Ad

வியாழன், 20 மே, 2021

அன்வர் 194 : 24 ஆண்டுகள் கடந்துவிட்டது... ஆனாலும், அந்த பாகிஸ்தான் அட்டாக்கை மறக்கமுடியவில்லையே!

சென்னையின் வெப்பச்சலனக் காற்றை மீறி வீசிய அன்வர் புயலால், ஆடித்தான் போனது இந்தியா. அவர் அடித்த ரன்கள் அடைமழையாக, அணை கட்ட முடியாது, கோப்பைக் கனவைக் கலைத்துக் கொள்ளத் தொடங்கியது இந்தியா.

மே 21, 1997... சென்னை சேப்பாக்கம் மைதானம். இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி பறக்கச் செய்த அனலை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவதைப் போல் தகித்துக் கொண்டிருந்தது, சென்னையின் அக்னி நட்சத்திரம்.

இந்தியாவின் சுதந்திரப் பொன்விழா ஆண்டைக் கொண்டாடுவதற்கான சுதந்திர தினக் கோப்பைக்கான தொடர் அது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து பங்கேற்க, மினி உலகக்கோப்பை போல், 'ரவுண்ட் ராபின்' முறையில், நடந்து கொண்டிருந்தது. இந்தியாவும் பாகிஸ்தானும் தலா ஒரு போட்டியில் வென்று, தலா ஒன்றில் தோற்றிருந்தன. இலங்கை ஏற்கனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்ட நிலையில், லீக் சுற்றின் கடைசிப் போட்டியில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் வெல்லும் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால், போட்டியில், வழக்கத்தை விட சற்று மசாலா தூக்கலாகவே இருந்தது.

சயித் அன்வர்

மும்பையில் ஜெயசூர்யா காட்டியிருந்த 151* மாயத்திலிருந்தே முழுமையாக வெளியே வராத இந்திய வீரர்கள், அதைவிட பிரம்மாண்டமான இன்னிங்ஸைக் காணப்போகிறோம் என்பதை அறியாமல் களமிறங்கினர். டாஸ் வென்ற ரமீஸ் ராஜா, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். பாகிஸ்தான் கண்ட தலைசிறந்த ஓப்பனர்களில் ஒருவரான, சயத் அன்வர் 20 வயது இளம் அஃப்ரிடியுடன் சேர்ந்து களமிறங்கினார். 1989-லிருந்து விளையாடி வந்தாலும், 1996 மற்றும் 1997-ம் ஆண்டுகளில் தனது உச்சகட்ட ஃபார்மில் இருந்தார் அன்வர். 96-ம் ஆண்டுக் கடைசி மூன்று மாதங்களில் மட்டும், மூன்று சதங்களை வரிசையாக விளாசி இருந்தார். ஆனால், யாருமே அவர், உலகச் சாதனை படைக்கப் போகும் ஒரு இன்னிங்ஸை ஆடப் போகின்றார் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. 96 உலகக்கோப்பையில், இந்தியாவிடம், பாகிஸ்தான் பெற்ற தோல்வி, இந்தியர்களின் நம்பிக்கையைச் சற்றே அதிகரிக்கச் செய்து, அந்தக் குறிப்பிட்ட போட்டியிலும், வெற்றி சுலபமென இறுதிப் போட்டிக்கான கணக்கீடுகளில் ஈடுபட வைத்திருந்தது.

ஆனால், உள்ளே வந்த அன்வர், அன்றைய தினம் வேறொரு அவதாரமெடுத்தார். சந்தித்த முதல் ஓவரிலிருந்து அதிரடியாக ஆடத் தொடங்கினார். உடனிறங்கிய அஃப்ரிடியின் விக்கெட்டை குருவில்லா, மிகச் சுலபமாகத் தூக்கி விட்டார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ரமீஸ் ராஜாவுடன், அற்புதமான ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைக்கத் தொடங்கினார் அன்வர்.

ஆரம்ப ஓவர்கள் முதலே, சென்னையின் கோடை வெயிலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வந்த அன்வரை, ஒரு கட்டத்தில், தசைப்பிடிப்பும், நீர்ச்சத்து இழப்பும் பாடாய்ப் படுத்தியது. 47 பந்துகளில், 58 ரன்களை எட்டி விட்டார் அன்வர். இந்தக் கட்டத்திலேயே, 18 ரன்களை மட்டுமே அவர் ஓடி எடுத்திருந்தார். மீதமிருந்த, 40 ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் மூலமே வந்திருந்தது‌. அரை சதத்தைக் கடந்தபின் அவர், அடிக்கடி, தரையில் சோர்ந்து அமரத் தொடங்கினார். இந்திய பௌலர்களை இலகுவாக எதிர்கொண்ட அவரால், வெயிலைச் சமாளிக்க முடியவில்லை. 19-வது ஓவரில், வேறுவழியின்றி, பை ரன்னராக, அஃப்ரிடி வந்து சேர்ந்தார். அதன்பிறகு, அன்வரின் பாரம் சற்றே குறைந்தது.

சிக்கிய பௌலர்களை எல்லாம் ஒரு கை பார்க்கத் தொடங்கினார். ரமீஸ் ராஜா ஆட்டமிழந்து, இஜாஸ் அகமது வந்து சேர்ந்தார். ஆனால், எதுவுமே, அன்வரின் ஆட்டத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒவ்வொரு ஷாட்டையும் கொஞ்சம் கூடச் சிரமமின்றி, மிக இலகுவாக, நேர்த்தியாக ஆடினார். 'ப்யூர் கிளாஸ்' என்று வர்ணிக்குமாறு ஒரு ஆட்டத்தை அன்று ஆடிக் கொண்டிருந்தார் அன்வர்.

Saeed Anwar

உடல் வலி அவரது மன வலிமையையும் உறுதியையும் சற்றும் அசைத்துப் பார்க்க முடியவில்லை. வெறும் 82 பந்துகளில், தனது சதத்தைத் தொட்டார் அன்வர். அந்தக் கட்டத்திலேயே, 12 பவுண்டரிகளையும், இரண்டு சிக்ஸர்களையும் அவர் விளாசியதோடு, அணியின் அப்போதைய ஸ்கோரில், 70 சதவிகித ரன்களை அவர் மட்டுமே எடுத்திருந்தார்.

அதன்பிறகு, ஒவ்வொரு முறையும், சற்று நொண்டிக் கொண்டே, ஸ்ட்ரைக்குக்கு அவர் வரும்போதும், மிகவும் திணறுகிறார், இந்த ஓவரில் ஆட்டமிழந்து விடுவார் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்புமாக இருந்தது. ஆனால், அதை எல்லாம் பொய்யாக்கி, "பதினோரு ஃபீல்டர்கள் பத்தாதோ?, பவுண்டரி லைன்கள் எல்லாம் பக்கத்தில் வந்துவிட்டதோ?!" எனுமளவிற்கு, கனகச்சித டைமிங்கோடு, இடைவெளிகளில் எல்லாம் பந்தைத் துரத்தினார். சச்சின், லாரா, ஜெயசூர்யா ஆகியோர்களின், ஒவ்வொரு விதமான ஆட்டத்திறனைக் கண்டு அசந்த கூட்டத்திற்கு, இது வேறுவிதமான, விஷுவல் ட்ரீட்டாக அமைந்தது. பவர்ஃபுல் ஹிட்டராக பந்தை அடிக்கவில்லை அன்வர். ஆனால், மந்திரத்துக்குக் கட்டுப்பட்டதைப் போல், பந்து பவுண்டரிக்கே சென்றது.

இஜாஸ் அகமதுவின் விக்கெட்டை கும்ப்ளே வீழ்த்தி 116 ரன்கள் பார்னர்ஷிப்பை முடிவுக்குக் கொண்டு வர, இன்சமாம் உல் ஹக் வந்து இணைந்தார். பொதுவாக, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக எல்லாம், அன்வரின் அப்போதைய ஒருநாள் போட்டிகளுக்கான ஆவரேஜ், 23 மற்றும் 17 என்ற கணக்கிலேயே இருந்து வந்தது. ஆனால், பக்கத்துநாட்டுப் பாசமோ என்னவோ, இந்தியாவுக்கு எதிராக மட்டும் அது 43.52 ஆக இருந்தது. அதை இன்னும் சில இலக்கங்கள் கூட்டும் இலக்கோடு அன்று ஆடிக் கொண்டிருந்தார் அன்வர்.

அன்றைய தினம், 150 ரன்களை அவர் எட்டிய விதம்தான் இன்னுமொரு மைல்கல். 41-வது ஓவரை கும்ப்ளே வீச வர, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை லாங்க் ஆஃபில் சிக்ஸருக்கு அனுப்பி, 150 ரன்களை எட்டியவர், அதற்கடுத்த இரண்டு பந்துகளையும், மிட் ஆனில் சிக்ஸராக்கி, ஹாட்ரிக் சிக்ஸர்கள் மூலமாக, அரங்கில் இருந்த 40,000 மக்களையும் வாயடைக்க வைத்து விட்டார். அந்த ஓவரின் இறுதிப் பந்தும் பவுண்டரியாக, மொத்தம் 24 ரன்களை அந்த ஒரு ஓவரில் மட்டுமே கும்ப்ளேவைக் கொடுக்க வைத்திருந்தார் அன்வர். இந்தக் குறிப்பிட்ட ஓவரின் போது, நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்றிருந்த இன்சமாம், இந்த இன்னிங்ஸைப் பற்றி, பின்னொரு நாளில், "கிரிக்கெட்டும், ரன் எடுப்பதும் இவ்வளவு சுலபமானதாக இருக்கும் என்று, அன்று அவருடைய இன்னிங்ஸைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்" என்று கூறியிருந்தார். ஆம்! 'எஃபர்ட்லெஸ்' என்று சொல்லுவோமே அப்படித்தான் இருந்தது, அவரது அன்றைய ஆட்டம். 170 ரன்களை அன்வர் எட்டியபோது, இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில், ஒருவீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அன்றைய சாதனை அத்தோடு முற்றுப் பெற்றுவிடவில்லை.

anwar

190 ரன்களை அன்வர் எட்டியபோது, 1984-ம் ஆண்டு, ஒருநாள் போட்டியொன்றில், ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோரான 189 ரன்களை எடுத்திருந்த விவியன் ரிச்சர்ட்ஸ் நிகழ்த்தியிருந்த சாதனையை, முறியடித்தார்.

இரட்டைச் சதத்தை எடுத்து விடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், சச்சின் வீசிய பந்தை அன்வர் அடிக்க, அது ஃபைன் லெக்கில் நின்றிருந்த கங்குலியிடம் கேட்சாக மாறி, 47 ஓவர்கள் நின்று விளையாடிய அன்வரை வெளியேற்றியது. 146 பந்துகளில், 194 ரன்களை விளாசியிருந்த அவரது இன்னிங்ஸில், 22 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடக்கம். பரம்பரை பகை எல்லாம் மறந்து, அவரைப் பாராட்டும் விதமாக, ஸ்டேடியத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் எழுந்து நின்று, கைதட்டி, மரியாதை தந்து அவரை கௌரவித்தது எல்லைகள் தாண்டியும், திறமை அங்கீகரிக்கப்படும் என்னும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அன்றைய தினம், 327 ரன்களைக் குவித்திருந்தது, பாகிஸ்தான். இதில், 59 சதவிகிதம் ரன்களை, அன்று அன்வர் மட்டுமே அடித்திருந்தார்.

தொடர்ந்து விளையாடிய இந்திய இன்னிங்ஸில், டிராவிட் தனது ஒருநாள் போட்டிகளுக்கான, மெய்டன் சதத்தை அடித்திருந்தார். வினோத் காம்ப்ளியும் அரைசதம் கடந்திருந்தார், எனினும், அன்வருக்கு இணையான ஒரு ஆட்டத்தை இந்தியாவின் சார்பில், யாராலும் அன்று ஆட முடியாமல் போக, 49.2 ஓவர்களிலேயே 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா. பாகிஸ்தான் சார்பில், ஜாவத் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அன்வர் நிகழ்த்திய இந்தச் சாதனையை, 2009-ம் ஆண்டு, ஜிம்பாப்வேவின் சார்லஸ், பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில், தான் அடித்த, 194 ரன்கள் மூலமாக சமன் செய்தார். சாதனைகளின் சமுத்திரமான சச்சின், அதற்கு அடுத்த ஆண்டே, தன்னுடைய இரட்டைச் சதத்தின் வாயிலாக, அன்வரின் சாதனையை முறியடித்தார். எனினும் 97-ம் ஆண்டு இருந்த பேட்ஸ்மென்களுக்கான வரையறைகளை மீறி, அன்வர் எடுத்த 194 ரன்கள், உண்மையில் மூன்று சதங்களுக்குச் சமம் என்றே சொல்லலாம்.

விவியன் ரிச்சர்ட்ஸுக்கு முன்னதாக, அதிகபட்ச ஸ்கோருக்கான (171) ரெக்கார்டை தன் வசம் வைத்திருந்த, கிளென் டர்னர், அன்வரின் இன்னிங்ஸைப் பற்றி, கமெண்டரி பாக்ஸில் இருந்து பேசும் போது, "கிட்டத்தட்ட, 30 ஓவர்கள் ரன்னர் வைத்து ஓடியதால் மட்டுமே, அன்வரால், இந்தச் சாதனையை நிகழ்த்த முடிந்தது" என மறைமுகமாக வெறுப்பை உதிர்த்திருந்தார். இன்னும் சிலரோ, இந்தப் போட்டியில், ஶ்ரீநாத் இருந்திருந்தால், அன்வரின் விக்கெட்டை இந்தியா சுலபமாக வீழ்த்தி இருக்கும் என கருத்துக் கூறி இருந்தனர். ஆனால், கேப்டன் சச்சின், "தான் வாழ்நாளில் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று இது!" என்று, அன்வருக்குப் புகழாரம் சூட்டி இருந்தார். சமீபத்தில், அஷ்வின் தான் நேரில் கண்டு அசந்துபோன இன்னிங்ஸ் இது என்றும், அதன்பிறகும் பலமுறை இதை ஹைலைட்ஸில் பார்த்து ரசித்திருக்கிறேன் என்றும் கூறி இருந்தார்.

போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் பேசிய அன்வர், தன்னுடைய ஒருநாள் போட்டி சதங்களிலேயே, இதுதான் மிகச் சிறந்தது என்றும், வெயில், ஈரப்பதத்தை சமாளித்து விளையாட மிகவும் கஷ்டப்பட்டதாகவும், அஃப்ரிடியின் பங்கு தன்னுடைய 194-ல் மிக முக்கியமானது என்றும் கூறி இருந்தார்.

எது எப்படியெனினும், அன்றைய தினம், அன்வர் ஆடியது, ஒரு அற்புதமான இன்னிங்ஸ். டைமிங், பேலன்ஸ், கன்ட்ரோல், ஃபுட் வொர்க், ரிஸ்ட் வொர்க், ஷாட் செலக்ஷனஸ், கண்கள் கைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு என அத்தனையும் கனகச்சிதமாக இருந்த அந்த இன்னிங்ஸ், இதுவரை ஆடப்பட்டுள்ள தலைசிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றென்றால் மிகையாகாது.



source https://sports.vikatan.com/cricket/highlights-of-saeed-anwars-194-run-innings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக