Ad

செவ்வாய், 30 மார்ச், 2021

இணையத்தில் கசிந்த Mobikwik வாடிக்கையாளர்களின் தகவல்கள்... டார்க் வெப்பில் விற்பனை?

இந்தியாவின் பேமண்ட் செயலியான மொபிக்விக்-ன் (Mobikwik) வாடிக்கையாளர் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொபிக்விக், இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பேமண்ட் செயலியாக உள்ளது. இந்த செயலியில் இருக்கும் பயனர்களின் தகவல்கள், பெயர், பான் எண், ஆதார் எண் மற்றும் KYC விபரங்கள் ஆகியவை இணையத்தில் கசிந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்னை குறித்து பிரெஞ்சு எத்திகல் ஹேக்கர் ராபர்ட் பேப்டிஸ் ட்விட்டரில் ட்வீட் செய்ததுள்ளார். இந்தத் தகவல் கசிவைப் பற்றி இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் கடந்த மாதமே, அவர் பெற்ற தகவல்களுடன் ட்வீட் செய்திருந்தார்.

இந்தச் சம்பவம் மூலம் 3.5 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 8.2 TB அளவிலான தகவல்கள் கசிந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தத் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தகவல் கசிவை மொபிக்விக் நிறுவனம் முழுமையாக மறுத்துள்ளது. இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் பதிவிட்ட புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என்றும், அது போல யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம் எனவும், தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் மொபிக்விக் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. மேலும், தவறான குற்றச்சாட்டை முன் வைத்ததற்காக அந்த ஆராய்ச்சியாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மொபிக்விக் இந்த மாதத் தொடக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.

மொபிக்விக் நிறுவனம் தகவல் கசிவு குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்த போதும், ட்விட்டர் பயனர்கள் பலர் தங்களுடைய தகவல்களைத் தாங்களே இணையத்தில் பார்த்ததாகவும், மொபிக்விக் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஏமாற்ற வேண்டாம் எனவும் ட்வீட் செய்துள்ளனர்.


source https://www.vikatan.com/technology/tech-news/mobikwik-users-data-leaked-online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக