மகிழ்ச்சியை வண்ணங்களால் வெளிப்படுத்துவது ஹோலிப் பண்டிகை என்றால், எண்ணங்களை வண்ணங்களால் வெளிப்படுத்துபவைதான் ஓவியங்கள். அதிலும் அடர்த்தியான மஞ்சள் நிறத்தை தனது ஒவ்வொரு ஓவியத்திலும் அழுத்தமாக பதிவு செய்த ஒரு மாபெரும் கலைஞனை நினைவுகூரும் நாள் இன்று.
ஆம்... இயற்கை காட்சிகள், வாழ்வியல் ஓவியங்கள், தனி உருவப் படங்கள், சுய சித்திரங்கள் என அனைத்திலும் புதிய வர்ணங்களைச் சேர்த்து தனது உணர்வுகளை வெளிப்படுத்திய ஓவியர் வின்சென்ட் வான்காவின் பிறந்தநாள் இன்று.
சிலருடைய மேதைமையை அவர்கள் நம்முடன் வாழும்போது நாம் உணர்வதே இல்லை... அப்படி, தான் வாழ்ந்த காலத்தில் அங்கீகரிக்கப்படாமல் வாழ்ந்து இறந்த மனிதர்தான் வான்கா.
1853 மார்ச் 30ம் தேதி, ஹாலந்தில் பிறந்த வான்காவிற்கு, பிறந்தது முதல் பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கவில்லை. தாழ்வு மனப்பான்மையுடன் தனிமையில் வான்கா வளர, அவரது முரட்டுத்தனத்தை சமாளிக்க முடியாமல் பல மைல்கள் தள்ளியிருந்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர். ஆனால் வான்காவிற்கு கல்வியில் நாட்டமில்லை. பதின்பருவத்தில் வெளியூரில் உறவினர் வீட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்க, அங்கும் எதையும் கற்றுத் தெரிந்துகொள்ளவில்லை.
பின்னாளில் லண்டனில் வேலை தேடும்போது தங்கியிருந்த வீட்டு உரிமையாளருடைய பெண்ணை வான்கா காதலிக்க, காதலும் அவருக்கு கைகூடவில்லை. மது, மாது என அனைத்தும் வெறுத்து அமைதியைத் தேடி மதபோதகராய் மாறுகிறார் வான்கா.
ஹாலந்து நாட்டின் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மதப்பிரச்சாரம் செய்யச்சென்ற வான்கா, அங்கே சுவர்களில் கரிக்கட்டையால் கிறுக்கியபோதுதான் தனக்குள்ளே ஓர் ஓவியன் இருப்பதை உணர்ந்தார்.
தனது 27 வயதில் வரையத் துவங்கிய வான்கா... ஏழ்மை, தனிமை, பசிக்கொடுமை, காதல் தோல்வி, நிராகரிப்பு போன்ற தனது வாழ்வின் அழுத்தங்களையெல்லாம் வண்ணங்களாக மாற்றி, தனக்கே உரித்தான அடர்நிறங்களைக் கொண்டு, 'போஸ்ட் இம்ப்ரெஷன்' ஓவியங்களை வரைந்தார். தனது ஓவியங்களில் தான் விரும்பும் மஞ்சள் நிறம் வருவதற்காக பல மதியங்களில் கடுமையான வெயிலில் நின்றதால் அவருக்கு மனம் பிறழ்ந்து போனதாகவும், அதன் காரணமாகவே காதலை மறுத்த பெண்ணுக்கு தனது காதுகளை அறுத்து பரிசளித்ததாகவும் கூறப்படுகிறது..
இயற்கை, வாழ்க்கை, சுய சித்திரங்கள் என பத்து வருடங்களில் ஏறத்தாழ 2000 உலகப் புகழ்பெற்ற ஓவியங்களை வான்கா வரைந்திருந்தாலும், அவருடைய வாழ்நாளில் ஒரே ஒரு ஓவியத்தை மட்டும்தான் அவரால் விற்க முடிந்ததாம்.
தனது ஓவியங்களில் வண்ணங்களை வாரியிறைத்த இந்த மாபெரும் கலைஞனின் வாழ்வில் கருமை என்ற நிறம் மட்டுமே நிறைந்திருந்தது. தனது 37 வயதில் தன்னைத்தானே மார்பில் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற வான்காவிற்கு, தோட்டா இதயத்தை விட்டுத் தள்ளிப் பாய்ந்திட இரண்டு நாட்கள் உயிருடன் இருந்தாராம்.
Also Read: ஐன்ஸ்டீன் ஏன் சோப் பபுல்ஸுடன் விளையாடினார்?! - புத்தம் புது காலை - 1 #6AMClub
சரியாக தற்கொலை செய்துகொள்ளக்கூடத் தெரியாத கையாலாகாதவன் என தன்னைத்தானே நொந்து கொண்ட வான்கா, உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தது, Bipolar Disorder என்ற மனநோயால் தான் என்பதை பின்னாளில் தனது சகோதரர் தியோவிற்கு வான்கா எழுதிய கடிதங்களைக் கொண்டு நிரூபித்த மனவியல் மருத்துவர்கள், வான்காவின் பிறந்தநாளான மார்ச் 30 தினத்தை பைபோலார் டிஸார்டர் தினமாக அனுசரிக்கிறார்கள்.
மன அழுத்தம், மன எழுச்சி என இரண்டும் மாறிமாறி வரும் இந்த பை போலார் டிஸார்டர் என்ற இருதுருவ மன நோயில் மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, அழுகை, தற்கொலை எண்ணங்கள் போன்றவையும், அவ்வப்போது அதீத மகிழ்ச்சி, உற்சாகம், பொறுமையின்மை போன்றவையும் ஏற்படக்கூடும். அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து தொடர்சிகிச்சை அளித்தால் இந்த நோயை நன்கு கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிறது மருத்துவம்.
வான்காவின் பிறந்தநாளும், உலக பை போலார் டிஸார்டர் விழிப்புணர்வு நாளுமான இன்று... மன நோய் பாதித்தவர்களின்,
"உணர்வுகளை மதித்திடுங்கள்...
உடனிருங்கள்...
உரையாடுங்கள்...
உற்ற சிகிச்சை அளித்து உற்றவர்களின் உயிர்களைக் காத்திடுங்கள்..." என அழைப்பு விடுக்கிறது உலக மனநோய் மருத்துவக்கழகம்.
கருமை நிறைந்த இவர்களது வாழ்வில் வானவில் வண்ணங்கள் பெருக, உடனிருப்போம்!
வான்கா கூறியதைப் போல, மனிதர்களை நேசிக்கும் கலையைக் காட்டிலும் வேறெந்த கலையும் உண்மையில் பெரிதல்ல!
source https://www.vikatan.com/arts/miscellaneous/the-life-lesson-we-should-learn-from-the-story-of-dutch-painter-vincent-van-gogh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக