வருடத்தில் பல நாட்கள் பல்வேறு சிறப்பு தினங்களாக கொண்டாடப்பட்டாலும் அவை எவற்றிற்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த ஏப்ரல்-1க்கு உண்டு.
அதாவது பெண்கள் தினத்தை பெண்களும், ஆண்கள் தினத்தை ஆண்களும், காதலர் தினத்தை காதலர்களும், குழந்தைகள் தினத்தை குழந்தைகளும் உரிமை கொண்டாடுவார்கள். ஆனால் இப்படி யாருமே உரிமை கொண்டாடாத ஒரு தினம் தான், இன்றைய முட்டாள்கள் தினம்.
ஏன் ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினம் என்று கொண்டாடுகிறோம் என்பதற்கு அனேக வரலாறுகள் இருந்தாலும், ஃபிரான்சில் தோன்றியதாகக் கூறப்படும் ஒரு வரலாறு மட்டும் அனைவரும் ஒப்புக்கொள்ளத் தக்கதாய் உள்ளது.
அதாவது, 1562-ம் ஆண்டில் போப் கிரிகோரி புதிய காலண்டரை அறிமுகப்படுத்தி, அதுவரை ஆண்டின் துவக்க நாளாக இருந்த ஏப்ரல்-1யை மாற்றி, ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவிக்கிறார். ஆனாலும், இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்ந்து ஏப்ரல்-1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடி வந்தனர்.
ஜனவரி மாதம் 1-ம் தேதியைப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்கு, மற்றவர்கள் பரிசுக்கூடை போல் செய்து உள்ளே வெறும் காகிதம், குப்பை, குதிரைச்சாணம் போன்றவைகளை நிரப்பி, நம்பும்படியாக அனுப்பி அவர்களை முட்டாள்களாக்கி 'ஏப்ரல் ஃபூல்' என்று சீண்டியிருக்கிறார்கள். இத்தகைய கேலிச் சீண்டல்கள் ஃபிரான்ஸிலிருந்து இங்கிலாந்து, அமெரிக்காவுக்குப் போய், பிறகு உலகமெங்கும் பரவி ஏப்ரல்-1 என்பது முட்டாள்கள் தினக் கொண்டாட்டமாகவே மாறிப்போனதாம்.
முட்டாள்கள் தினம் தோன்றிய வரலாறு இவ்வாறிருக்க, முட்டாள் என்ற வார்த்தை தோன்றியதற்கு ஒரு புத்திசாலித்தனமான விளக்கம் காணப்படுகிறது.
முட்டாள் எனும் சொல் அறிவாளி என்ற சொல்லுக்கு எதிர்வார்த்தை என்றோ, அறிவற்றவர்கள் என்றோ பொருள் கிடையாது. அது ஒரு காரணப் பெயர்ச்சொல் என்று கூறும் தமிழறிஞர்கள், அதை இப்படி விளக்குகின்றனர்.
பண்டைய காலத்தில் கோயில்களில் சப்பரம் தூக்குவதற்கென்று சிலரும் அவர்களுக்கு உதவ சிலரும் நியமிக்கப்பட்டிருப்பார்கள். கோயில்களிலேயே தங்கி பணிபுரியும் இவர்களுக்கு உணவும், உடையும் அளித்து, வாழ வழிவகுத்து வந்தனர் கோயில்களின் அறங்காவலர்கள்.
நாட்பட நடைபெறும் திருவிழாக் காலங்களில், இவர்கள் சப்பரம் தூக்கிச் செல்லும்போது, பொதுமக்கள் இறைவனை தரிசனம் செய்யவேண்டி, இடையிடையே சப்பரம் சிறிது நிற்கும்.
அச்சமயத்தில் சப்பரம் தூக்கிகள் தோளில் இருந்து இறங்கும் சப்பரத்தை, அவரின் உதவியாளர்கள் தங்கள் கையிலிருக்கும் முட்டுகளால் முட்டுக் கொடுத்து சப்பரத்தை நிலைநிறுத்துவார்கள்.
சப்பரத்திற்கு முட்டுக் கொடுப்பதை தவிர வேறு வேலை ஒன்றும் தெரியாத அவர்களை
'முட்டு ஆள்' என்று அழைக்க ஆரம்பித்து, பிற்பாடு வேறு எதுவும் யோசிக்கத் தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டிருப்பவர்களை "முட்டாள்கள்" என்று அழைப்பது வழக்கமாகிவிட்டதாம்.
ஆக... அறிவாளிக்கு எதிர்ச்சொல் முட்டாள் இல்லை. 'அறிவிலி' என்பதே சரி. எனவே ஏப்ரல்-1 முட்டாள்கள் தினம் அல்ல, அது அறிவிலிகள் தினமே!
source https://www.vikatan.com/oddities/international/history-of-april-fool-day
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக