Ad

வெள்ளி, 14 மே, 2021

நெல்லை: `கொரோனா உயிரிழப்புகளைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை!’ - அமைச்சர் ஐ.பெரியசாமி

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்

கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவம், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பு விபரம் மற்றும் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் உள்ளிட்டவை பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோய் பாதித்தவர்கள், கோவிட் பாதுகாப்பு மையத்தில் உள்ளவர்களிடம் சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் பேசினார்கள்.

ஆலோசனைக் கூட்டம்

சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, அவர்களுக்கு, வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் அங்கு உள்ள குறைபாடுகள் குறித்து விளக்கமாகக் கேட்டார்கள். நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறதா என்பதையும் கேட்டறிந்தனர்.

பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களில் ஒருவர் கூட கொரோனா நோயினால் உயிரிழக்கக் கூடாது என்கிற உயரிய நோக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களை அனுப்பி நேரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஆலோசனைக் கூட்டம்

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருங்காலத்தில் தேவைப்படும் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்யவும் பரிசோதனைகளை விரிவுபடுத்தவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோயாளிகளுக்குச் சிறந்த முறையில் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்குத் தாமதமின்றி சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . கொரோனாவின் தாக்கத்தைக் குறைத்து நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக நெல்லை மாவட்டத்தை மாற்றும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார். .

Also Read: நெல்லை: `கொரோனா காலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு!' - ஆர்.டி.ஐ தகவல்

தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ”நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 8 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. கேரளாவில் இருந்து கிடைத்த 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நிறுத்தப்பட்ட நிலையில் தென்மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனை வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், நோயின் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் தயாரிக்கும் ஆக்ஸிஜனை மருத்துவம் அல்லாத வேறு பயன்பாட்டுக்குச் செலவு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு மையம்

ஆக்ஸிஜன் தேவை அதிகமாக உள்ள காரணத்தால் எங்கிருந்தெல்லாம் ஆக்சிஜன் பெற முடியுமோ அங்கிருந்து கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கேரளாவில் இருந்து கிடைத்துவந்த ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டது தொடர்பாக இரண்டு மாநில அரசுகளும் பேசி முடிவு செய்யும்” என்றார். .

கொரோனா நோயாளிக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தில் 200 மருத்துவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். பின்னர். ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு மற்றும் சபாநாயகர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



source https://www.vikatan.com/news/general-news/ministers-inspection-on-covid-prevention-steps-in-nellai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக