Ad

ஞாயிறு, 9 மே, 2021

செல்போன் ரீசார்ஜ் ரூ249; சாமி உண்டியலுக்கு ரூ51 - தேர்தல் செலவு கணக்கு வெளியிட்ட சுயேட்சை

புதுக்கோட்டை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 6-வது இடம் வந்த எழுத்தாளர் துரை குணா வெளிட்டுள்ள தேர்தல் செலவு கணக்கு பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளியிட்ட தேர்தல் வரவு செலவு

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் துரை குணா. எழுத்தாளரான இவர், அப்பகுதியில் நடக்கும் சமூக விரோத செயல்களுக்கும் எதிராக சட்ட ரீதியாக போராடி வருபவர்.

நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றத் துணியாத அதிகாரிகளுக்கு உணர்த்தும் வகையில், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக போஸ்டர் போட்டதால், வழக்கு, கைது என்று எதிர்கொண்டாலும் அதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.

துரை குணா

தனி நபராக போராடி வரும் துரை குணா நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் பேனா சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

476 வாக்குகள் பெற்று 6 வது இடம் வந்த நிலையில் தேர்தலில் போட்டியிட கிடைத்த நன்கொடையையும், செலவு செய்த விவரத்தையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார்.

பிரமாணப் பத்திரம் தயார் செய்ய வழக்கறிஞர் செலவு ரூ 2000, வேட்பு மனு தாக்கல் செய்ய கட்டணம் ரூ 5000, 5000 துண்டுப்பிரசுரங்கள் அடிக்க செலவு ரூ 7000, வேட்பாளர் மீதான வழக்கு விவரம் பற்றி நாளிதழில் விளம்பரம் செய்ய செலவு ரூ 6000, மொபைல் ரீசார்ஜ் செய்த செலவு ரூ 249, கோயிலில் சாமி கும்பிட்டு உண்டியலில் போட்டது ரூ 51, வாக்கு சேகரிக்க சென்றபோது பெட்ரோல் செலவு செய்தது ரூ 3450, வாக்கு சேகரிக்க வந்தவருக்கு முந்திரி பருப்பு வாங்கி கொடுத்த செலவு ரூ 230 என்று தெரிவித்துள்ளவர், டீ, சாப்பாடு செலவு ஏதுமில்லை. ஆங்காங்கு மக்கள் கொடுத்ததையே சாப்பிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

கிடைத்த நன்கொடை ரூ 27,650, செலவு 23,980 என்று தெரிவித்து நன்கொடையாளர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய கட்சிகள் பிரசார காலங்களில் தினசரி டீக்கு மட்டும் செலவு செய்யும் தொகையில் ஒரு தேர்தலையே சந்தித்திருக்கிறார் துரை குணா.

Also Read: புதுக்கோட்டை: 2 பேருக்கு அமைச்சர் பதவி - 30 ஆண்டுகால ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி

துரை குணாவிடம் பேசினோம், ``நண்பர்களின் உதவியால் இவ்வளவுதான் செலவு செய்தோம். அதற்கு மேல் வேறு எந்த தேவையும் இருக்கவில்லை. மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதாக பிரசாரம் செய்தேன். மொத்தம் 21 பேர் போட்டியிட்டோம். அதில் எனக்கு 476 பேர் வாக்களித்துள்ளனர். தே.மு.தி.க, அ.ம.மு.க.வு-க்கு அடுத்தபடியாக 6 இடத்தில் என்னை வைத்தனர். இதுவே பெரிய வெற்றிதான்.

பெரிய கட்சிகள் கோடிக்கணக்கில் செலவு செய்வது ஒருபக்கம் என்றால், சில சுயேச்சைகள் கூட பல லட்சம் செலவு செய்வது அனைவருக்கும் தெரியும். அப்படி செலவு செய்தும் சிலர் சொற்ப வாக்குகளே பெற்றார்கள். ஆனால், மக்கள் என் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தவறு செய்யும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவன் என்றாலும் தேர்தலில் போட்டியிடும்போது அதிகாரிகள் எந்த இடையூறும் செய்யவில்லை. மாற்று அரசியலை இப்படியும் தொடங்கலாம்" என்றார்.



source https://www.vikatan.com/news/election/pudukottai-independent-candidate-announces-election-expense

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக