Ad

செவ்வாய், 18 மே, 2021

`கலெக்டர் ஆபீஸ் வரை செலவு இருக்கு’ - ரேஷன் அட்டை வழங்க வெளிப்படையாக லஞ்சம் கேட்ட அதிகாரி சஸ்பெண்டு

கொரோனா நிவாரண நிதியாக, ரேசன் அட்டை வைத்திருக்கும் குடும்பததுக்கு ரூ2,000 நிவாரணத் தொகை தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவில், கொரோனா நிவாரண நிதி பெறுவதற்காக, ரேசன் அட்டை இல்லாதவர்கள், புதிய அட்டை வாங்க, தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துவருகின்றனர். ரேசன் அட்டை கேட்டு விண்ணப்பிப்போரிடம் தாலுகா அலுவலக அதிகாரிகள், ஒரு ரேசன் அட்டைக்கு ரூ 500 வீதம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.

Also Read: திண்டுக்கல்: `உங்க தோட்டத்தில தங்கப்புதையல் இருக்கு’ - ரூ.22 லட்சம், 45 பவுன் நகை சுருட்டிய ஜோதிடர்

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர், குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் சென்று, அங்கிருக்கும் அதிகாரிகளிடம், ரூ 500 மக்களிடம் லஞ்சம் கேட்டது தொடர்பாக விசாரித்துள்ளார். இது தொடர்பாக அவர் எடுத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

அந்த வீடியோவில், இந்திய கம்யூனிஸ் கட்சி நிர்வாகி, `அரசாங்கம் காசு வாங்கச் சொல்லியிருக்காங்களா? 500 ரூபாய்க்கு ரசீது கொடுங்க.’ என்கிறார். அதற்கு, குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அதிகாரி சரவணன், `செலவுக்கு தான் வாங்குறோம். கலெக்டர் ஆபிஸ் வரை செலவு இருக்கு. கொடுக்குறவுங்க கிட்ட தான் வாங்குறோம்’ என வெளிப்படையாகவே கூறுகிறார்.

குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அதிகாரி சரவணன்

அரசு அதிகாரி ஒருவர், லஞ்சம் வாங்குவதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது மட்டுமல்லாமல், அதனை நியாயப்படுத்திப் பேசியது, திண்டுக்கல் மாவட்ட மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது தொடர்பான தகவல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அதனையடுத்து, குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் என்ன நடக்கிறது என விசாரிக்க, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஆட்சியர். விசாரணை முடிவில், வட்ட வழங்கல் அதிகாரி சரவணன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.



source https://www.vikatan.com/news/general-news/circular-supply-officer-suspended-for-bribing-to-issue-ration-card-after-video-goed-viral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக