Ad

வெள்ளி, 21 மே, 2021

3 ஆண்டுகளில் மகசூல் கொடுக்கும் புளி, லாபம் தரும் புது தொழில்நுட்பம்! - பசுமை விகடன் ஆன்லைன் பயிற்சி

ஒரு காலத்தில் நெடுஞ்சாலையோரங்களில் நிழல் தந்துகொண்டிருந்தன புளியமரங்கள். நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலை உருவான பிறகு, தமிழகத்தின் பெரும்பாலான சாலைகளில் புளியமரங்கள் இல்லாமல் போய்விட்டன. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவர் தோட்டத்திலும், வீட்டுத்தேவைக்காக ஒரு புளியமரமாவது வைத்திருந்தார்கள். ஆனால், அதுவும் காலப்போக்கில் மறைந்து விட்டது. புளியமரங்களின் எண்ணிக்கை குறைவால், புளியின் விலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

புளி அடர்நடவு

புதிதாகப் புளியமரங்களை நடவு செய்ய விவசாயிகளும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. காரணம், புளி மகசூல் கொடுக்க 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இந்நிலையில், மா, கொய்யா போன்ற பயிர்களைப் போலவே புளியும் 3 ஆண்டுகளில் மகசூல் கொடுக்கும் வகையில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அடர் நடவு முறையில் புளி நடவு செய்யப்படுகிறது. இதுவரைக்கும் புளியமரம் என்றுதானே சொல்லி வருகிறோம்? ஆனால், தற்போது புளியஞ்செடி நடவு செய்வது அதிகரித்து வருகிறது. இந்த வகை புளியஞ்செடிகளை அடர் நடவு முறையில் நடவு செய்து, 5 அடிக்கு மேல் கவாத்து செய்து விடுவதால் அறுவடை சுலபமாக இருக்கிறது. இந்தப் புதிய தொழில்நுட்பம் தொடர்பாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து வருகிறது மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.

இது தொடர்பாகப் பேசிய வனக்கல்லூரியின் மரப்பயிர் சாகுபடி துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். பாலசுப்பிரமணியன், ``புளி சாகுபடியில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இந்தோனேசியா இருக்கிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழகத்தில் அதிகளவு புளி உற்பத்தியாகிறது. இன்றைய தேதியில் உலக சந்தையில் புளிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாகப் புளி விதையிலிருந்து எடுக்கப்படும் ஒருவிதமான பசைக்கு உலக நாடுகளில் கிராக்கி உள்ளது. நாம் புளி விதையைத்தான் விற்பனை செய்கிறோம். அதிகபட்சம் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்வோம். ஆனால், ஒன்றரை கிலோ விதையிலிருந்து ஒரு கிலோ பசை எடுக்கலாம்.

பாலசுப்பிரமணியன்

அந்தப் பசையின் விலை கிலோ 2,000 ரூபாய். இதுவரை புளி விதையிலிருந்து அந்தப் பசையை எடுக்கும் தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை. தற்போது வனக்கல்லூரி மூலம் அதற்கான தொழில்நுட்பத்திற்குக் காப்புரிமை வாங்கியிருக்கிறோம். அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இங்கேயே பசை தயாரிக்கலாம். அதே போல அடர் நடவு மூலமாகப் புளியில் அதிக மகசூல் எடுக்கலாம். எல்லா மண் வகையிலும் வளரும் புளி, வறட்சியைத் தாங்கி வளரும் பயிர். அதைச் சாகுபடி செய்யும் நவீன நுட்பங்களைத் தெரிந்துகொண்டால் புளி சாகுபடியிலும் நல்ல வருமானம் பார்க்கலாம்'' என்றார்.

புளி - அடர்நடவு, மதிப்புக்கூட்டல், பயன்பாடு - ஆன்லைன் பயிற்சி

புளி சாகுபடியில் அடர் நடவு மற்றும் மதிப்புக்கூட்டல் தொடர்பாக உங்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படலாம். அதற்கு விளக்கமளிக்கும் விதமாக `வனத்துக்குள் திருப்பூர்' மற்றும் `சோலைவனம் நாற்றுப்பண்ணை' ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நேரலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது பசுமை விகடன்.

23.05.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிவரை இந்த நேரலை நிகழ்ச்சி நடைபெறும். புளி அடர் நடவு, மதிப்புக்கூட்டல் தொடர்பாக மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்யக் கீழேயுள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்.

https://bit.ly/2T3eCny



source https://www.vikatan.com/news/agriculture/pasumai-vikatan-online-training-on-new-variety-of-tamarind-and-its-value-added-product

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக