Ad

திங்கள், 8 மார்ச், 2021

அரசியல் அன்றும்... இன்றும்... - ஒரு சாமானியனின் பார்வை! MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

டி.டி கோசம்பி அவர்கள் `பண்டைக்கால இந்தியா’ புத்தகத்தில் மேற்கண்ட வரிகளை குறிப்பிட்டிருப்பார். நமது அரசியல் சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த வரிகள் மிகச் சரியாக பொருந்தும். தற்போதைய சூழலில் நடக்கும் வன்முறைகளும் அநியாயங்களும் எல்லா காலங்களிலும் நிச்சயம் நடந்திருக்கும். வரலாற்றைப் பொறுத்தமட்டில் முடிந்தவரை நல்ல விஷயங்களைத்தான் குறிப்பிட்டிருப்பார்கள். எனவே, முன்பெல்லாம் மக்களும் ஆட்சியாளர்களும் தவறே செய்திருக்க மாட்டார்கள் என்பது சரியான வாதமாக இருக்காது. முந்தைய காலங்களில் கருத்துச் சுதந்திரம் பத்திரிகைச் சுதந்திரம் என்பது கிடையவே கிடையாது. ராஜாராம் மோகன் ராய் காலத்தில்தான்... ஏன் ராஜாராம் மோகன் ராயே ஆங்கிலேயர்களை எதிர்த்து எழுதியதால் சிறைக்குச் சென்றவர் தான். அவருக்குப் பிறகுதான் கருத்துச் சுதந்திரம் தழைக்கத் தொடங்கியது.

சரி, தற்போது அரசியல் மாற்றங்களைப் பார்ப்போம். 1973-ல் பெரியார் இறந்தபோது, கலைஞர் முதல்வர் பதவிவகித்தார். எனவே, பெரியாரை நல்மரியாதையுடன் அடக்கம் செய்யும் பொறுப்பு கலைஞருக்கு இருந்தது. கலைஞர், பெரியாரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என அனைவரின் முன்னிலையிலும் சொல்ல, அப்போது இருந்த தலைமைச் செயலாளர் 'பெரியார் எந்த அரசுப் பதவியிலும் இல்லாதபோது, பெரியாரை எப்படி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய முடியும்?' என்ற கேள்வியை எழுப்பினார்.

கலைஞர், `மகாத்மா காந்தி எந்த அரசுப் பதவியில் இருந்தார்... அவரை ஏன் ராஜ மரியாதையுடன் அடக்கம் செய்தோம்?' என்றார்.

மகாத்மா காந்தி

`அவர் ஃபாதர் ஆப் அவர் நேஷன்' என்றார் தலைமைச் செயலாளர். அதற்கு பதிலளிக்கும்விதமாக கலைஞர் `பெரியார் ஃபாதர் ஆப் தமிழ்நாடு. நீங்கள் அரசு மரியாதை செய்வதற்கான வேலையைப் பாருங்கள். அதன் விளைவாக எனது பதவி போனாலும் பரவாயில்லை' என்றார். இதை நான் தற்போது நடக்கும் ஆறுமுகசாமி கமிஷனோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஆறுமுகசாமி கமிஷன் என்பது ஜெ.ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்துவரும் கமிஷன். அ.தி.மு.க தலைமையிலான ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. எனினும், ஜெயலலிதா மரணம் குறித்த மர்மம் முறையாக விசாரிக்கப்படாமல் இருக்கிறது. இந்த இரண்டு உதாரணங்களின் மூலம், வெவ்வேறு காலகட்டங்களில் ஓர் இறப்பை அரசியல்வாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று உணர முடிகிறது.

தமிழக அரசியல் பேசிப் பேசி வளர்க்கப்பட்டது. அரசியல் பேச்சுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன. ஆனால் தற்போது நாவன்மை என்பது குறைந்துகொண்டே வருகிறது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் நல்ல போட்டியாளர்களாக இருந்தனர். அவர்கள் எவ்வளவு போட்டி போட்டுக்கொண்டாலும் வார்த்தைகளில் தெளிவாக இருந்தார்கள். ஆனால் தற்போதோ, 'சாக்லேட் பாய்', 'பிளேபாய்' என்று பேசிவருகிறார்கள்.

தேர்தல் கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் ஒரு ஸ்தாபனத்தின் தலைவரால் துண்டுச்சீட்டு இல்லாமல் பேச முடியவில்லை. திராவிடக் கழகங்கள் பல ஆளுமைமிக்கவர்களால் பார்த்து பார்த்துச் செதுக்கப்பட்டன. இன்றைக்கு அந்தக் கட்சிகளில் இருப்பவர்களின் நாவன்மை கேள்விக்குறியே..!

அண்ணா, தேர்தல் பிரசாரத்தின்போது காலை 6 மணிக்குத் தொடங்கினால் இரவு 11 மணி வரை பேசுவாராம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு முறை, ஓர் ஊரில் பேசியதை வேறு ஊரில் பேச மாட்டாராம். சில ஊர்களில் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள்தான் பேசுவார். ஆனால் அதுவும் புதிய தகவல்களாக இருக்கும்.

மக்களிடம் பேசும் முன் தங்களை, அந்த அளவுக்குத் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். அண்ணாவை பலரும் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும்தான் பார்த்திருப்பார்கள். அப்படியிருக்க, அவர் எப்போது படித்திருப்பார். தூங்கி இருப்பாரா, மாட்டாரா என்றுதான் என்னால் யோசிக்கத் தோன்றுகிறது. ஆனால், இன்றைய அரசியலில் உள்ளவர்களிடம் வாசிக்கும் பழக்கம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அவர்களிடம் கேள்வி கேட்கும்போதும், பிரசாரங்களிலும் கூட்டங்களிலும் வார்த்தை மாறினால் வாக்கியம் மாறுமே என்று உணராமல் அவர்கள் பேசும்போதும்தான் வெளிப்படுகிறது அவர்களின் கற்றல் ஆர்வம்.

கருணாநிதி

ஒருமுறை சபையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தரப்பிலிருந்து `தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி மூன்றாம்தர ஆட்சி' என்று சொல்ல, அதற்கு கலைஞர் `நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சிறிய பிழை. மூன்றாம் தர ஆட்சி அல்ல... நான்காம் தர ஆட்சி' என்றதும் சபை மௌனம் காத்தது. பின்பு கலைஞர் 'ஆமாம். வர்ணாசிர தர்மத்தின்படி பார்த்தால் பிராமணன், சத்ரியன், வைசியன், பிறகுதானே சூத்திரன். அப்படிப் பார்த்தால் இது நான்காம் தர ஆட்சி தானே’ என்றார். கேள்வி கேட்டவர் உட்பட அனைவரும் திகைத்துப்போனார்களாம்.

தற்போது சரியான கேள்வி கேட்பதும் இல்லை. கேள்வி கேட்டால் கேள்விக்கான பதிலும் கிடைப்பதில்லை. மேலும், கேள்வி கேட்பதை விட்டுவிட்டு வெளிநடப்பு என்ற பெயரால் கேள்வி-பதிலைப் புறக்கணித்துவருகிறார்கள். வெளிநடப்பு என்பதும் ஒரு வகையான உரிமையைக் கோரும் போராட்டம்தான். ஆனால், சபையில் தனது செவியையும் வாயையும் மூடிக்கொண்டு வெளிநடப்புதான் செய்ய வேண்டும் என்று முன்பே திட்டமிட்டுச் செல்வது ஏற்கத்தக்கது அல்ல. தனது சொல்லாடலின் மூலம் எதிர்க்கட்சிகளை பிழிந்து எடுத்த காலம் மாறியிருக்கிறது. இப்போதும் சரியான ஆளுமைத்திறன் கொண்டவர்களும், கற்று ஆராய்ந்து பேசுபவர்களும் கட்சிகளில் உள்ளார்கள். ஆனால் அவர்கள் ஆளும் பொறுப்பில் இல்லை. இங்கு பேசத் தெரியும் அரசியல்வாதிகள் பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதில்லை.

இன்றைய அரசியலில் நிகழும் பாசிட்டிவ் என்னவென்றால்...

ஜெயகாந்தன் தனது நூலில் ரிக்‌ஷா இழுக்கும் கூலித் தொழிலாளிகளை கதை மாந்தர்களாக பயன்படுத்தி, `மனிதனை மனிதன் இழுத்துச் செல்வது வருத்தமளிக்கும் நிகழ்வு’ எனக் குறிப்பிட்டிருப்பார். இதற்கு பதிலளிக்கும்விதமாகவே கலைஞர், கை ரிக்‌ஷா முறையை மாற்றி சைக்கிள் ரிக்‌ஷா அரசு சார்பில் ரிக்‌ஷா தொழிலாளர்களுக்கு வழங்கினார். தற்போதும் `அன்றே சொன்னார் ஸ்டாலின், நிறைவேற்றினார் எடப்பாடியார்’ என்றெல்லாம் பேசப்பட்டுவருகிறது. யார் என்ன சொன்னாலும் எனது அறிக்கையில் என்ன திட்டம் இருக்கிறதோ அதைத்தான் செய்ய முயல்வேன் என்று இல்லாமல், அரசியல் என்பது மக்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதைத் தவிர்த்து இரண்டு கட்சிகள் இடையேயான போட்டியாக மட்டுமே இப்போதைய அரசியல் சூழல் இருக்கிறது.

எடப்பாடி

நான் ஒரு 30 வருடங்களுக்கு முன்னாலுள்ள அரசியல் சூழலிலிருந்து தொடங்கலாம் என நினைக்கிறேன்.

1991-ல் அ.தி.மு.க ஏகப்பட்ட குழப்பங்களுக்குப் பின்னால் தேர்தல் களத்தைச் சந்தித்தது. அப்போது வாக்குச்சீட்டு முறைதான் பின்பற்றப்பட்டது. அந்தத் தேர்தலில் வெற்றியாளர், தோல்வியாளர் யார் என்பதைவிட, தேர்தல் ஓரளவுக்கு நேர்மையாக நடந்தது என்பதுதான் மிக முக்கியமான ஒன்று.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் பழக்கமாகிவிட்டது. தேர்தல் அறிக்கை வந்த உடனே ``நம்ம வீட்டில இப்ப நாலு ஓட்டு. அப்போ இவ்வளவு பணம் வந்துரும்" என்ற எண்ணம்தான் மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், பணம் கொடுத்தால்தான் வெற்றிபெற முடியும் என்கிற எண்ணம் அரசியல்வாதிகளிடமும் தவிர்க்க முடியாத ஒன்றாக நிலைநாட்டப்பட்டுவிட்டது.

கடந்த காலகட்டத்தில் திட்டங்களை பொறுத்தவரையில், இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி செய்தபோதிலும் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களைக் கொண்டு வரவில்லை என்றாலும், அந்தந்த ஊர்களுக்கு தேவைப்படும் அளவுக்குத் திட்டங்களை நல்லவிதமாகச் செய்தார்கள்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

இரண்டு கட்சிகள் மட்டுமே தலைதூக்கியிருந்தன. ஆனால் தற்போது அப்படி இல்லை. போட்டி அதிகமாக வருகிறது. தனித்தனியாகத் தன் பலத்தை காட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதுவே ஒரு முன்னேற்றம் என்பதுதான் என் பார்வை.

மேலும் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் வெளிப்படைத்தன்மை அப்போது இல்லை. ஊடகங்களின் பங்கு அன்றைக்கு இந்த அளவுக்கு இல்லை. அன்று இருந்த அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் பொது இடங்களில் தவறாகப் பேசியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இப்போது செய்தி பரவும் வேகம் அன்று இல்லை. மேலும் அனைவரிடமும் செய்தி சென்றடைந்ததில்லை. இதனாலேயோ என்னவோ அவர்களின் தவறும் ஊழலும் பெருமளவில் வெளிவராமல் இருந்திருக்கக்கூடும்.

1999, தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் கைகோத்த சமயம் அது. அப்போது மத்திய அரசு இப்போது உள்ளதுபோல இடையூறாக இல்லை. மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கான தேவைகளைக் கேட்டு பூர்த்தி செய்தார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி வைத்திருந்த சமயம் மத்திய அமைச்சர்கள், தமிழகத்தில் அதிகமாக இருந்தார்கள். மிக முக்கியமாகப் பார்க்கப்படும் திட்டத்தில் ஒன்றான, தங்க நாற்கரச் சாலை திட்டமும் அப்போது வந்ததுதான். இதன் மூலம் 'போக்குவரத்து என்பது இவ்வளவு சுலபமானதா' என மக்கள் உணர்ந்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை ஓட்டுச்சீட்டு முறையை பின்பற்றிய அந்தக் காலம்தான் சிறந்ததாக இருந்தது. கட்சிமீது மக்கள் ஏதோ ஒரு வகையில் ஈர்க்கப்பட்டு வாக்களித்தார்கள். ஆனால், தற்போது அந்தச் சூழல் இல்லை. அரசியலை ஒரு பார்வையாளராக இருந்து பார்க்கும்போது எல்லா காலகட்டங்களிலும் ஊழல் இருந்துகொண்டேதான் உள்ளது. ஊழலின் அளவு, திட்டத்துக்கும் காலத்துக்கும் ஏற்றவாறு மாறுகிறதே தவிர ஊழல் மாறவில்லை. ஊழல் மூலம் சம்பாதிக்கலாம் என அரசியலுக்கு வருபவர்களும், பணம் வாங்கி ஓட்டு போடும் வாக்காளர்களும் மாறும்போதுதான் அரசியல், மக்களின் நலனுக்கானதாக மாறும்.

கற்பகவள்ளி.மு

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle



source https://www.vikatan.com/news/politics/current-political-view-of-a-common-citizen-my-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக