Ad

வெள்ளி, 21 மே, 2021

4,000 பேருக்கு கொரோனா(?); கொல்கத்தா எண்ணிக்கையை தமிழகத்தில் காட்டிய ஆய்வகம்! - பரிசோதனை உரிமம் ரத்து

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊரடங்கு அமலிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது, இந்த நிலையில், வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தமிழகத்தின் கணக்கில் சேர்த்ததாக சென்னையில் செயல்பட்டுவரும் மெட்ஆல் (Medall) ஆய்வகத்திற்கு பொது சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொரோனா வைரஸ்

சுகாதாரத்துறை அனுப்பியுள்ள நோட்டீஸில், ``மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணையதள பக்கத்தில் மெட்ஆல் ஆய்வகம் தவறாக பதிவேற்றி உள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் கொரோனோ தொற்று இல்லாத 4 ஆயிரம் பேருக்கு, தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாக தவறான விவரங்களையும் பதிவேற்றி உள்ளது. இந்த செயல்பாடு சமூகத்திலும் சுகாதாரத் துறையிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அர்ப்பணிப்பு உணர்வோடு, கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் முன் களப் பணியாளர்களின் முயற்சிகளை சீரழிக்கும் விதமாக இத்தகைய செயல்களில் ஈடுபட்டு இருக்கிறது. இது அலட்சியத்தால் நிகழ்ந்த தவறா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா என்பதை கண்டறிய வேண்டியுள்ளது.

தொற்று இல்லாதவர்களுக்கும் கொரோனோ இருப்பதாக கணக்கு காட்டி இருப்பது சம்பந்தப்பட்ட ஆய்வகத்துக்கும் சில மருத்துவமனைகளுக்கும் விதிகளை மீறிய தொடர்பு இருப்பதை உணர்த்துகிறது. தொற்று இல்லாத மக்களையும் மருத்துவமனைக்கு அழைத்து அதன் வாயிலாக பணம் ஈட்டும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த செயலில் ஈடுபட்ட தனியார் ஆய்வக பரிசோதனை மேற்கொள்ள அனுமதி ரத்து செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ்

அதனுடன் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வக இயக்குநர் மூன்று வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்படுகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு உண்மை விவரங்களை கண்டறிந்த பிறகு பரிசோதனைக்கான அனுமதியை மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தனியார் ஆய்வகம் தரப்பில் விசாரித்த போது, சம்பந்பட்ட நபர்களுக்கு சரியான முடிவுகள் தான் அனுப்பப்பட்டது எனவும், தகவல்களை இணையத்தில் பதிவேற்றும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறு நிகழந்துள்ளது எனத் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பான அறிக்கையை ஆய்வகம் வழங்கிய பின்னரும், விசாரணை முடிவிலும் உண்மை என்ன என்பது தெரிய வரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/medall-private-laboratory-licence-for-corona-test-cancelled-after-scam-found

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக