Ad

ஞாயிறு, 9 மே, 2021

புத்தம் புது காலை : அதிகாலையில் கோழி கூவவில்லையா... ஆபத்து யாருக்கு?! #6AMClub

என்றாவது ஒருநாள், விடியற்காலையில் உங்கள் வீட்டுச் சேவல் கூவாமல் போனால் உங்கள் வாழ்க்கை மோசமானதாக மாறிவிடும் என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை என்கிறது அறிவியல்!


அதுசரி... அது ஏன் அலாரம் அடிப்பது போல, எப்போதும் விடியற்காலையில் சேவல் கூவுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா? பொதுவாக, இரவு வந்ததும் நாம் உறங்கச் செல்லலாம் என்றும், பொழுது விடிந்துவிட்டது, விழித்தெழலாம் என்றும் நமது உடலுக்குள் இசைவுகள் ஏற்படுவதின் காரணம், நம் உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் உயிரியல் கடிகாரத்தின் சர்காடியன் ரிதம்தான். இந்த இசைவு, மனிதர்களுக்கு மட்டுமின்றி உலகின் மற்ற உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவான ஒன்றுதான் என்றாலும், விடியலைக் கட்டியம் கூறும் பறவைகளின் உயிரியல் கடிகாரம் இன்னும் பல உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது.

வீடுகளில் அதிகாலையில் கோழி கூவுவது போலவே, அக்கம்பக்கத்து மரங்களில் காகம் கரைவது, குயில் கூவுவது, பறவைகள் கீச்சிடுவது என அந்த நாளின் பொழுது புலர்வதைக் குறிக்கும் வகையில் பறவைகள் எழுப்பும் ஒலியை, ஆங்கிலத்தில் The Dawn Chorus என்கிறார்கள் பறவை ஆய்வாளர்கள். அன்றாட அலாரம் போல ஒலிக்கும் இந்த டான் கோரஸை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர்.

Morning Motivation

முதலாவது, தன் துணையை அழைக்க, தனியாக ஒலிக்கும் ஆண் பறவையின் குரல். என்னதான் காதலியை அழைக்க என்றாலும், ஆணுடைய அந்தக் குரலை வைத்து தான், தன் சந்ததி எவ்வளவு வலிமையாய் இருக்கும் என்பதை பெண் பறவை முடிவு செய்கிறது என்பதால், அது மென்மையாக இல்லாமல் சற்று அழுத்தமாகவும் தனித்தும் ஒலிக்கும்.


அடுத்து, ''இது தங்களது எல்லை'' என்று ஒரு பறவைக் கூட்டம் மற்ற பறவைகளுக்கு அறிவிக்க அனைத்துப் பறவைகளும் ஒன்றுசேர்ந்து கூட்டுக் குரலாக ஒலிக்கும் கோரஸ் குரல். தேசத்தின் எல்லைகளைப் போலவே, தங்களது எல்லைகளைத் தீர்மானித்து, தங்களது உணவை, உறைவிடத்தை, முக்கியமாக சந்ததியினரைக் காக்கும் பறவைகளின் இந்த கூட்டுக்குரல் இன்னும் சிறப்புமிக்கது.

இந்த இரண்டையும் விடுத்து, உணவு தேடிச்செல்ல உற்றாரை அழைத்தபடி பறக்கும் இன்னொரு குரலும் உண்டு என்கிறார்கள் பறவை ஆய்வாளர்கள். வெப்பம் இல்லாத, குளிர்ச்சி மிகுந்த, அமைதியான அதிகாலைப் பொழுதுகளில் தான் பறவைகள் தங்களது உணர்வுகளை உறுதியாகவும், உரக்கவும் சொல்ல ஏதுவாக இருக்கும் என்பதால், டான் கோரஸ் எப்போதுமே அதிகாலையில் சூரிய ஒளி பூமியில் படுவதற்கு முன்பாக நிகழ்கிறது என்கின்றனர்.

ஆக, விடியலைச் சொல்லும் பறவைகளின் டான் கோரஸ் என்பது நமக்கு சப்தமாகவோ, சங்கீதமாகவோ தோன்றினாலும், உண்மையில், அது இணையை அழைக்கவும், பகையை எச்சரிக்கவும், உணவுக்கு உற்றாருடன் புறப்படவும் என ஒற்றைக் குரலாகவோ கூட்டாகவோ ஒலிக்கும் என்பதும், அதற்கு அந்தப் பறவைகளின் சர்காடியன் ரிதம் உதவுகிறது என்பதும் நன்கு விளங்குகிறது.

Bird

ஆனால், கிராமத்தில் வாழ்ந்த மனிதன் நகரத்தில் வாழத் தொடங்கியவுடன் எப்படி அவனது வாழ்க்கைமுறையும், அத்துடன் அவனது சர்காடியன் ரிதமும் மாறியதோ, அதேபோல நகரங்களில் வாழும் பறவைகளுக்கும் இந்த இசைவு மாறி வருகிறது என்று கூறுகிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.


ஆம்... நகரத்தில் பகல் மட்டுமல்லாமல் இரவெல்லாம் ஒளிரும் தெரு விளக்குகள், எந்நேரமும் ஓயாத வாகன ஒலிகள் ஆகியவற்றின் காரணமாக தூக்கத்தைத் தொலைக்கும் பறவைகளின் டான் கோரஸும் மாறிவருகிறது.

பறவைகளின் டான் கோரஸ் மாறுவது மனிதனை எப்படி பாதிக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கின்றன ஆஸ்திரேலியாவின் ஹனி ஈட்டர் பறவைகள். மனிதர்களின் ஆக்கிரமிப்பு, ஒளி-ஒலி மாசு ஆகியன ஏற்படுத்திய உயிரியல் கடிகார மாற்றத்தால் முந்தைய தலைமுறையிடமிருந்து தங்களது டான் கோரஸை முறையாகக் கற்றுக்கொள்ளாத இந்த ஹனி ஈட்டர் பறவையினம், தற்போது தங்களது இணையை அழைக்கத் தெரியாமல் அழிவின் விளிம்பில் உள்ளது என்பதுடன், இது மனித குலத்திற்கான எச்சரிக்கை ஒலி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


ஆம், இரவு முழுவதும் விழித்து தனது சர்காடியன் ரிதத்தை தொலைத்து பகலில் துணையை அழைக்கத் தெரியாததால் ஒரு பறவையினம் அழிவது என்பது, இரவில் கண்விழித்து பகலில் உறங்கி சர்காடியன் ரிதத்தை தொலைத்துக் கொண்டிருப்பதும் மனிதகுல அழிவிற்கான முன்னோட்டம் என்பது நன்கு புரிகிறது.


நமது வாழ்வும், பறவையின் குரலும் ஒன்றோடு ஒன்றுகலந்தது என்பதை டான் கோரஸ் மூலம் புரிந்து கொள்வோம். இனிவரும் காலங்களில், அதிகாலையில் கூவிய கோழி கூவவில்லை என்பது கோழிக்கான செய்தியில்லை... அது நமக்கான எச்சரிக்கை என்பதைப் புரிந்து, இயற்கையுடன் இயைந்து வாழ்வோம்!



source https://www.vikatan.com/news/healthy/birds-sounds-and-signals-to-humans

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக