறித்து எதையும் வெளியில் சொல்லக் கூடாது என்று அமைதியாக இருக்கிறோம். சாதாரண நாள்களாக இருந்தால் வீதியில் இறங்கி போராடுவோம். ஆனால் பெருந்தொற்று காலமான தற்போது நாங்கள் அப்படி செய்தால், `மக்களைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. இவர்களது தேவைக்காக புலம்புகிறார்கள்’ என்று செய்திகள் போடுவார்கள் என்பதால், தரமான பி.பி.இ கிட் வாங்கி கொடுங்கள் என்று மன்றாடி கேட்டுப் பார்க்கிறோம். ஆளுநருக்கும், சுகாதாரத்துறை இயக்குநருக்கும் கடிதம் கொடுத்து ஒரு மாதத்திற்க்கும் மேல் ஆகிறது.

அதன்பிறகு இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரிக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பிலும், அரசு பொது மருத்துவமனைக்கு 56,000 ரூபாய் மதிப்பிலும் நன்கொடை மூலம் பி.பி.இ கிட் வாங்கிக் கொடுத்துவிட்டேன். எவ்வளவு நாளுக்கு நன்கொடை வாங்கிக் கொடுக்க முடியும் ? எத்தனை பேரிடம் நன்கொடை வாங்க முடியும் ? எப்படியோ பிச்சை எடுத்து வாங்கிக் கொடுக்கிறோம். ஆனால் எவ்வளவு நாள்களுக்கு முடியும் ? எங்களுக்கு எந்த நஷ்ட ஈடும் வேண்டாம். நாங்கள் உயிர் பாதுகாப்போடு வேலை செய்வதற்கு தரமான பி.பி.இ கிட் கொடுத்தால் போதும்.

உங்கள் ஊக்கத் தொகையும் வேண்டாம், போனஸும் வேண்டாம். அதற்காக நாங்கள் அழவும் இல்லை. புலம்பவும் இல்லை. வேலை செய்ய வந்திருக்கிறோம். வேலை செய்ய தயாராக இருக்கிறோம். எங்களுக்கு அது பிரச்னை இல்லை. 6 மணி நேரம் கொரோனா பணி செய்யும் செவிலியர்கள் பாதுகாப்புடன் இருக்க தரமான பி.பி.இ கிட் கொடுத்தால் போதும். இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகிறார்கள் என்று தெரியவில்லை. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதென்று தெரியவில்லை.

பாக்கியவதி

ஒரு நாளுக்கு 4 முதல் 5 பேரை இழந்து கொண்டிருக்கிறோம். இதனால் மற்ற செவிலியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அவர்களையும் நாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. என்ன செய்வதென்று எங்களுக்கு தெரியவில்லை. நீங்கள் (பொதுமக்கள்) எங்களுக்கு நஷ்ட ஈடு வாங்கித்தர வேண்டாம். எங்களுகு தரமான பி.பி.இ கிட் வாங்கித் தரும்படி புதுச்சேரி அரசிடம் வலியுறுத்துங்கள் போதும். வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம். நன்றி” என்று முடிகிறது.

அந்த ஆடியோவை வெளியிட்டவர் புதுச்சேரி அரசு செவிலியர் சங்கத்தின் தலைவரும், சுகாதார ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான செவிலிய அதிகாரி பாக்கியவதி. அவரிடம் இது குறித்து பேசினோம் ``அரசு தரமான பி.பி.இ கிட்டை கொடுக்காததால்தான் எங்கள் செவிலியர்கள் அதிகமான கொரோனா தொற்றுக்கு உள்ளாகிறார்கள். கடந்த வருடம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியை கொரோனா மருத்துவமனையாக மாற்றியதில் இருந்தே தரமான பி.பி.இ கிட்டை கேட்டு வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக அரசிடம் நானும் கேட்டு வருகிறேன்.

மே 12-ம் தேதி ஆளுநர் தமிழசைக்கும் கடிதம் அனுப்பினேன். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திராகாந்தி கொரோனா மருத்துவமனையில் சுமார் 300 பேரும், அரசு பொது மருத்துவமனையில் 60 பேரும் கொரோனா பிரிவில் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறோம். ஆனால் எங்களுக்கு எந்தவித உயிர் பாதுகாப்பும் இல்லை. இப்போது கூட எனது சொந்தப் பணத்தில் 250 பி.பி.இ கிட்டை வாங்கிச் செல்கிறேன்.

போராட்டத்திற்கோ, கைதுக்கோ அஞ்சுபவர்கள் இல்லை நாங்கள். ஆனால் போராட்டத்துக்கான சூழல் இதுவல்ல என்பதால் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறோம். ஆனால் அதைக் கூட அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது” என்கிறார்.

அருண்

இதுகுறித்து விளக்கம் கேட்க சுகாதாரத்துறை இயக்குநர் அருணை தொடர்புகொண்டோம். ``பி.பி.இ கிட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இந்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கும் பி.பி.இ கிட்டைத்தான் புதுச்சேரிக்கும் வழங்குகிறது. அதுவே தரமானதுதான். பி.பி.இ கிட் போதுமான அளவுக்கு இருக்கிறது” என்றார்.

முன்களப் பணியாளர்கள் என்ற அறிவிப்பது மட்டுமல்ல மருத்துவப் பணியாளர்களின் உயிர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை.



source https://www.vikatan.com/news/general-news/puducherry-nurse-audio-complaint-of-lack-of-quality-ppe-kit

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக