வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையிலுள்ள கொரோனா சிறப்பு வார்டில், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். வாலாஜாபேட்டையைச் சேர்ந்த 50 வயது நோயாளி ஒருவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் மரணமடைந்திருக்கிறார். இந்தத் தகவலை, மற்ற கொரோனா நோயாளிகள் உடனடியாக மருத்துவமனை ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனாலும், இறந்தவரின் சடலத்தை வார்டிலிருந்து அப்புறப்படுத்தாமல் ஊழியர்கள் அலட்சியமாகச் செயல்பட்டதாக குற்றம்ச்சாட்டப்பட்டுள்ளது. சடலத்திலிருந்து துர்நாற்றமும் வீசத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்ற நோயாளிகள் அச்சமடைந்து கடும் அவதிக்குள்ளாகினர்.
பொழுது விடிந்து 8 மணியான பின்னரும் சடலத்தை அகற்ற ஊழியர்கள் முன்வரவில்லை. இதனால், நோயாளிகள் அனைவரும் வார்டிலிருந்து வெளியேறி வளாகத்தில் அமர்ந்து போராட்டம் செய்தனர். காலை உணவையும் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, மருத்துவர்களும் ஊழியர்களும் அவர்களைச் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 7 மணி நேரத்துக்குப் பின்னர் காலை 9 மணியளவில் இறந்தவரின் சடலத்தை கொரோனா வார்டிலிருந்து அப்புறப்படுத்தி, கொண்டு சென்றனர். அதன் பின்னரே, நோயாளிகள் போராட்டத்தைக் கைவிட்டு வார்டுக்குத் திரும்பினர். இதனால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
source https://www.vikatan.com/news/tamilnadu/body-of-corona-patient-was-not-taken-away-for-7-hours-in-vellore
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக