பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால்,my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
உள்ளரங்க விளையாட்டுகள் (Indoor Games) திறந்த வெளி விளையாட்டுகள் (Outdoor Games) என்பதெல்லாம் என்னுடைய பால்ய வயதுகளில் எங்களுக்கு அறிமுகமில்லாத வார்த்தைகள். ஆனாலும் நாங்கள் இருவகையான விளையாட்டுகளையும் விளையாடுவோம்.
நீங்கள் நினைப்பதுபோல் அல்ல. எங்களுடைய இண்டோர் கேம்ஸ் ராஜா ராணி மந்திரி அல்லது திருடன் போலீஸ் துண்டு சீட்டுகளில் மிருங்கங்களின் பெயர்களோ அல்லது பழங்களின் பெயர்களோ (சிங்கம், புலி, கரடி போன்ற பெயர்கள் எத்தனை பேர் விளையாடுகிறார்களோ அத்தனை வகை மிருகங்கள் பெயர் ஒவ்வொரு ஐந்து சீட்டுகளிலும் எழுதப்படும்) எழுதி அதனை ஜோடி சேர்க்க வேண்டும். அனைத்தையும் ஒன்றாக கலைத்து ஆளுக்கு ஐந்து சீட்டு போடப்படும். உங்கள் கையில் தேவையற்ற சீட்டுகளை மட்டும் வைத்து கொள்ள வேண்டும்.
நீங்கள் உங்களுக்கு முன்னிருப்பவரிடமிருந்து ஒரு சீட்டை அவர் கையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு அடுத்திருப்பவர் உங்களிடமிருந்து தேவை இல்லாத ஒரு சீட்டை எடுத்துக்கொள்வார். இவ்வாறாக யார் முதலில் ஐந்து சீட்டுகளையும் ஒரே பெயர் வரும்படி சேர்த்து விட்டால் அவர் வெற்றியடைந்து விடுவார். அவர் தவிர பிறர் விளையாட்டை தொடர்வார்கள்.
இது போலவே திருடன் போலீஸ் என்ற விளையாட்டில் ராஜா, ராணி, மந்திரி, போலீஸ், திருடன் போன்ற பெயர்கள் ஒவ்வொரு சீட்டிலும் எழுதப்பட்டிருக்கும். திருடன் மற்றும் போலீஸ் கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். அனைத்து சீட்டையும் குலுக்கி போட்ட பிறகு விளையாடுபவர்கள் ஆளுக்கு ஒரு சீட்டை எடுத்து கொள்ள வேண்டும். பின் யாருக்கு போலீஸ் என்று எழுதிய சீட்டு வருகிறதோ அவர் யார் திருடன் என்று கண்டு பிடிக்க வேண்டும். இது தாங்க எங்க உள்ளரங்க விளையாட்டுகள்.
இது தவிர விடுமுறை நாள்களில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து திரைப்படம் காட்டுவது என்பது எங்களுக்கு மிக பிடித்தமான பொழுதுபோக்கு. இதனை நாங்கள் முயன்று பார்க்க என்னுடைய ஒன்றுவிட்ட அண்ணா (அவர் பெயர் சக்திவேல்) ஒருவர் அவருடைய வீட்டில் இது போல ஒருமுறை எங்களுக்கு படம் காட்டினார். அதை பார்த்து என்னுடைய அண்ணா அதே போல எங்கள் வீட்டில் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டோம்.
எங்கள் வீட்டு திண்ணையில் ஒரு ஜன்னல் உண்டு. அந்த ஜன்னலில் உள்ள அனைத்து கதவுகளையும் அடைத்து விட்டு ஒரே கதவை மட்டும் திறந்து வைத்து விடுவோம். ஒரு 1X1 அடி அளவுள்ள அட்டையில் சரியாக சினிமா திரைப்பட ஃப்லிமின் (Movie Film - நீங்கள் டிஜிட்டல் கேமராவிற்கு முந்தைய தலைமுறை என்றால் உங்களுக்கு இது மிக பரிச்சயமானதாக இருக்கும்) அளவுக்கு ஒரு சிறிய செவ்வக அளவு வெட்டியெடுத்து விட்டு அந்த ஜன்னலில் கட்டி தொங்க விட்டுவிடுவோம்.
அட்டை பொருத்திய இடம் தவிர ஜன்னலின் பிற பகுதிகளை துணியாலோ அல்லது அட்டைகளாலோ இறுக்கமாக ஒளி உள்ளே புகா வண்ணம் அடைத்து விடுவோம். வாசலில் மிக சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு மர ஸ்டூலில் வைத்து பின்புறம் ஒரு செங்கல்லை அணைவுக்கு கொடுத்து கண்ணாடியை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வைத்து சூரிய வெளிச்சத்தை அந்த சிறிய ஃபிலிம் பொருத்தும் துளைக்கு நேராக படும்படி வைத்துவிடுவோம்.
உள்ளே பூத கண்ணாடி ஒன்றை (அன்றைய கால கட்டத்தில் இது ஒரு ருபாய் என்று நினைக்கிறன்) அந்த ஓட்டையின் முன்புறம் வைத்து சரியான குவிய தூரத்தில் (Focal Length) வைக்க அந்த வெளிச்ச சதுரம்/செவ்வகம் பெரிது படுத்தப்பட்டு உட்சுவற்றில் தெரியும். அந்த அட்டையில் ஒரு ஃபிலிம் துண்டை பொருத்தி விட்டால் திரையில் அந்த பிரேமில் (Frame) உள்ள காட்சிகள் தெரியும். முதன் முதலாக இந்த சோதனை முயற்சியை செய்கையில் தலை கீழாக காட்சிகள் தெரிய பின்பு பிலிம் துண்டை தலை கீழாக பொருத்தியவுடன் சுவற்றில் காட்சிகள் நேராக தெரிந்தன. எதனால் இது இப்படி என்ற அறிவியல் ரீதியான விளக்கம் எனக்கு புரிய பல காலம் ஆனது. இது திரை அரங்குகளில் இடைவேளை நேரத்தில் காட்டப்படும் விளம்பர ஸ்லைடுகள் (Advertisement Slides) போன்ற உத்திதான்.
என்னுடைய அண்ணாவுக்கு இதில் கொஞ்சம் ஆர்வமும் அறிவும் அதிகம் என்பதால் இந்த விஷயத்தை பெரும்பாலும் அவனே கையாளுவான். ஒரு விநாடிக்கு ஏழு பிரேம்களை ஓட்டினால் திரைப்படம் போலவே இருக்கும் என்று அறிந்து கொண்டு எப்படியாவது ஒரு திரைப்பட ப்ரொஜெக்டரை உருவாக்கிட வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறோம். இது போன்ற முயற்சிகளை முழுக்க என் அண்ணன் செய்ய அதற்கு தேவையான உதவிகளை நான் செய்வேன்.
இங்கே இன்னொரு முக்கியமான விஷயம் அந்த கண்ணாடியிலிருந்து வரும் சூரிய ஒளி பூமியின் சுழற்சிக்கேற்ப நகரும். ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை அந்த முகம் பார்க்கும் கண்ணாடியை நாம் சரி செய்து (Adjust) நகர்த்த வேண்டும். பிற்பாடு பூத கண்ணாடியின் (Lens) உருப்பெருக்க விகிதம் மிக குறைவாக இருந்ததினால் (ஒரு ருபாய் லென்ஸில் அவ்வளவுதான் வரும்) விலை அதிகமான லென்ஸை வாங்குவதற்கான பொருளாதார நெருக்கடி (ஹீ ஹீ!!) காரணமாக வேறு ஒரு விஷயத்தை என்னுடைய அண்ணா கண்டு பிடித்தான்.
அது அந்தக் காலத்தில் எடிசன் கண்டுபிடித்த பியூஸ் (Fuse) போன குண்டு பல்பின் மேற்பகுதியில் உள்ள அலுமினியம் ஸீலிங்கை (Ceiling) லாகவமாக உடைத்து நீக்கி விட்டு உள்ளிருக்கும் டங்ஸ்டன் மௌண்டை (Tungston Mount) வெளியில் எடுத்து விட்டால் அது ஒரு கண்ணாடி குடுவை போன்று இருக்கும். அதனுள் சுத்தமான நீரை நிரப்பி வைத்து லென்ஸிற்குப் பதிலாக வைக்க உருப்பெருக்கம் (Magnification) மிக பெரியதாக இருந்தது. இன்று போல் ஹை டெபினிஷன் (HD Quality) தெளிவில் படம் தெரியாவிட்டாலும் அந்தக் கால கட்டத்தில் ஓரளவு பெரிதாக காட்சிகள் தெரியும்.
பின்பு அந்த கண்ணாடி பல்பு லென்சினுள் தலைப்பிரட்டை (தவளையின் இரண்டாம் வளர்ச்சி நிலை) போன்றவற்றை விட்டு திரையில் அது அங்கும் இங்கும் நகருவதை குதூகலத்துடன் கண்டு மகிழ்வோம். அது தவிர பல வண்ண பேனா மை, பெரும்பாலும் ஊதா மற்றும் சிவப்பு வண்ணம் (Blue or Red Ink) சொட்டு சொட்டாக உள்ளே விட அதனால் ஏற்படும் வண்ண வடிவங்களை (வெடித்து சிதறும் எரிமலை குழம்பு போலவோ அல்லது அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் காளான் வெடிப்பு போன்றோ தெரியும்) பார்ப்பது எதோ ஒரு பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய பெருமிதம் உள்ளுக்குள் இருக்கும்.
வெண்திரைக்காக எங்கள் அப்பாவினுடைய வேட்டியையும் அதன் முன் திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன் தானாக உயரும் திரைக்கு எங்கள் அம்மாவுடைய சேலையை கட்டி இரண்டு அல்லது மூன்று இடத்தில கீழே நூலை கட்டி திரைக்கு பின்னிருந்து எங்களுடைய திரைப்பட காட்சி தொடங்குவதற்கு முன் நான் அதை உயர்த்துவேன். ஒரு திரையரங்கத்தில் என்ன மாதிரியான சூழ்நிலை இருக்குமோ அது போன்ற கட்டமைப்பை (???) உருவாக்க முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டோம். சைக்கிள் மணியை அடித்து திரைப்பட காட்சிக்கு முன்னதாக ஒலிக்கும் மணியாக நினைத்து கொள்வோம்.
எங்களுடைய பார்வையாளர்களாக எங்கள் வீட்டின் அருகிலிருக்கும் பிள்ளைகள் வருவார்கள். காட்சி என்னவோ ஐந்து அல்லது பத்து நிமிடங்கள்தான், ஆனால் அதற்கான முன்னேற்பாடுகள் மிக அதிகம். மொத்தமே பத்து அல்லது இருபது ஃபிலிம் துண்டுகள்தான் அதில் காட்ட முடியும். அதிர்ஷ்டவசமாக சிவாஜி அல்லது MGR போன்றோர் நாங்கள் வாங்கிய பிலிம் துண்டில் இருந்தால் அவ்வளவுதான். எதோ ஒரு முழு சிவாஜி அல்லது MGR திரைப்படத்தை திரையிட்ட சந்தோஷம் ஏற்படும்.
அந்தக் காலத்தில் எங்கள் ஊருக்கு ஒரு சிறிய வண்டியில் ஒரு சிறிய திரையரங்கம் போன்ற அமைப்பில் ஐந்து நிமிட மௌன படம் திரையிடுவார்கள். கிட்டத்தட்ட பயாஸ்கொப் (Bioscope) போன்றதுதான். உள்ளே சென்று அமர ஒரு சிறிய கதவு இருக்கும். உள்ளே ஒரு சமயத்தில் ஐந்துபேர் அமரலாம். கட்டணம் பத்து பைசா. அது எது போன்ற ப்ரொஜெக்டர் என்பதெல்லாம் தெரியாது. உள்ளே சென்றால் ஒரு 21 இன்ச் தொலைக்காட்சி அளவில் படம் தெரியும். ஓரளவுதான் தெளிவாக இருக்கும்.
"பின்ன என்ன பத்து காசுக்கு 4K கிளாரிட்டியிலயா படம் காட்டுவாங்க. அட போப்பா நீ சும்மா காமெடிய பண்ணிக்கிட்டு..." என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. பெரும்பாலும் ஏதேனும் MGR நம்பியார் நடித்த கத்திச்சண்டை காட்சிதான் இருக்கும். பலமுறை மீண்டும் மீண்டும் அந்த மினி திரைப்படத்தை பார்த்திருக்கிறேன்.
என்னுடைய அம்மா ஒருமுறை, "ஏன்டா நீங்க பாட்டுக்கு உள்ள போய் ஒக்காந்துக்கிறீங்களே. அவன் அந்த வண்டியோட உங்களையும் தள்ளிக்கிட்டு போய்ட்டா என்னடா பண்றது..." என்று ஒரு சிறிய கிலி ஏற்படுத்தினார். அன்றைய காலகட்டத்தில் பிள்ளை பிடிப்பவர்கள் என்ற புரளி மிக பிரபலமாக இருந்தது. அது போல ஒன்றிரண்டு சம்பவங்களும் நடந்ததாக செய்தி தாள்களிலும் வந்திருந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த மினி திரையரங்க வண்டியில் அது போன்ற சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை.
இன்றைய தலைமுறை குழந்தைகள் உள், வெளி விளையாட்டுகள் அனைத்தையும் கைபேசியிலேயே விளையாடுகிறார்கள். கண்களாலும் கை விரல்களால் மட்டுமே விளையாடப்படும் அது போன்ற விளையாட்டுக்களால் எந்த விதமான பயன்களும் இல்லை. மிக மிக இள வயதிலேயே பார்வை குறைபாடுகள் ஏற்பட்டு அதற்காக பார்வை நிவர்த்தி கண்ணாடிகளை (Power Eye Glasses) அணியும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
"தேவைகளே புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான தாய்..." (Necessity Is The Mother Of Invention) என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. அன்றைய கால கட்டத்தில் எங்களுடைய தேவைக்கான தீர்வுகளை எங்கள் வீட்டிலிருந்த பொருள்களை வைத்து எப்படி நிறைவு செய்யலாம் என்பதை நாங்களே கற்றுக்கொண்டோம். அது போன்ற மனநிலை இன்றைய குழந்தைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
எங்கள் கிராமத்தில் என்னுடைய பால்ய வயதுகளில் விளையாடிய புற விளையாட்டுகள் (Outdoor Games) பற்றி வேறொரு பதிவில் பேசலாம் என நினைக்கிறன்.
- ஆனந்தகுமார் முத்துசாமி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/nostalgic-memories-about-film-screening-techniques-from-childhood
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக