பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
கிரிக்கெட் பல ஆண்டுகளாக இந்தியாவில் விளையாடப்பட்டாலும் எங்கள் கிராமத்தில் இந்த விளையாட்டு அறிமுகமானது 1980களின் ஆரம்பத்தில் தான்.
"என்னடா தட்டு பலவய (பலகை) வச்சு பந்தடிச்சு கிட்டு இருக்கீங்க..."
நாங்கள் முதன் முதலாக கிரிக்கெட் விளையாட்டை எங்கள் ஊரில் விளையாட ஆரம்பித்த போது அதை பார்த்த எங்கள் ஊர் மக்களின் கேள்விதான் நீங்கள் மேலே படித்தது. உண்மையாகவே எங்களுடைய முதல் கிரிக்கெட் மட்டை (Cricket Bat) தட்டு பலகை தான். பொதுவாக கிராமங்களில் எல்லாருடைய வீட்டிலும் இந்த உபகரணம் இருக்கும். ஒரு மரத்துண்டில் கிட்டத்தட்ட ஒரு கிரிக்கெட் மட்டை போலவே இருக்கும், ஆனால் இருபுறமும் ஒரே மாதிரி தட்டையாக கைப்பிடியும் உருண்டையாக இல்லாமல் ஒரு முக்கோணம் போன்று செதுக்கப்பட்டிருக்கும்.
அந்த கால கட்டத்தில் எங்கள் ஊரில் பெரும்பான்மையான வீடுகள் கூரை வீடுகளாகவோ அல்லது கால்நடைகளுக்கான கூரை கொட்டகைகளாகவோ கட்டாயமாக இருக்கும். வீட்டின் மேல் பகுதியில் மூங்கில் துண்டுகளை வைத்து நெருக்கமாக இணைத்திருப்பார்கள். கம்பந்தட்டையை சிறு கட்டுகளாக கட்டி அந்த மூங்கில் கட்டிய பகுதிக்கு மேலே நெருக்கமாக அடுக்கிவிடுவார்கள். கீழ் பகுதியில் ஒழுங்கற்ற முறையில் நீண்டிருக்கும் பகுதிகளை அந்த தட்டு பலகையை வைத்து தட்டி ஒழுங்கு செய்வார்கள். புதிதாகக் கூரை வேயும் போது பழுப்பு மஞ்சள் நிறத்திலிருக்கும் இது நாளாக நாளாக மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து கருமை நிறத்திற்கு மாறிவிடும். இதே போன்று வைக்கோல் போர் அல்லது தட்டை (கம்பு அல்லது சோளத்தட்டை) போர் போன்றவற்றின் சுற்று புறங்களில் நீண்டு கொண்டிருப்பதையும் அந்தப் பலகையை வைத்து சரி செய்வார்கள்.
எங்கள் வீட்டிலும் ஒரு தட்டுப் பலகை இருந்தது. அதனை கைப்பிடிப்பதற்கு ஏதுவாக செதுக்கி நாங்கள் கிரிக்கெட் மட்டையாகப் பயன்படுத்தினோம். 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய விஷயமெல்லாம் பிற்பாடு தெரிந்து கொண்ட விஷயங்கள்.
பிற்பாடு நாங்கள் உண்மையான கிரிக்கெட் மட்டையை (Cricket Bat) கடையிலிருந்து வாங்கி (எங்களுடைய முதல் வில்லோ - Willow bat) விளையாடிய போதும் எங்கள் ஊரில் அதனை தட்டுப் பலகை என்றே சிறுவர்கள் விளித்தார்கள் என்பது வேறு விஷயம்.
எங்களுக்கு கிரிக்கெட் அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான அனுபவம். என்னுடைய முந்தைய ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்ட ரெங்கநாதன் - ஜானகி மாமா மாமி வீட்டிற்கு நாங்கள் ஒவ்வொரு வாரமும் தவறாது செல்வோம். அந்தச் சமயத்தில் எங்கள் மாமி வீட்டிற்கு அருகில் முசிறி அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவரின் வீடு இருந்தது. அந்தக் கால கட்டத்திலேயே அவர்கள் வீட்டில் வண்ண தொலைக்காட்சி வைத்திருந்தார்.
நாங்களாகவே டிவி பார்க்க அவருடைய வீட்டிற்கு சென்றுவிடுவோம். பல நேரங்களில் இரவு உணவிற்கு பின்னும் பத்து மணிவரை நான் டிவி பார்க்க அங்கே சென்றிருக்கிறேன். அது அவர்களுக்கு எவ்வளவு தொந்தரவாக இருந்திருக்கும் என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்த சிறு வயதில் அது பற்றிய புரிதல் இல்லாத காரணத்தால் நான் அவ்வாறு நடந்து கொண்டேன் என்பதே உண்மை.
அவர்கள் வீட்டில் எப்பொழுதும் இது போன்ற தொந்தரவுகளுக்காக எங்களை கடிந்து கொண்டதேயில்லை. நேரம் அதிகமாகி விட்டால், "தம்பி பத்து மணியாச்சு போயிட்டு நாளைக்கு வரியா..." என்று அனுப்பி வைப்பார்கள். முசிறி அக்ரஹாரத்தில் மணி (அதுதான் அவர் பெயர் என நினைக்கிறேன்) அண்ணா என்பவர் தலைமையில் கிரிக்கெட் அணி இருந்தது. அந்தச் சமயத்தில் அவர்கள் ஒரு கிரிக்கெட் தொடரை முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அதற்கான முன்னேற்பாடுகளுக்காக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய தொடர்களை வீடியோ காசெட்டிலிருந்து வீடியோ டெக் (Video Deck) என்ற வீடியோ பிளேயரில் போட்டு பார்ப்பார்கள். அந்த அக்ராஹாரத்தில் அப்பொழுது வண்ண தொலைக்காட்சி நான் மேற்குறிப்பிட்ட அந்த புரபஸரின் (Professor) வீட்டில் மட்டுமே இருந்ததாக நினைவு. அவர் வீட்டிலேயே வீடியோ டெக்கும் (Video Deck) இருந்தது என நினைக்கிறேன்.
அவருடைய வீட்டில்தான் மணி அண்ணாவின் கிரிக்கெட் அணியினர் அனைவரும் கிரிக்கெட் மேட்சை பார்ப்பார்கள். நாங்களும் அவர்களுடன் சென்று எதோ ஒரு புது விளையாட்டு என்பதாக பார்த்த போதுதான் எங்களுக்கு முதன் முதலாக கிரிக்கெட் என்றொரு விளையாட்டை பற்றி அறிமுகமானது.
இன்றைய காலகட்டத்தில் எட்டு வயது சிறுவர்களுக்குத் தெரியும் விதிமுறைகள், பந்து வீச்சு நுணுக்கங்கள், பலவிதமான பந்து வீச்சை ஒரு பேட்ஸ்மேனாகக் கையாளும் நுணுக்கங்கள் ஆகியவற்றை பார்க்கும்போது சற்று ஆச்சர்யமாக இருக்கிறது. வெகு சன ஊடகங்களான தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் போன்றவை கிராமங்களில் பரவலாக்கப்படாததாலும் அதற்கான பொருளாதார வசதிகள் இன்மை மற்றும் அதன் விலை போன்ற காரணங்களால் எங்களுக்கு கிரிக்கெட் அறிமுகமாகவில்லை.
ஆனால் ஏதோவொரு விதத்தில் அந்த விளையாட்டு எங்களுக்கு பிடித்து போக அடிப்படை கிரிக்கெட் விதிகளை பற்றி கூட தெரிந்து கொள்ளும் முன்பே நாங்களும் கிரிக்கெட் மட்டையையும் ஒரு ரப்பர் (Rubber) பந்தையும் தயார் செய்து விளையாட ஆரம்பித்தோம்.
எங்களுடைய கிராமத்தில் எங்கள் வீட்டின் முன்பாக பள்ளி மைதானம் (சிறியதுதான்) உண்டு. அங்குதான் எங்களுடைய முதல் கிரிக்கெட் பயணம் தொடங்கியது. நானும் என்னுடைய அண்ணாவும்தான் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிறுவர்களுக்கும் கிரிக்கெட்டை கற்றுக் கொடுத்து (??) விளையாட ஆரம்பித்தோம். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வைட் (Wide), நோ பால் (No Ball), பவுண்டரி (Boundary), சிக்ஸர் (Sixer), ஸ்டம்பிங் (Stumping), ரன் அவுட் (Run Out) போன்றவற்றின் விதிகளை தெரிந்து கொண்டோம். அதற்கான சைகையையும் (Signal) தெரிந்து கொண்டோம்.
அடுத்தது ஒரு கிரிக்கெட் அணி (Cricket Team) தொடங்க வேண்டும். அதற்கு 11 பேர் வேண்டும். அல்லது குறைந்தபட்சம் எட்டு ஒன்பது பேராவது வேண்டுமல்லவா. நாங்கள் உருவாக்கிய கிரிக்கெட் அணி கிட்டத்தட்ட லகான் (Lagaan) திரைப்படத்தில் அமீர்கான் உருவாக்கிய அணி போன்றதுதான். எங்கள் அணியிலிருந்து வீரர்கள் (??) அனைவருக்கும் பல வயது வித்தியாசம் உண்டு. பத்து வயது முதல் 35 வயது வரை உள்ள சுமார் பத்து பேர் கொண்ட அணி எங்களுடையது.
வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒவ்வொருவருடைய வீட்டிற்கும் சென்று அவர்களை அழைத்து வந்து ஒருங்கிணைத்து கிரிக்கெட் விளையாடுவது என்பது மிகப்பெரிய சவால். இவர்கள் அனைவரும் பள்ளி கல்லூரிகளில் படித்து கொண்டோ அல்லது ஏதேனும் வேலைக்கு செல்பவர்களாகவோ, சுய தொழில் செய்பவர்களாகவோ இருந்தார்கள். பல சமயங்களில் விளையாடுவதை வேடிக்கை பார்க்க வந்தவர்களை கூட ஆள் பற்றாக்குறையால் வலுக்கட்டாயமாக சேர்த்துக்கொண்டு விளையாடி இருக்கிறோம்.
எங்களுடன் கிரிக்கெட் விளையாடியவர்களில் என்னுடைய நினைவில் உள்ள சிலருடைய பெயரை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
சீனா புரவியான் (சீ. புரவியான்) (Slow Bowler and Batsman)
மாணிக்கம் (Left Hand Batsman)
இதயத்துல்லா (All rounder)
சர்புதீன் (All rounder)
கோடாலி செல்வம் (Wicket Keeper Batsman)
ராஜ்குமார் (Batsman) - என்னுடைய பெரியம்மா பையன்
குண்டுமணி என்கிற சந்திரசேகர்
ரமேஷ்
கிருஷ்ணகுமார்
நிஜாம் மைதீன்
மற்றும் விடுமுறை காலங்களில் எங்கள் வீட்டிற்கு வரும் என்னுடைய ஒன்று விட்ட சகோதரர்கள் அல்லது உறவினர்கள் (செல்வகுமார், கதிர், கார்த்தி, குமார், ராஜா) அல்லது எங்கள் ஊருக்கு வரும் நண்பர்கள் என அப்போதைக்கு யார் சிக்குகிறார்களோ அவர்களை கூட்டிக்கொண்டு கிரிக்கெட் விளையாட கிளம்பி விடுவோம்.
பிறகு சில காலம் கழித்து நான் ஹை ஸ்கூல் சென்ற பிறகு எங்களுடன் படித்த எங்கள் பக்கத்து ஊர் நண்பர்களுடன் பேசி அவர்கள் ஊர் அணியுடன் ஆட்டங்களை (Matches) ஆடியிருக்கிறோம். அவ்வாறு விளையாடுகையில் அணி வீரர்களின் பெயர்களை கொடுக்கும்போது அந்தக் காலத்தில் பிரபலமாயிருந்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை (Nickname) எங்களுடைய செல்ல பெயர்களாக அடைப்பு குறிக்குள் நாங்களே போட்டு கொள்வோம். கபில்தேவ், கவாஸ்கர், கே ஸ்ரீ காந்த், மனீந்தர் சிங், சிக்ஸர் சித்து, அசாருதீன், அமர்நாத் என நாங்கள் கொடுக்கும் இந்த வீரர்களை பற்றி யாருக்கு இந்தச் செல்ல பெயர்களை கொடுத்தோமோ அவர்களுக்கே தெரியாது.
கால் தடுப்பு, கையுறை (Leg PAD and Gloves) போன்றவற்றை நானே வடிவமைக்க முயற்சி செய்திருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் விளையாடும் போதோ அல்லது இங்கிலாந்தில் விளையாடும் போதோ இந்திய அணி வீரர்கள் குளிர் காரணமாக அவர்களில் சட்டைக்கு மேல் ஸ்வெட்டர் அணிந்து விளையாடுவார்கள். ஆனால் அப்போது அவர்கள் எதற்காக அப்படி அணிந்து கொண்டு விளையாடுகிறார்கள் என்று தெரியாமல் நானும் உள்ளே அணியும் கட் பனியனை சட்டைக்கு வெளியே அணிந்து கொண்டு கொளுத்தும் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க பலமுறை விளையாடியிருக்கிறேன்.
இன்று நினைத்து பார்க்கையில் என்னையறியாமல் என் முகத்தில் புன்னகை அரும்புகிறது. எங்கள் ஊர் அணியின் பெயர் 11 பிரதர்ஸ். ஏன் என்றால் எங்கள் பகுதியில் அப்பொழுது மணமேடு 7 பிரதர்ஸ் என்ற கபடி அணி மிக பிரபலம். அந்த ஊரில் அவர்கள் 7 சகோதரர்கள் கபடி குழு விளையாட்டரங்கம் என்று காவேரி கரையில் வைத்திருந்தார்கள். அதனாலேயே நானும் அணியின் பெயர் கொடுக்கும்போது 11 பிரதர்ஸ் அணி என்றே கொடுப்பேன்.
11 பிரதர்ஸ் கிரிக்கெட் அணி (11 Brothers Cricket Team) என்று பெயர் இருந்தாலும் நாங்கள் உள்ளூரிலோ அல்லது வெளியூரிலோ கிரிக்கெட் விளையாடச் செல்லும் போது பலமுறை பதினோர் பேர் இருக்க மாட்டார்கள்.
எங்கள் பக்கத்து ஊரில் பாயும் புலி கபடிக் குழு என்று ஒரு கபடி அணி இருந்தது. அதில் உள்ள பலரும் அவர்கள் ஊருக்காக கிரிக்கெட் விளையாட எங்கள் ஊருக்கு வருவார்கள். அவ்வாறு விளையாடும் போது அவர்களுடைய கபடி ஜெர்சியை அணிந்து கிரிக்கெட் விளையாடுவார்கள். பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கும்.
கோடை விடுமுறையின் போது காலை ஒன்பது அல்லது பத்து மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்குதான் திரும்பி வருவோம். பசியும் தெரியாது களைப்பும் தெரியாது. தாகமெடுத்தால் அந்தந்த ஊரிலுள்ள ஆழ்துளை அடி பம்பிலோ குடிநீர் குழாயிலோ தண்ணீர் குடித்து விட்டு எவ்வளவு கொடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விளையாடுவோம்.
இங்கு பலரும் தங்களுடைய பால்ய வயதுகளில் கிரிக்கெட்டுடனான தங்களது அனுபவங்களை எழுதினாலும் ஒவ்வொரு பதிவும் ஒருவிதமான தனித்தன்மையுடன் இருப்பதை அந்தப் பதிவுகளை வாசிக்கும்போது உணர்ந்திருக்கிறேன். ஏனென்றால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்த்தவர்களின் அனுபவம் என்பது ஒன்றல்ல என்பதே என்னுடைய மேலான எண்ணம்.
- ஆனந்தகுமார் முத்துசாமி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/nostalgic-cricket-memories-from-the-villages
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக