Ad

ஞாயிறு, 9 மே, 2021

காரைக்கால்: `விவசாய மானியங்களில் தலைவிரித்தாடும் ஊழல்!’ - துணைநிலை ஆளுநருக்கு பறந்த புகார்

விவசாய மானியங்கள் பெறும் செயல்முறையில் ஊழல் மற்றும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் துணைநிலை ஆளுநருக்கு புகார் அனுப்பியுள்ளது.

ஆனந்தகுமார்

இதுபற்றி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க மாநில தலைவர் டாக்டர் ஆனந்தகுமாரிடம் பேசினோம். "நெல் அறுவடைக்கு பிறகு அந்த தரிசு நிலத்தில் காய்கறி மற்றும் எள் பயிர்கள்  சாகுபடிச்  செய்ய விவசாயிகளுக்கு புதுச்சேரி அரசின் வேளாண்துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது.

அந்த மானியம் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.  எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் மட்டும் கிராம நிர்வாக அலுவலர் சான்று கேட்டு கட்டாயப்படுத்தபடுகிறது. ஆனால், காய்கறி பயிர் செய்துள்ள  விவசாயிகளிடம்  வருவாய்த்துறையின்  கிராம நிர்வாக அலுவலர் சான்று கேட்கப்படவில்லை. அரசியல் பின்னணிக் காரணமாக இந்த பாரபட்சம் என்று கருதப்படுகிறது.

அண்மையில் வீரியம் அடைந்த கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க விதிக்கப்பட்ட கடுமையான தடைகளை  அமல்படுத்தும் பணியில் தற்போது வருவாய்த்துறையினர்  ஈடுபட்டு வருவதால், எள் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழை எளிதாக பெற இயலவில்லை. அதை பெற பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதாகவும், மேலும் லஞ்சம் கொடுத்தால்தான் அந்த சான்று விரைவில்  கிடைக்கும் நிலை உள்ளதாகவும்  விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

ஊழல்

மானிய விண்ணப்பப்  படிவத்தில் நில ஆவண சான்று அல்லது   வருவாய்த்துறையின் சாகுபடி சான்று அல்லது அடங்கல் ஆகியவற்றின் சுயசான்று ஒப்பமிட்ட நகல்களைப் பூர்த்தி செய்து  விண்ணப்பத்துடன் இணைத்துத் தரவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வருவாய்த் துறையின் சாகுபடி சான்றை மட்டும் கட்டாயப்படுத்துவது தவறான உள்நோக்கத்தையே காட்டுகிறது.

 மேலும், விவசாயத்துறையின் விரிவாக்கப் பணியாளரும்  நிலத்தை பார்வையிட்டு எள் சாகுபடி செய்ததை உறுதி செய்துள்ளார். பிறகு எதற்கு வருவாய்த் துறையின் சாகுபடி சான்று? விவசாயத் துறையின் விரிவாக்கப் பணியாளர்களின் நன்னடத்தை அத்துறையின்  அதிகாரிகளுக்கே சந்தேகமா?

எனவே, ஒரு ஏக்கருக்கு 6,500 ரூபாய் மானியம் பெறும் காய்கறி விவசாயிக்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று தேவையில்லை என்றும், ஏக்கருக்கு ரூ.2,000 மட்டுமே  மானியமாகப் பெறும் எள் விவசாயிக்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று கட்டாயம் என்றும், அதை விவசாயிகள் பெற  வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை வேளாண்துறை அதிகாரிகள் மறைமுகமாக ஊக்குவிப்பது ஒரு ஊழல்.

வேளாண் விரிவாக்கப் பணியாளர் ஆய்வு செய்து  கொடுத்த  அறிக்கையை வேளாண் அலுவலர்  பார்வையிட்டு சாகுபடி சான்று கொடுத்தாலே போதும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ஒரு மானியம் பெற இரு துறைகளுக்கு அலைக்கழிக்கக்கூடாது என்பது நியாயமானதே. தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்றிவிட்டு, தவறு செய்யாத விவசாயிகளை தண்டிப்பது கொடுமை. இந்த நிலை மாற வேண்டும்.

எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி பற்றாக்குறை காரணமாக சமையல் எண்ணெயின் விலை கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நல்லெண்ணெய் தயாரிக்க தேவைப்படும் எள் சாகுபடி செய்யும் விவசாயிகளை வேளாண்துறை மானியம் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். மாறாக, முட்டுக்கட்டை போடுகிறது. எனவே, துணை நிலை ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் புகார் கொடுத்துள்ளது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/karaikal-corruption-in-agricultural-subsidies-indian-anti-corruption-movement-complains-to-governor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக