தமிழகம் இப்படியொரு சட்டமன்றத் தேர்தலை இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் இரண்டு கழகங்களும் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. புதிதாகக் களத்துக்கு வந்திருக்கும் அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் தாக்கம் களத்தையே மாற்றியமைத்திருக்கிறது. மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன், சீமான் என ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக வலம்வந்து பிரசாரம் செய்கிறார்கள்.
தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள், 6.36 கோடி பேர். ஆண் வாக்காளர்கள் 3.08 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 3.18 கோடி பேரும் உள்ளனர். இவர்களில், முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் 8.97 லட்சம் இளைஞர்களும் அடக்கம்.
இந்த 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில், மக்களின் நாடித்துடிப்பை அறிவதற்காகக் களமிறங்கியது ஜூனியர் விகடன். 468 தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், 117 நிருபர்கள் எனப் பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியது.
விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், இல்லத்தரசிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், திருநங்கைகள் எனப் பல்வேறு தரப்பிலும் சுமார் 50,000 வாக்காளர்களிடம் இந்த மெகா கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
சர்வதேச அளவில் அறிவியல்பூர்வமாக பின்பற்றப்படும் விதிகளின் அடிப்படையில் இந்தக் கருத்துக்கணிப்புக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கவனமாக வாக்காளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பாலின விகிதம், வயது, வசிக்கும் பகுதி கிராமமா, நகரமா என்ற அடிப்படையில் வாக்காளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வாக்காளர்களின் மனநிலையைத் தெளிவாக அறியும் வகையில் கருத்துக்கணிப்பு படிவம், ஏழு கேள்விகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா... யார் முதல்வராக வர வேண்டுமென விரும்புகிறீர்கள்... தமிழகத்தில் எந்தக் கட்சி/கூட்டணி வெற்றி பெறும்... எதிர்காலத்தில் யார் முக்கியத் தலைவராக இருப்பார்... யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள்... தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்... உங்கள் தொகுதியில் எந்தக் கட்சி ஜெயிக்கும் ஆகியவையே அந்தக் கேள்விகள்.
பல தொகுதிகளிலும் வித்தியாசமான கணக்குகளும், விநோதமான பிரச்னைகளும் தேர்தல் முடிவுகளையே மாற்றுவதாக இருக்கும் சூழலில், இந்தக் கருத்துக்கணிப்பு சவாலானதாகவே இருந்தது. அதேசமயத்தில், சுவாரசியங்களுக்கும் பஞ்சமில்லை.
பாபநாசம் தொகுதிக்குச் சென்றபோது, வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயக் கூலிகள் பலரும் ஆர்வத்துடன் வந்து கருத்து தெரிவித்தனர். பெரியகுளத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்மணி ஒருவர், “இந்தமுறை காசு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஜனங்க எல்லாம் ஒரு முடிவெடுத்துட்டுத்தான் இந்த பிரசாரக் கூத்தையெல்லாம் பார்த்துட்டு இருக்காங்க” என்றபடி நம் கேள்விகளுக்கு பதிலளித்தார். பணத்தையும் தாண்டி, வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள், தனிநபர்களின் வருவாயைப் பெருக்குவதற்கான வழிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் கட்சிகளை எடைபோடுவதைக் களத்தில் பார்க்க முடிந்தது.
கூடலூர் தொகுதிக்குட்பட்ட தேயிலைத் தோட்டங்களில் பெண்கள் பலர் தேயிலை பறித்துக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கேட்டபோது, “30 வருஷமா ஓட்டுப் போட்டு ஒரு புண்ணியமும் இல்ல. இப்பவரை நல்ல தண்ணி, கரன்ட் எதுவுமே கெடையாது. வேலைவாய்ப்பைக் கொடுத்தா போதும். ஆட்சிக்கு வர்ற யாருமே அதைச் செய்யலை. புதுசா யாராவது வந்தா நல்லா இருக்கும்” என்றார் ஒரு பெண்மணி.
நன்னிலம், திருத்துறைப்பூண்டி தொகுதிகளுக்குப் போனபோது, “எதிர்காலத்தில் யார் முக்கியத் தலைவராக இருப்பார் என்ற பட்டியலில் திருமாவளவன் பெயர் இல்லையே?” என்று கோபித்துக்கொண்டார்கள். மதுரை பகுதிகளில், டாக்டர் கிருஷ்ணசாமி பெயரை வாக்காளர்களே எழுதினார்கள். வில்லிவாக்கம் தொகுதியில் ஒரு வாக்காளர், “ஏன் டி.ராஜேந்தர் பெயரைச் சேர்க்கவில்லை” என்று வாதிட்டார். சோழவந்தான் தொகுதியில் சர்வே படிவங்களுடன் தெருக்களுக்குள் சென்றதும், ஓடிவந்த முதியவர் ஒருவர், “ஓட்டுக்குப் பணம் கொடுக்க வந்தீங்களா?” என்று கண்கள் மிளிர்ந்தார். அவரைச் சமாளித்து பதிலைப் பெற்றது சுவையான அனுபவம்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட கிராமப்புறப் பகுதிகளில், அரசின் திட்டங்கள் சென்றடைந்ததை மக்கள் வரவேற்கிறார்கள். நம்மிடம் பேசிய மூதாட்டி ஒருவர், “முதியோர் ஓய்வூதியம் எல்லாம் நேரத்துலேயே ஏத்திடுறாங்க. ஆறு சிலிண்டர் இலவசமா தர்றதா அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில சொல்லியிருக்காங்க. இதெல்லாம் பெண்கள்கிட்ட வரவேற்பை ஏற்படுத்தியிருக்கு” என்றார். விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் பூ கட்டிக்கொண்டிருந்த சிலர், “விலைவாசியெல்லாம் ராக்கெட் வேகத்துல ஏறிடுச்சு. ஆறு சிலிண்டர் இலவசம்னு சொல்றவங்க, விலை ஏத்தும்போது வாய்மூடி மௌனமாத்தானே இருந்தாங்க. ஏற்கெனவே நாலரை லட்சம் கோடி ரூபாய் கடனிருக்கு. இந்த இலவசக் கணக்கை எதுல போய் எழுதுறது?” என்றார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம், பட்டவர்த்தி அருகே விவசாயி ஒருவரிடம் பேசும்போது,
“தி.மு.க ஆட்சியில் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த சர்க்கரை ஆலையை மூடிட்டாங்க. அதனால இந்தச் சுற்றுவட்டாரத்தில் வியாபாரம் இல்லை. பணப்புழக்கம் இல்லை. அந்த ஆலையை மீண்டும் திறக்கறதுக்காக நான் ஓட்டுப் போடுவேன்’’ என்றார்.
நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம் முழுவதும் கணிசமான அளவுக்கு இளைஞர்களிடம் வரவேற்பு இருப்பதைப் பார்க்க முடிந்தது. அதேபோல, நகர்ப்பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி தன்னுடைய ஆதரவு வட்டத்தைப் பெருக்கியிருக்கிறது. பல வாக்காளர்கள் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல்நலனை நம்மிடம் விசாரித்தது ஆச்சர்யமளித்தது.
சின்னக் கூட்டணிக் கட்சிகளுக்கு, சின்னமே பிரச்னையாக இருப்பது இந்த சர்வேயில் நமக்குப் புரிந்தது. பானைச் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவது சிறு சறுக்கலை அந்தக் கட்சிக்கு அளித்திருக்கிறது. இந்த வித்தியாசத்தை, ம.தி.மு.க வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளில் பார்க்க முடிகிறது.
தென்மாவட்டங்களிலும் டெல்டா பகுதியிலும் அ.ம.மு.க-வின் தாக்கம் அதிகமிருப்பது நமது கருத்துக்கணிப்பு முடிவுகளில் எதிரொலிக்கிறது. அந்தப் பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் அ.தி.மு.க வெற்றிவாய்ப்பைப் பறிகொடுப்பதற்கு அ.ம.மு.க பிரதான காரணம். பா.ஜ.க கூட்டணியால் அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப் பதையும் இந்த முடிவுகள் உணர்த்துகின்றன. சொந்தச் செல்வாக்கு, இரட்டை இலைக்கு என இருக்கும் வாக்கு வங்கி, பா.ம.க பலம் உள்ளிட்டவையால் அ.தி.மு.க வேட்பாளர்கள் தப்பிக்கிறார்கள்.
ஊர் கூடித் தேர் இழுத்திருக் கிறோம். நமக்குக் கிடைத்த கருத்துக்கணிப்பு முடிவுகளை வாசகர்கள் முன்பாக சமர்ப்பிக்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில், பணம் ஒரு பிரதான பங்கு வகிக்கும். சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், ‘எந்த அடிப்படையில் வாக்களிப்பீர்கள்’ என்ற கேள்விக்கு ‘பணம்’ என்ற பதிலை 10 சதவிகிதம் பேர் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
தேர்தலுக்குப் பத்து நாள்கள் முன்பாக முடிக்கப்பட்ட கருத்துக்கணிப்பு இது. கடைசி நேரப் பண விநியோகம், சர்ச்சைப் பேச்சுகள், அவதூறுகள் போன்றவை கள நிலவரத்தை இறுதி நேரத்தில் சில தொகுதிகளில் மாற்றலாம். ஆனாலும், மாற்றம் வேண்டுமென்பது மட்டும் ‘கணீர்’ குரலாக தமிழகம் முழுவதும் ஒலிப்பதில் மாற்றம் இருக்காது என்பதை இந்த ஜூ.வி கருத்துக்கணிப்பு முடிவுகள் தெளிவாக உணர்த்துகின்றன.
source https://www.vikatan.com/news/election/mega-survey-result-tamil-nadu-assembly-election-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக