Ad

ஞாயிறு, 9 மே, 2021

திருச்சி: எம்.ஜி.ஆர் சிலை சேதம் - அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலையைச் சேதப்படுத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் இல்லையேல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஜி.ஆர் சிலை சேதம்

திருச்சி மாநகர எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை மரக்கடை பகுதியில் நிறுவப்பட்டது. அப்போதைய அமைச்சர்களான நல்லூசாமி, ஆர்.எம். வீரப்பன் ஆகியோர் அந்த சிலையைத் திறந்து வைத்தனர். திருச்சியின் ஒர்அடையாளச் சின்னமாக இருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலை மர்ம நபர்களால் இன்று சேதப்படுத்தப்பட்டிருப்பதாக அ.தி.மு.க-வினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

இன்று காலை எம்.ஜி.ஆர் சிலையின் வலது கை மணிக்கட்டு வரை உடைக்கப்பட்டதை அறிந்த திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அ.தி.மு.க-வினர், சிலையை உடைத்த மர்ம நபர்களையும் சமூக விரோதிகளையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து திருச்சி காந்தி சந்தை காவல்நிலையத்தில் அ.தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அ.தி.மு.க-வினர் முற்றுகையிட்டு போராட்டம்

மிகவும் பரபரப்பான பகுதியான மரக்கடை பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு சிலையை உடைத்த மர்ம நபர்களைக் கண்டறிந்து, கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அ.தி.மு.க-வினரின் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

Also Read: திருச்சி: பற்றி எரிந்த கே.என்.நேருவின் வாழ்த்து பேனர்; செய்தது யார்? - போலீஸ் விசாரணை

இதுகுறித்து வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் சுகுமாரிடம் பேசினோம். ``எம்.ஜி.ஆர் சிலையை மர்மநபர்கள் யாரும் சேதப்படுத்தவில்லை. அது தவறான தகவல். தேர்தல் நடைபெறும் பொழுது ஊர் முழுவதும் உள்ள தலைவர்களின் சிலையைத் துணியைக்கொண்டு மறைப்பது வழக்கம். தேர்தல் முடிந்த பிறகு.

இன்ஸ்பெக்டர் சுகுமார்

அடுத்த ஆட்சியாளர்கள் பதவியேற்றதும் தலைவர்களின் முகத்தை மூடியிருக்கும் துணியை அகற்றுவது வழக்கம். அந்தவகையில், எம்.ஐ.ஆரின் முகத்தை மூடியிருந்த துணியினை அகற்றுவதற்காகச் சாரம் அமைத்து துணியை மேலிருந்து அகற்றும்போது துணியில் சிக்கி கைப்பகுதி மட்டும் கீழே விழுந்திருக்கிறது. இது பழமையான சிலை. அதனால் எளிதாக உடைந்துவிட்டது. சிலையை சேதப்படுத்த வேண்டும் என்றால் அடித்தவுடன் மொத்த சிலையும் கீழே விழுந்திருக்கும்.

போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க-வினர்

ஆனால், இங்கு கை அப்படியே இருக்கிறது. துணியை அகற்றிய தொழிலாளர்களே நாங்கள்தான் தவறுதலாகச் செய்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க-வினரும் புகார் கொடுத்திருக்கிறார்கள். புகாரின் பேரில் சி.சி.டிவி ஃபுட்டேஜை ஆய்வு செய்ய இருக்கிறோம். சேதப்படுத்தப்பட்ட சிலையைப் பராமரிக்கவும் வேலை நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கே.என் நேரு திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றிபெற்றதைப் பாராட்டி வைத்திருந்த பேனர் தீ பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/politics/trichy-mgr-statue-damaged

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக