குற்றங்களை, அறநூலுக்கு மாறானதும், அரசியலுக்கு மாறானதும், தெய்வத்திற்கு மாறானதும் என மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். அதேசமயம் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை, தண்டம் (பணம்), மானக்கேடு (அவமானப்படுத்தல்), வேதனைப்படுத்தல் (அடி), சிறை, வேலைநீக்கம், மரணம் என ஆறு வகையாகப் பிரிக்கின்றனர்.
இப்படி அறத்துக்கு மாறாகவோ, அரசியல் சட்டங்களை மீறியோ, தர்மம் தவறியோ, மனிதன் தவறு செய்யும்போது, அவனது தவறுகளின் தன்மையைப் பொறுத்து அந்தத் தவறை அவன் மீண்டும் செய்யாமல் திருந்திவாழ தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அப்படி வழங்கப்பட்ட, மனதைத் தொட்ட இரு தண்டனைகளைப் பற்றி அறிந்து கொள்வோமா?
ஒரு வாரத்திற்கு முன் நிகழ்ந்த நிகழ்வு இது...
தாய்லாந்து நாட்டின் பிரதம மந்திரி ப்ரயுத் சானோச்சா, அந்நாட்டின் அரசியல் ஆலோசனைக் கூட்ட நேரத்தின்போது மாஸ்க் அணியாமல் இருந்ததற்குத் தண்டனையாக, அவருக்கு ஆறாயிரம் பாஹ்ட் (190 டாலர்கள்) அபராதத்தை பாங்காக் நகர ஆளுநர் விதித்ததுடன், "பொறுப்பில் இருக்கும் நீங்கள் தவறுசெய்வது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாய் இருக்கக்கூடாது என்பதற்கான தண்டனை இது" என்று கூறி, அந்த அபராதத் தொகையை மூத்த காவல்துறையினரை அனுப்பி, நேரடியாகப் பெற்று வரவும் செய்தார்.
பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் மற்றும் தண்டனை என்பது தாய்லாந்தில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில், அந்நாட்டின் பிரதம மந்திரி அதைக் கடைபிடிக்கத் தவறியபோது, அது முதன்முறையாக என்றபோது கூட, எந்தக் கருணையும் காட்டாமல் அதற்கான தண்டனையை அரசாங்கம் அவருக்கு வழங்கியுள்ளது.
அதிகாரத்தில் இருப்பவர் செய்த குற்றத்திற்கு இப்படி ஒரு தண்டனை என்றால், அப்பாவி ஒருவருக்கு கிடைத்த தண்டனையைப் பார்ப்போமா?
சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வு இது..அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹெலன் ஜான்சன். இரு மகள்கள், இரு பேரக்குழந்தைகள் மற்றும் உறவினரின் மகள் என ஆறு பேர் கொண்ட ஹெலனின் வீட்டில் அந்த வாரக்கடைசியன்று இரண்டு நாட்களாக வறுமையின் காரணமாக அடுப்பு எரியவில்லை... குழந்தைகள் பசியில் அழுவதைக் கண்ட ஹெலன் தனது கையிலிருந்த 1.25 டாலரை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த அங்காடியில் முட்டை வாங்கச் சென்றார்.
பணம் குறைவாக இருந்ததால், வேறுவழியின்றி ஐந்து முட்டைகளைத் திருடி, தனது பாக்கெட்டில் மறைத்தபடி கடையைவிட்டு வெளியேற முயற்சிக்க, முட்டைகள் உடைந்து கையும் களவுமாக சிக்கிக் கொண்டார் ஹெலன். குற்றத்தை விசாரித்து அவரைக் கைதுசெய்ய வந்த காவல்துறை அதிகாரி வில்லியம் ஸ்டேசி, ஹெலன் ஜான்சனின் குடும்ப சூழ்நிலை தெரிந்ததும், கைவிலங்கு மாட்டுவதற்குப் பதிலாக ஹெலன் ஜான்சனின் கைகளில் ஒரு அட்டைப்பெட்டி நிறைய முட்டைகள் வாங்கித் தந்து, "இது இனிமேல் நீங்கள் திருடாமல் இருப்பதற்கான தண்டனை.." என்று கூறி, அந்த ஐம்பது வயது பெண்மணியின் குடும்பத்தின் பசிக்கு உதவினாராம். பின்னர் இது முகநூலில் பகிரப்பட்டு, அவரது வறுமைநிலை நீங்கும் அளவு, நன்கொடை அவருக்குச் சேர்ந்தது வேறுகதை.
ஒருமுறை ஆப்ரஹாம் லிங்கனிடம் பெண்ணொருத்தி, “உங்களுக்குப் பகைவரை அழிக்கும் எண்ணம் ஏற்படாதா” என்று கேட்டதற்கு லிங்கன், “இல்லையே... நானும் பகைவர்களை அழிக்கிறேனே... அவர்களை நண்பர்கள் ஆக்குவதன் மூலம்!” என்றாராம். பகைவனை அழிக்காமல் பகையை அழிப்பது லிங்கனின் முறை.
பகையை அழிப்பது மட்டுமல்ல... தண்டனையும் அன்புமயமாய் இருந்துவிட்டால் குற்றம் என்பதே இல்லாமல் போய்விடும் தானே?
இரு குற்றங்கள்... இரு தண்டனைகள்... இரண்டின் நோக்கமும் ஒன்றுதான். ஆனால் இரண்டாவது தண்டனை கொடுப்பவருக்கும் அதை அனுபவிப்பவருக்கும், எவ்வளவு இனிமையானதாக உள்ளது?
பொதுவாக குற்றங்கடிதல் என்பது, குற்றங்களை நீக்குவதும், விலக்குவதும், கண்டிப்பதும் என்றிருக்க, இதுபோன்ற தண்டனைகள், குற்றங்களே நிகழாவண்ணம் மனித மனங்களில் பெரும் மாற்றங்களை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை!
source https://www.vikatan.com/news/general-news/three-types-of-crimes-and-6-types-of-punishments
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக