கடந்த மே 17-ம் தேதி அன்று இரவு டவ்தே புயல், அதி தீவிர புயலாக மாறி குஜராத்தில் கரையைக் கடந்தது. கேரளா, ராஜஸ்தான், குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும், டாமன் & டையூ, தாத்ரா & நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது டவ்தே புயல். இந்தநிலையில், கடந்த புதன்கிழமை (மே 19) அன்று, குஜராத்தில் புயல் பாதித்த இடங்களை, அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானியுடன் இணைந்து ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி.
ஆய்வு மேற்கொண்ட பின்னர், குஜராத் மாநிலத்துக்கு முதற்கட்டமாக ரூ.1000 கோடியை உடனடி நிவாரண நிதியாக அறிவித்தார் மோடி. மேலும், புயல் பாதித்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், புயல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
நெட்டிசன்களின் விமர்சனம்!
இதனையடுத்து, ``புயல் பாதித்த மற்ற மாநிலங்களுக்கு எந்தவொரு உடனடி நிவாரணமும் அறிவிக்காத பிரதமர், குஜராத்துக்கு மட்டும் அறிவித்தது ஏன்?'' என்று சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் கிளம்பின.
Also Read: டவ் தே: காலநிலை மாற்றத்தால் தீவிரமடையும் புயல்கள் - சொல்லும் சேதி என்ன?
``குஜராத் ஒரு அதிர்ஷ்டம் பெற்ற மாநிலம். மத்தியிலிருந்து ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு இரண்டு மாதங்கள் கழித்து புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்து, பின்னர் டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்புவார்கள். ஆறு மாதங்கள் கழித்து ஏதோ ஒரு தொகை நிவாரணமாகக் கிடைக்கும். ஆனால், குஜராத்துக்குப் புயல் பாதிப்பு ஏற்பட்டதற்கு அடுத்த நாளே 1000 கோடி ரூபாய் நிவாரணம் கிடைக்கிறது'' என்று கிண்டலாகப் பதிவிடுகிறார் ஒருவர்.
மற்றொருவர், ``2016 - வர்தா, 2017 - ஒக்கி, 2018 - கஜா, 2020 - நிவர் & புரெவி. கடந்த சில ஆண்டுகளில் மேற்கண்ட பல புயல்களால் தமிழகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதுபோன்ற உடனடி நிவாரணங்கள் கிடைத்ததே இல்லை'' என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் சிலர், ``தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் புயல் பாதிப்பு ஏற்பட்டால், மாநில அரசுகள் 2,000 கோடி ரூபாய் நிவாரணம் கேட்கும். மத்திய குழு ஆய்வு செய்துவிட்டுச் சென்ற பின்னர், மத்திய அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும். கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சூறையாடியபோது தமிழகத்தில் ஆட்சி செய்த அ.தி.மு.க-வுடன் நட்புறவிலிருந்தது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அப்போதுகூட உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை. கேட்ட அளவிலான நிவாரணமும் கிடைக்கவில்லை'' என்று பதிவிட்டிருந்தனர்.
Also Read: உறுமும் எதிர்க்கட்சிகள்... கலைகிறதா ராஜா வேஷம்?
தேசியவாத காங்கிரஸின் குற்றச்சாட்டு!
நெட்டிசன்கள் ஒருபக்கம் இதுபோன்ற கருத்துகளைப் பதிவிட்டு வர, மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சியில் பங்கு கொண்டிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்திருக்கிறது. அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிர அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல்...
தேசியவாத காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் மகேஷ் டப்பாசே (Mahesh Tapase), ``மகாராஷ்டிராவில் கடலோர பகுதிகளில் இருக்கும் மக்கள் டவ்தே புயலால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றனர். ஆனால், குஜராத்துக்கு மட்டுமே நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொங்கன் பகுதியிலுள்ள மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இது. ஒருவேளை, பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கும் மட்டுமே உதவி செய்யலாம் என்பது அந்தக் கட்சியின் நிலைப்பாடாக இருக்கலாம். கொங்கன் பகுதியிலிருக்கும் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் மகாராஷ்டிர அரசு எப்போதும் துணை நிற்கும்'' என்று தெரிவித்திருக்கிறார்.
பா.ஜ.க-வின் பதிலடி!
மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ``பிரதமர் குஜராத்தில் ஆய்வு மேற்கொண்டது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், `புயல் பாதித்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வேண்டிய உதவிகளை வழங்கும்' எனத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், வேண்டுமென்றே பிரதமரின் குஜராத் விசிட் குறித்து சர்ச்சைகளை ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது மகாராஷ்டிர அரசு. மகாராஷ்டிராவைத் தவிர மற்ற எந்த மாநிலமும் இது குறித்து சர்ச்சை ஏற்படுத்தவில்லை. பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்கள்கூட கேள்வியெழுப்பவில்லை. ஏனென்றால், அவர்களெல்லாம் மத்திய அரசின் அறிக்கையைப் படித்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா உள்படப் புயல் பாதித்த அனைத்து மாநிலங்களுக்கும் நிச்சயம் மத்தியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்'' என்று விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/tauktae-gujarat-gets-sudden-releif-funds-why-other-states-dont
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக