பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ள தி.மு.க, நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கியப் பதவியை கொடுத்து வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனிச்செயலாளர்களில் ஒருவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார். உமாநாத் யாரென்று தெரிந்து கொள்ள பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிளாஷ்பேக் செல்ல வேண்டும்.
Also Read: 'நடிகர் சூர்யா, நடிகர் சிவகுமார், சகாயம் ஐ.ஏ.எஸ்'- முதல்வர் ஸ்டாலினுக்கு வைத்த மூன்று கோரிக்கைகள்!
2001-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியடைந்தார். 2010-ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தார் உமாநாத். அப்போது ஏராளமான நலத்திட்டங்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதால் கோவை மக்களிடம் அவர் நல்ல பெயரை எடுத்தார்.
ஊகருமத்தம்பட்டி அருகே விராலிகாடு பகுதியில் உள்ள மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா கேட்டு போராடிக் கொண்டிருந்தனர். 2011-ம் ஆண்டு உமாநாத் தான், அங்குள்ள 80 மக்களுக்கு பட்டா வழங்கினார். மகிழ்ச்சியில் மக்கள், அந்த இடத்துக்கு ‘கலெக்டர் உமாநாத் காலனி’ என்று பெயர் வைத்தனர். இப்போதும் அந்தப் பகுதி அப்படிதான் அழைக்கப்படுகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் வருவது தெரிந்தால், அவர்களை படியேற விடாமல், அவராகவே நேரடியாக சென்று கோரிக்கையை கேட்பார்.
மாற்றுத்திறனாளிகள் என்றில்லை, அவரைச் சந்திக்க எவ்வளவு மக்கள் இருந்தாலும் சலிக்காமல் அவராகவே சென்று பேசுவார். கார்ப்பரேட்களுக்கு எதிராகவும் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார். அரசின் உத்தரவுக்கு கட்டுப்படாததால், அவிநாசி சாலையில் கட்டப்பட்டுவந்த மென்பொருள் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்தார்.
2010 -ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் வேலுமணி அப்போதும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ தான். அவருடைய பேரூர் தொகுதியில் தண்ணீர் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். செய்து கொடுக்கிறேன் என்று உறுதியளித்தும், வேலுமணி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். அதற்கெல்லாம் அவர் அசராமல் தனது வேலையை செய்தார். பெரும்பாலும் அமைதியாக இருக்கும் உமாநாத் எந்த இடமாக இருந்தாலும் வெளிப்படையாக தனது கருத்துகளை பதிவு செய்வார்.
2010-ம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி பாராட்டைப் பெற்றார். அதில் ஆத்திரமடைந்துதான், பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு அவரை வேறு பதவிக்கு மாற்றியது. மீண்டும் முக்கிய பதவிக்கு வந்திருப்பதால் உமாநாத்திடம் சிறப்பான நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.
source https://www.vikatan.com/news/tamilnadu/journey-of-chief-minister-stalins-secretary-umanath-ias
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக