Ad

ஞாயிறு, 9 மே, 2021

ஊதா, மஞ்சள், ஆரஞ்சு காலிஃப்ளவர்கள்... உடலுக்கு ஆரோக்கியமானவையா?

மொறுமொறு பக்கோடா சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. காலிஃப்ளவர் பக்கோடா என்றால் சொல்லவா வேண்டும்..! காலிஃப்ளவரின் உள்ளிருக்கும் புழுக்களை நீக்கி சுத்தமாக்கிவிட்டுப் பயன்படுத்துவதற்குள் போதும் போதுமென ஆகிவிடுகிறது. ஆனாலும், சுவையால் காலிஃப்ளவர் நம்மை ஈர்த்துவிடுகிறது. காலிஃப்ளவர் குடும்பத்தைச் சேர்ந்த புரொக்கோலிக்கும் மவுசு அதிகம்தான். விலை அதிகமாக இருந்தாலும் விரும்பி வாங்கிச் சாப்பிடும் காய்கறிகள் பட்டியலில் இவை முக்கியப் பங்கை வகிக்கின்றன.

Cauliflower

சமீபகாலமாக மார்க்கெட்டுகளில் ஊதா, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் காலிஃப்ளவர் மற்றும் புரொக்கோலிகளைக் காண முடிகிறது. இப்படி வித்தியாசமான நிறங்களில் பார்க்கும்போது குழந்தைகளுக்கும் இவற்றைப் பிடித்துப் போய்விடுகிறது. மார்க்கெட்டிலிருந்து வாங்குவதற்கு ஆசை ஏற்படும் நேரத்தில் இவற்றால் உடலுக்கு ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டுவிடுமோ என்ற பீதியும் எழுகிறது. அதே வேளை, வேறுவேறு நிறங்களில் கீரை வகைகள் இருக்கின்றன; ஒவ்வொன்றும் தனித்தனி மகத்துவங்களுடன் அமையப்பெற்று உடலில் சத்துகளைச் சேர்க்கின்றன. ஒருவேளை கலர் காலிஃப்ளவர் புரொக்கோலிகளுக்கும் அதைப்போலவே தனித்தனி மகத்துவங்கள் இருக்குமோ என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து அறிய டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்பு கொண்டோம்.

``ஒரே குடும்ப வகையைச் சேர்ந்த காலிஃப்ளவர் மற்றும் புரொக்கோலி குளிர்ப் பிரதேசங்களில் அதிகளவில் விளைபவை. இயற்கையாக விளையும் காலிஃப்ளவரும் புரொக்கோலியும் பழுப்பு நிறத்திலும் பச்சை நிறத்திலும் இருக்கும். தற்போது மார்க்கெட்டுகளில் கிடைக்கும் காலிஃப்ளவர்கள் பளீர் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. பொதுவாக, காலிஃப்ளவர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இப்போது அவை பளீர் வெள்ளை நிறத்தில் இருப்பதைப் பார்க்கும்போது அவற்றில் ரசாயனங்கள் கலந்திருப்பதையே காட்டுகின்றன.

Cauliflower

Also Read: கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டால் இறால், புரொக்கோலி சாப்பிடக்கூடாதா? #ExpertExplains

இயற்கையாக விளைந்த காலிஃப்ளவர்களில் புழுக்கள் அதிகமாக இருக்கும். ஆனால், இப்போது கிடைக்கும் பெரும்பாலான காலிஃப்ளவர்களில் புழுக்கள் இருப்பதே இல்லை. காலிஃப்ளவர் குடும்பத்தைச் சேர்ந்த முட்டைக்கோஸில் இயற்கையாகவே கலர் வெரைட்டிகள் இருக்கின்றன. குறிப்பாக, பிங்க் கலர் முட்டைக்கோஸ் உடலுக்கு மிக நல்லது. வெள்ளை நிற வெங்காயத்துக்கு கேன்சர் செல்களுக்கு எதிராகப் போராடும் குணாதிசயம் உண்டு. அதைப்போல குடை மிளகாய்களிலும் கலர் வெரைட்டிகள் இருக்கின்றன. அதனால் மருந்து ஊசிகள் போடுவதாலும் ஜீன்களில் மாற்றம் செய்வதாலும்தான் வேறு வேறு நிறங்களில் காய்கறிகள் கிடைக்கின்றன என்று கூறிவிட முடியாது" எனத் தொடங்கி விரிவான விளக்கமளித்தார் அவர்.

``இயற்கையாக விளையும் காலிஃப்ளவரிலும் புரொக்கோலியிலும் பீட்டா கரோட்டின்கள் அதிக அளவில் இருக்கின்றன. அதனால் உடலில் நார்ச்சத்து அதிகரிக்கும். காலிஃப்ளவரை வேகவைத்துச் சாப்பிடுவதைவிட ஆவிகாட்டி அதன்பின் உள்ளிருக்கும் புழுக்களை நீக்கிவிட்டு சமையலுக்குப் பயன்படுத்தலாம். வேகவைக்கும் போதும் சத்துகள் எல்லாம் தண்ணீரிலேயே இறங்கி வீணாகிவிடுகிறது. ஒருவேளை, தண்ணீரில் அதிக நேரம் வேக வைத்துவிட்டால் அந்தத் தண்ணீரை வீணாக்காமல் அதையும் சமையலில் சேர்த்து உபயோகிக்கலாம். அப்படிச் செய்தால் சத்துகள் வீணாகாது.

டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி

காலிஃப்ளவரை பக்கோடாவாகச் செய்து சாப்பிடுவதைவிட சாலட்டாகச் சாப்பிட்டால் சத்துகள் உள்ளபடியே உடலுக்குக் கிடைக்கும்.
புரொக்கோலியைச் சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் லேசாக வேகவைத்து அதனுடன் வெங்காயத்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து சாலட்டாகச் சாப்பிட்டால் அருமையாக இருக்கும். புரொக்கோலியில் அதிகளவில் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி, பொட்டாசியம், தாது உப்புகள், புரதச் சத்துகளும் இருக்கின்றன.

அதே வேளை குறைவான கலோரிகளே இதில் உள்ளன. அதனால், எல்லா வயதினரும் தாராளமாக புரொக்கோலி எடுத்துக் கொள்ளலாம். புரொக்கோலிக்கும் காலி ஃப்ளவருக்கும் கேன்சர் செல்களை அழிக்கும் திறன் உண்டு. குடலில் ஏற்படும் கேன்சரை இது வராமல் தடுக்கும். மேலும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க இதிலிருக்கும் ஃபோலிக் ஆசிட் உதவி செய்யும். கருவுற்றிருக்கும் தாய்மார்கள் புரொக்கோலி எடுத்துக் கொள்வது மிக நல்லது. புரொக்கோலியில் பொட்டாசியம் இருப்பதால் தைராய்டு மற்றும் கிட்னி நோயாளிகள் இவற்றை அதிகளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

Cauliflower and Broccoli

Also Read: `புற்றுநோயைத் தடுக்குமா புரொக்கோலி?' - பலன்கள் முதல் ரெசிபி வரை... பகிரும் நிபுணர்கள்!

மேலும், இந்தியாவை விட வெளிநாடுகளில்தான் பல்வேறு நிறங்களில் காய்கறிகள் சந்தைகளுக்கு வருகின்றன. இவற்றை முறையாக ஆராய்ந்தால்தான் இதன் நன்மை தீமைகளை முழுமையாகக் கண்டறிய முடியும். மக்கள் தொகை அதிகரிக்க அதற்கு ஏற்றாற்போல விளைச்சல் இருந்தால்தான் சமநிலையில் மக்களுக்கு உணவை அளிக்க முடிகிறது. அதனால் மரபணுக்களில் மாற்றம் செய்யப்பட்டு சந்தைகளில் கிடைக்கும் காய்கறிகளை முழுவதுமாகத் தவிர்த்துவிடவும் முடியாது" என்கிறார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி.



source https://www.vikatan.com/health/food/dietician-explains-about-various-types-of-cauliflower-and-broccoli

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக