Ad

வெள்ளி, 21 மே, 2021

Covid Questions: தற்போது போடப்படும் தடுப்பூசிகள் உருமாறும் வைரஸ்களுக்கு எதிராகவும் வேலை செய்யுமா?

Covid Questions: கொரோனா தொற்றானது முற்றிலும் அழியாது. நம்முடன்தான் இருக்கப்போகிறது என்று கேள்விப்படுகிறோம். அப்படியானால் அடுத்தடுத்த வருடங்களிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா? முதல்முறை போட்ட அதே தடுப்பூசியைத்தான் போட வேண்டியிருக்குமா?

பதில் சொல்கிறார் வாஷிங்டனின் `சென்டர் ஃபார் டிசீஸ் டைனமிக்ஸ், எகனாமிக்ஸ் அண்ட் பாலிசி’ அமைப்பின் இயக்குநரும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் துறையில் விரிவுரையாளருமான ரமணன் லட்சுமி நாராயணன்.

``உங்கள் சந்தேகம் சரியானதே... இனி வரும் காலங்களில் வருடந்தோறும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நிலையை நிச்சயம் எதிர்பார்க்கலாம். அப்படி வரும்பட்சத்தில் வேறு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளலாம்".

ரமணன் லட்சுமிநாராயணன்

கொரோனாவுக்கு எதிராக இப்போது நாம் போட்டுக்கொள்கிற தடுப்பூசியின் செயல்திறன் எத்தனை நாள்களுக்கு நீடிக்கும்?

``இப்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் நமக்கு அறிமுகமாகி சில மாதங்களே ஆவதால், அவற்றின் செயல்திறன் எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பதற்கான முழு ஆதாரங்கள் இல்லை. அதனால் இப்போது அதைப் பற்றி உறுதியாகச் சொல்வதற்கில்லை".

கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிக்கொண்டே வருகிறது என்கிறார்கள். தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் உருமாறும் வைரஸ்களுக்கு எதிராகவும் வேலை செய்யுமா? உருமாறிய கொரோனா வைரஸ்களை இனிமேலும் எதிர்பார்க்கலாமா?

``தற்போது உபயோகத்தில் உள்ள தடுப்பூசிகள் சிலவகை வைரஸ் பிறழ்வுகளுக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் எல்லா பிறழ்வுகளுக்கும் எதிராக அல்ல. இனி வரும் காலத்தில் வைரஸின் பிறழ்வுகள் எப்படி இருக்கும் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் நிச்சயம் இன்னும் நிறைய பிறழ்வுகளை எதிர்பார்க்கலாம்".

கொரோனா தடுப்பூசி

நோய் எதிர்ப்புத்திறனில் பிரச்னை உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படியென்றால் என்ன?

``சுகாதார வல்லுநர்கள் குறிப்பிடுவது Immuno Compromised அல்லது Immuno Suppressed என்றழைக்கப்படும் பிரிவினரை. உதாரணம்... சமீபத்தில் புற்றுநோய் சிகிச்சை மேற்கொண்டவர்கள் அல்லது உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள். இவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மருத்துவ ஆலோசனையின்றி தடுப்பூசி எடுத்துக்கொள்ளக்கூடாது".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/will-the-current-vaccines-remain-efficient-against-newly-mutating-coronavirus-variants

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக