Ad

ஞாயிறு, 28 மார்ச், 2021

“ரஜினி பற்றி கருத்துக்கணிப்பைத் திணித்தார்கள்!”

”நான் தொடங்கவிருக்கும் கட்சியின் மேற் பார்வையாளர்’ என ரஜினி யால் கைகாட்டப்பட்ட தமிழருவி மணியன், ரஜினியின் அரசியல் பிரவேசம் இல்லை என்றானதும் மனம் வருந்தி அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். அப்போது முதல் அரசியல் குறித்துப் பேசவே மறுத்து வந்தவரை நீண்ட முயற்சிக்குப் பிறகு சந்தித்தேன்.

``கடந்த சில ஆண்டுகளாக ரஜினியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த உங்களுக்கு அவரது மனவோட்டம் தெரிந்திருக்கும். ‘2020 டிசம்பர் 31-ல் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும்’ என்ற ரஜினி, அடுத்த சில தினங்களிலேயே பின்வாங்கியதற்கு அவரது உடல்நலன் மட்டும்தான் காரணமா? வேறு பின்னணி ஏதும் உள்ளதா?’’

‘‘ரஜினியை கடந்த மூன்றரை ஆண்டுகளில் பலமுறை சந்தித்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன். தமிழக நிர்வாகத்தைச் சீர்திருத்து வதற்காகப் பல துறை நிபுணர்களிடமும் பேசிப் பேசி பல நல்ல தீர்வுகளை நாங்கள் உருவாக்கி வைத்திருந்தோம். அவருடைய உடல்நலன் பாதிப்பு குறித்து பலமுறை என்னிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறார். ஆனாலும், தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் ஆற்றத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தேர்தல் களத்தில் நிற்பதற்கு அவர் மனதளவில் தயாராகவே இருந்தார். ஹைதராபாத் படப்பிடிப்பு சென்று திரும்பியதும் ஜனவரி 25 அன்று சென்னையில் மாநாடு நடத்தி, நிர்வாகிகளை அறிவிக்கவும் முடிவு செய்திருந்தார். அதற்கு முன்பு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களை உருவாக்கும் பணியை என்னிடமும் அர்ஜுன மூர்த்தியிடமும் ஒப்படைத்தார். நாங்கள் அவர் விரும்பியபடியே சிறப்பாகச் செய்து முடித்தோம். ஆனால், திடீரென்று அவர் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம், அவரது குடும்பத்தினரைக் கலங்க வைத்தது.

ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பியதும் ‘உடனே சந்திக்க வேண்டும்’ என்றார். அதற்கு முன் ஒவ்வொரு முறையும் என்னை வரவேற்றுப் பேசியபோதெல்லாம் காணப்பட்ட உற்சாகமும் சுறுசுறுப்பும் அன்று அவரிடம் இல்லை. மனதாலும் உடலாலும் தளர்ந்து நின்ற ரஜினியை அன்றுதான் முதன்முதலாகக் கண்டேன். இருவரும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் சூழ்நிலைகளை விவாதித்தோம். ‘உங்கள் உடலும் மனமும் எதைச் செய்யச் சொல்கிறதோ அதைச் செய்யுங்கள். யாருடைய நிர்பந்தத்திற்காகவும் நீங்கள் எதையும் யோசிக்க வேண்டியதில்லை’ என்று சொல்லி விட்டுக் கனத்த இதயத்தோடு நான் விடைபெற்றேன். ரஜினியின் அரசியல் விலகல் பின்னணி இவ்வளவுதான்.’’

`` ‘அரசியல் இல்லை’ என்ற அறிவிப்புக்குப் பிறகு அவரிடம் பேசினீர்களா, அல்லது, சந்தித்தீர்களா?’’

‘‘இப்போது வரை அவரும் நானும் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். என் இறுதி நாள் வரை அவரிடம் நான் பூண்டிருக்கும் அன்பும் நட்பும் எந்த நிலையிலும் நிறம் மாறாது.’’

``நீண்ட காலம் பொதுவாழ்வில் இருந்துவருகிறீர்கள். அரசியலிலிருந்தோ தேர்தல் அரசியலிலிருந்தோ ஒதுங்குவதென்பது சரியான முடிவுதானா?’’

‘‘தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியையோ, வெளிப்படையான நிர்வாகத்தையோ தி.மு.க, அ.தி.மு.க என்ற இரண்டு கட்சிகளாலும் ஒருபோதும் தர முடியாது. ஐந்து முறை கலைஞர் ஆட்சி செய்தார். ஒருமுறைகூட ஊழலற்ற ஆட்சியை அவரால் வழங்க முடியவில்லை என்பதே வரலாறு. ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க-தான். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை. எம்.ஜி.ஆர் 1977 முதல் 80 வரை முதன்முறையாக முதல்வராக இருந்தபோது ஊழலுக்கு இடம் கொடாத உயரிய ஆட்சியை வழங்க முயன்றார். ஆனால், கலைஞரின் நிர்பந்தத்தால் இந்திரா காந்தி அவரது ஆட்சியைக் கலைத்தார். அதன் விளைவாக, தி.மு.க-வை எதிர்த்து அரசியல் நடத்த வேண்டும் என்றால் அந்தக் கட்சி செல்லும் களங்கம் நிறைந்த பாதையில்தான் தானும் பயணம் செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊழலுக்கு உற்சவமே நடத்தப்பட்டது. ஊழலை வளர்த்தார் அவர். ஜனநாயக மரபுகளைச் சிதைத்தார். சட்டப்பேரவையை பஜனை மடமாக மாற்றினார். அவருடைய ஊழல் ஆட்சியின் நீட்சிதான் கடந்த நான்கு ஆண்டுகள் நடந்த எடப்பாடி ஆட்சி.

இரண்டு கழகங்களிலும் உள்ள பெரும்பாலான பிரமுகர்கள் வறுமை நிலையில் வாழ்ந்தவர்கள். இன்று அவர்கள் கோடிகளில் மிதப்பவர்கள். இந்த மாற்றம் மக்கள் கண் முன்னால்தான் நடந்திருக்கிறது. மக்களே தவறுகளுக்குத் தலைவாரிப் பூச்சூடுவதால்தான் இன்றும் இந்தக் கழகங்கள் ஆதிக்க சக்திகளாக வலம்வருகின்றன. ‘நேர்மையும் பொது நலன் சார்ந்த சிந்தனையும், உள்ளவர்களைத்தான் ஆதரிப்போம்’ என்ற முடிவிற்கு முதலில் மக்கள் வர வேண்டும். ஆனால், பெரும்பான்மை மக்கள் ஊழல்வாதிகளுக்கு எதிராக இருப்பதாக நான் நம்பவில்லை. என் ஐம்பதாண்டு அரசியல் அனுபவத்தில் நான் கண்டெடுத்த கசப்பான உண்மை இது. எனவேதான் அப்படிச் சொல்ல வேண்டிய சூழல் வந்தது.

முன்பு ஒருமுறையும் இப்படி அறிவித்தேன். ஆனால், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மக்களிடம் காணப்பட்ட எழுச்சி என்னை யோசிக்கச் செய்தது. நான் விலகிவிடுவதாக அறிவித்த பின்பும் காந்திய மக்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் என் வரவை வலியுறுத்தி வேறு எங்கும் விலகிச் செல்லாமல் நின்ற நிலை என்னை நெகிழச் செய்தது. அதனால், மீண்டும் இயங்கத் தொடங்கினேன். ஆனால் ரஜினியின் அரசியல் விலகல் முடிவுக்குப் பின், ‘இரு திராவிடக் கட்சிகளையும் அதிகார நாற்காலியில் அமரவிடாமல் பார்த்துக் கொண்டால்தான் தமிழகம் நல்லரசியலை தரிசிக்க முடியும்’ என்ற என் தவிப்பும் தவமும் கலைந்துவிடவே, ‘போதும்’ என்று முடிவெடுத்தேன்.”

``அதே வேட்பாளர்கள், அதே வாரிசுகள் என்கிற இரண்டு கழகங்களின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்த பிறகு ‘ரஜினிகாந்த் வந்திருக்கலாம்’ என்று சிலர் நினைக்கலாம். உங்களுக்கு எப்படி இருக்கிறது?’’

‘‘ரஜினி விரும்பியது அரசியல் மாற்றமும், சமுதாய மாற்றமும். 2% வாக்கு வங்கி இல்லாதவர்கள்கூட, முதல்வர் நாற்காலிக் கனவோடு வலம்வரக்கூடிய சூழலில், கோடிக் கணக்கான மக்களால் நேசிக்கப்படும்போதும், அவர் தான் முதல்வராக வேண்டும் என்று விரும்பவில்லை. ‘ஆட்சித் தலைமை வேறு, கட்சித் தலைமை வேறு’ என்றார். 45 வயதுக்கு உட்பட்டவர்கள், தொகுதியில் மக்களுக்குச் சேவை செய்தவர்கள், மக்களிடையே நற்பெயர் பெற்றவர்களையே வேட்பாளர்களாக அறிவிக்க நினைத்திருந்தார். சாதி, மத, இன, மொழி சார்ந்த வெறுப்பு அரசியலை வேரறுத்து, அனைவரையும் அரவணைக்கும் அரசியலைத் தர நினைத்த அவரை வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

புள்ளிவிவரப் புலிகள் ‘ரஜினிக்கு 4%க்கு மேல் மக்கள் ஆதரவு இல்லை’ என்று கருத்துக் கணிப்பைத் திணித்தார்கள். அரசியலில் நல்ல மாற்றங்களுக்கு முன்முயற்சி எடுக்கும் தனக்கு ஆதரவாக மாபெரும் மக்கள் எழுச்சி ஏற்படும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால், ‘சேற்றில் இருப்பதே பன்றிகளுக்குச் சுகம்’ என்பதுபோல் தமிழகத்தின் பெரும்பான்மை வாக்காளர்கள் இரண்டு கழகங்களைக் கடந்து பார்வையைச் செலுத்தத் தயாராக இல்லை. வாரிசு அரசியல், பணபலம், சாதிப் பின்புலம் ஆகியவற்றின் அடிப்படையிலான கழகங்களில் வேட்பாளர் பட்டியலைப் பார்த்துவிட்டு, ‘ரஜினி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என யோசித்தால், அது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.”

``பா.ஜ.க-வை தமிழகத்தின் கழக அரசுகளை அகற்றும் சக்தியாக நீங்கள் பார்க்கிறீர்களா?’’

‘‘எண்பதுகளில் சோ அலுவலகத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி என்னை பா.ஜ.க-வில் இணையும்படி கூறியபோது, ‘நான் மதவாத அரசியலுக்கு இணங்கவில்லை. மக்களைப் பிரிக்கும் வெறுப்பு அரசியலை நான் விரும்பியதில்லை’ என்று மறுத்தேன். மிக மோசமான ஊழல் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும் பா.ஜ.க-வை ஏற்பதும் நிராகரிப்பதும் மக்கள் கையில். காந்தியக் கொள்கைகளுக்கும் பா.ஜ.க-விற்கும் காத தூரம்.’’

``எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன், சீமான்... 2021 தேர்தலில் இந்த முதல்வர் வேட்பாளர்களுக்கு உங்கள் மதிப்பெண்கள்?’’

‘‘இருபது ஆண்டுகளுக்கும் மேல் ஆசிரியப் பணியில் இருந்தவன் நான். மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எனக்குப் புதிதல்ல. ஆனால், தனிநபர்களுக்கு மதிப்பெண் வழங்க எனக்கு விருப்பம் இல்லை.’’



source https://www.vikatan.com/news/politics/tamilaruvi-manian-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக