கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் நாட்டையே அவல நிலைக்கு தள்ளியுள்ளது. சிகிச்சையளிக்க போதுமான படுக்கை வசதிகள் இல்லாதது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தகனம் செய்ய இடமில்லாதது என பல்வேறு நெருக்கடிகளில் சந்தித்து வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்த வரையில் பாதிப்புகளானது சற்று மோசமாகவே இருந்து வருகிறது. கான்பூர், உன்னாவ் உள்ளிட்ட உத்தரப்பிரதேசத்தின் பல நகரங்களிலிருந்து கொரோனாவால் பலியாவோரின் உடல்களை முறைப்படி தகனம் செய்யாமல், இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ்களில் கொண்டுவரப்பட்டு கங்கை நதிகளில் வீசப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்தது. இச்சம்பவம் குறித்து தொடர்ந்து ஊடகங்களிலும், இணையத்திலும் பேசப்பட்டு வரும் நிலையில் உ.பி. அரசாங்கம் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது ஆளும் பா.ஜ.க. அரசின் தலைவர்கள் சிலரும் மாநிலத்தின் கொரோனா நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் சிதாபூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், அங்குள்ள சிகிச்சை மையங்கள் எதுவும் செயல்படாமல் பூட்டுப்போட்ட நிலையிலேயே இருந்து வருகிறது, இது குறித்து உத்தரப்பிரதேசம் மாநிலம், சீத்தாபூர் தொகுதியின் ஆளும் பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் ரத்தோரிடம் பத்திரிகையாளர்கள், ‘தேவைப்படும் பட்சத்தில் ஏன் சிகிச்சை மையங்கள் இன்னும் மூடிக்கிடக்கின்றன’ என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் எம்.எல்.ஏக்கள். எங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. ஒரு எம்.எ.ஏ. நினைப்பதை அப்படியே பேச முடியுமா? எங்கள் நிலை எப்படி இருக்கிறது என்றால், இதுகுறித்து அதிகம் பேசினால், நாங்களும் தேசத்துரோக வழக்கை சந்திக்க வேண்டிவரும். நான் எனது உணர்வுகளை முன்பே தெரிவித்திருக்கிறேன். இதுபற்றி உங்களிடம் நான் இனி பேசாமல் இருப்பதே எனக்கு நல்லது” என்றார். பிறகு, கொரோனா அதிகரித்து வரும் சூழலில் ஏன் இன்னும் உ.பி.-யில் இன்னும் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை என்று கேள்வியெழுப்பபியதற்கு, ``எல்லாம் சரியான வழியிலேயே நடந்துகொண்டு வருகிறது. என்னால், அரசாங்கம் மேற்கொள்ளும் செயல்களை சரியானது என்று வழிமொழிய மட்டுமே முடியும்” என்று தன் உள்ளுணர்வை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சொந்த கட்சியைக் குறித்த ராகேஷ் ரத்தோரின் சர்ச்சைக் கருத்துகள் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே கொரோனா முதல் அலை சமயத்தில், மோடியின் வேண்டுகோளை விமர்சித்து அவர் பேசிய ஆடியோ ஊடகங்களில் வைரல் ஆனது. அதில், "பிரதமர் மோடி மக்களை கைகளை தட்ட சொல்வதும், மணி அடிக்க சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்று. கைகளை தட்டுவதன் மூலமாக கொரோனாவை விரட்டி விட முடியுமா? உங்களை போன்றவர்கள் கைகளை தட்டினால் கொரோனா அகன்று விடுமா?" என்று பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/india/bjp-mla-says-he-may-face-cases-if-he-talks-about-corona-situation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக