Ad

வியாழன், 27 மே, 2021

பாலியல் சர்ச்சைப் பள்ளி மீதான தமிழக அரசின் நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும்?

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் பாலியல் வன்கொடுமை புகாரில் கைதானதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான மாணவிகள் புகார் தெரிவிக்க அரசு எண் ஒன்றை அறிவித்தது. அப்படி அறிவித்த ஒரே நாளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது பல மாணவிகள் பாலியல் வன்கொடுமைப் புகார்களைத் தெரிவித்துள்ளனர். 96 படத்தின் நாயகி கௌரி ஜி கிஷன் அடையாற்றில் இருக்கும் தனியார்ப் பள்ளியில் படித்த போது தனக்கும் பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன என்றும் பாடகி சின்மயி தன் பள்ளியின் சமஸ்கிருத ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். இயக்குநர் ராம் குமார் தான் இயக்கிய ராட்சசன் படத்தில் இருக்கும் இன்பராஜ் கதாபாத்திரம் கற்பனை அல்ல. உண்மைகளின் அடிப்படையிலேயே அதை உருவாக்கினேன் என்று கூறியுள்ளார். தடகள பயிற்சியாளர் நாகராஜன், தமிழக அரசால் சிறந்த பயிற்சியாளர் எனப் பாராட்டப்பட்டவர். இவர் மீது தற்போது பல வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

தனியார் பள்ளி குளத்தில் மூழ்கி மாணவன் பலி;பெற்றோர் முற்றுகை!

மாணவிகளுக்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் காலங்காலமாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அதற்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமை செய்தவரைக் கைது செய்வதோடு அரசின் நடவடிக்கைகளை இனி நிறுத்திக் கொள்ளாமல் அதற்குக் காரணியாக இருந்த கல்வி மற்றும் இதர நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

Also Read: மாணவர் இறப்பு முதல் பாலியல் புகார் வரை - பத்ம சேஷாத்திரி பள்ளி மீதான தொடர் சர்ச்சைகள்!

பாலியல் வன்கொடுமைகள் நிகழும் பள்ளிகள் மீதான தமிழக அரசின் நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கல்வியாளர், எழுத்தாளர் ஆயிஷா நடராஜனிடம் பேசினோம் “ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருவது மிகுந்த வேதனையைத் தருகிறது. ஒரு பள்ளியில் மாணவிகள் படிக்கிறார்களே என்றாலே அவர்களின் அனைத்து விதமான பாதுகாப்பிற்கும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தைத்தான் சாரும். அவர்களை நம்பித்தான் பெற்றோர் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாணவிகள் எழுப்பும் வன்கொடுமை புகார்களைப் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது நிர்வாகமே பெற்றோர்களைச் சமாதானப்படுத்துகிறார்கள். பெற்றோர்களோ தங்கள் குழந்தைகள் படிப்பு இடையில் நிறுத்தப்படும் என்றோ, வேறு பள்ளியில் இடம் கிடைக்காது என்றோ குழந்தைகளுக்கு நடக்கும் பிரச்னைகள் தொடர்பாக வெளியில் சொல்லாமல் பின்வாங்கிவிடுகிறார்கள். குட் டச், பேட் டச் பற்றி குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கிறோம். ஆனால், ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு இருக்கும் பாலியல் சுதந்திரம் என்ன என்பது பற்றிச் சொல்லித் தருவதில்லை.

ஆயிஷா இரா.நடராசன், கல்வியாளர்

அகில இந்திய அளவில் குழந்தைகள் நல உரிமை வாரியம், மனித உரிமைகள் வாரியம் உள்ளிட்டவை ஒரு பள்ளி மீது இதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட புகார்கள் வரும்போது பள்ளி நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவார்கள். நிர்வாகம் அனுப்பும் பதிலை அப்படியே வாங்கி பைல் செய்து வைத்துக்கொள்வார்கள். ஆனால், அப்படியில்லாமல் மாணவரின் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அந்த ஆசிரியர் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் தனி நபரால் நடந்தது என்று கூறி சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஒதுங்கிக் கொள்ள முடியாது. மாணவர்கள் கல்விக்கான கட்டணத்தை ஆசிரியரிடமா கொடுக்கிறார்கள். எனவே பள்ளியில் நடக்கும் வன்கொடுமைகளுக்கு முதல் பொறுப்பு நிர்வாகம்தான் இல்லையா. தனது நிர்வாகத்தின் கீழ் படிக்கும் அனைத்து மாணவர்களின் நலனும் தன்னை சார்ந்ததுதான் என அவர்களைப் பொறுப்புக்கு உள்ளாக்க வேண்டும். ஒரு பள்ளியில் ஒரு விபத்தில் ஒருவர் இறந்துவிட்டாலோ வேறு பிரச்னைகள் ஏற்பட்டாலோ மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்றெல்லாம் காத்திருக்க வேண்டியதில்லை.

பள்ளி மாணவர்கள்

ஆசிரியர் கடும் சொற்களால் திட்டுவது, உடல் அளவில் வன்முறையை திணிப்பது, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவது என எது நடந்தாலும் அதற்குக் காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சட்டமே இருக்கிறது. அதுமட்டுமல்ல தொடர்ந்து புகாருக்கு உள்ளாகும் பள்ளிக்கு அபராதம் விதிக்கலாம், உரிமையை ரத்து செய்யலாம், உரிமம் புதுப்பித்தலை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கலாம்” என இப்படி பள்ளி நிர்வாகத்தின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.

Also Read: பள்ளியில் நடக்கும் பாலியல் வன்முறை : ஜா.தீபா எழுதிய 'குருபீடம்' சிறுகதையை படித்திருக்கிறீர்களா?!

இதே கேள்வியைக் கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் முன் வைத்தோம்…

“தற்போது பெரும்பாலான மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். அவற்றில் ஒரு சில தான் வெளிச்சத்துக்கு வருகின்றன. மதிப்பெண்ணை நோக்கமாகக் கொண்ட கல்விச் சூழலில் அந்த அழுத்தத்திலேயே மாணவர்கள் கல்வி கற்க செல்கின்றனர். பெற்றோர்களும் மதிப்பெண் நோக்கிலேயே படிப்பிற்காக அதிக தொகையும் செலுத்துவதால் அவர்களும் தம் குழந்தை அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்றிவிடுகிறார்கள். அந்த அழுத்தத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இதுபோன்ற சிலர் மாணவர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள். மதிப்பெண் முக்கியம் இல்லை என்பதை உணர்வதுடன் இதற்கு ஒரு தீர்வு என்றால் வெளியில் சென்ற மாணவர்கள் மற்றும் அங்கே படிக்கும் மாணவர்களுடன் இணைத்து மாநில அளவில் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். தங்களுக்கு ஏற்படும் பிரச்னையை அந்தக் குழுவில் பகிர்ந்துகொள்ள வழி வகை செய்ய வேண்டும். பள்ளியில் பணியாற்றும் இதர ஆசிரியர்களிடமோ, நிர்வாகத்திடமோ புகார் அளிக்கும் போது அது மறைக்கப்பட பெருவாய்ப்பு இருக்கிறது. பள்ளிகளிலேயே பெண் ஆசிரியை தலைமையில் ஒரு குழு உருவாக்க வேண்டும். அந்த குழுவை அரசு சார்பில் சந்தித்து எந்தளவுக்குப் புகார்கள் பதிவாகியிருக்கின்றன. அவைமீது எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.

கல்வியாளர் நெடுஞ்செழியன்

ஒவ்வோர் ஆசிரியருக்கும் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரியர்களுக்குள் தனித்தனியாக தங்களைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். புகார் எழும் ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் வரக் கூடாது. வர விட மாட்டோம் என்பதில் அந்த நிர்வாகம் உறுதியாக இருக்க வேண்டும்” என்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுடன் சில தீர்வுகளையும் முன் வைத்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sexual-harassment-against-student-what-are-the-actions-have-to-be-taken-against-institution

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக