Ad

திங்கள், 29 மார்ச், 2021

`வித்தை கரடிகளின் பின்பு இவ்வளவு கொடுமை கதைகளா?' - விலங்குகளின் மீட்பர் கீதா

கற்காலம் முதல் தற்போதைய கணினி யுகம் வரை மனிதர்களுக்கு அலாதியான ஆர்வத்தையும் வியப்பையும் உண்டாக்குவதில் வனவிலங்குகள் முதன்மையாகத் திகழ்கின்றன. அதனாலேயே விலங்குகளை மையப்படுத்திய சட்டத்துக்குப் புறம்பான குற்றச்செயல்கள் அதிகளவில் நடக்கின்றன. வனப்பகுதியில் அமைதியாக வாழ்ந்துவரும் விலங்குகளுக்கு மனிதர்களால் ஏராளமான இடையூறுகள் தொடர்வதால், மனித - விலங்கு மோதல்கள் காலங்காலமாக வெவ்வேறு வடிவங்களில் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

கீதா சேஷமணி

இதுபோன்ற பிரச்னைகளைச் சரிசெய்யவும், வனவிலங்குகளின் நலனுக்காவும் வியக்கத்தக்க சேவைகளைச் செய்துவருகிறார் கீதா சேஷமணி. டெல்லியைச் சேர்ந்த இவர், `வைல்டு லைஃப் எஸ்.ஓ.எஸ்' அமைப்பைத் தொடங்கி, ஏராளமான வனவிலங்குகளுக்கு மறுவாழ்வு கொடுத்து அவை மகிழ்ச்சியான சூழலில் வாழ்வதற்கு ஆக்கபூர்வமான பணிகளைச் செய்துவருகிறார். அவை அனைத்துமே `வாவ்' ரகம்தான்!

``கரடிகளை ஊருக்குள் கொண்டுவந்து வித்தை காட்டும் செயலுக்கு, அவை பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டன. இதைத் தடுக்க, இந்தியா முழுக்க மலைவாழ் பழங்குடியின மக்களைச் சந்தித்தோம். அவர்களின் வாழ்க்கை முறை, விலங்குகளை வேட்டையாடும் தொழில், விலங்குகளை வித்தைகாட்ட பழக்கப்படுத்துவது என அவர்களின் செயல்பாடுகள் பலவற்றையும் அறிந்தோம். அவை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தன.

கீதா சேஷமணி

கரடிகளை வைத்து வித்தை காட்டும் பழக்கம் முகலாயர்கள் காலத்தில்தான் தொடங்கியது. காட்டில் இருந்து கடத்திவரப்பட்டு, மன்னர் குடும்பத்தினருக்குக் கேளிக்கைத் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்ட கரடிகள், பின்னர் காலமாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு பொழுதுபோக்குத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன. இறுதியாக, கரடிகளை ஊருக்குள் கொண்டுவந்து வித்தை காட்டி பிழைப்பு நடத்தி வந்தனர். இதற்காக கரடிகளை வேட்டையாடுவது முதல் வித்தை காட்டும் தொழிலுக்குப் பழக்கப்படுத்துவது வரையிலான அனைத்து செயல்களுமே மனதை உறைய வைக்கும் கொடுமைகள்.

ஏப்ரல் - மே மாதங்களில்தாம் கரடிகள் இனச்சேர்க்கை செய்யும். அடுத்த 6 - 7 மாதங்களில் பெண் கரடியானது குட்டியை பிரசவிக்கும். நன்றாக வளர்ந்த நிலையில் சராசரியாக ஆண் கரடி 100 கிலோவும், பெண் கரடி 80 கிலோ எடையிலும் இருக்கும். ஆனால், பிறக்கும் குட்டியானது 350 - 450 கிராம் எடையில் இருக்கும். அது கண் திறக்க சராசரியாக ஒரு மாதமாகும். அந்தக் குட்டிக் கரடியானது பார்க்க பூனைக்குட்டி உருவத்தில்தான் இருக்கும். அதன் உடல்நிலையைத் தேற்ற தாய் கரடி எவ்வளவு மெனக்கெடும் என யூகித்துக்கொள்ளலாம். ஆண் குட்டியை ஒரு வயது வரையும், பெண் குட்டியை இரண்டு வயது வரையும் பராமரித்துவிட்டு, அவற்றைத் தாய் கரடி தனித்துவாழ விட்டுவிடும். இந்த இடைப்பட்ட காலத்தில், தன் குட்டிக்கு எந்த ஆபத்தும் நேராமல் தடுக்க தாய் கரடி பாதுகாப்பாக இருந்தாலும்கூட, அதைக் கொன்று குட்டியைக் கடத்திவிடுவார்கள்.

கீதா சேஷமணி

பின்னர், குட்டிக் கரடிகளின் தலையில் பலமாகத் தாக்குவது உட்பட பல வகையிலும் தொந்தரவு செய்வார்கள். இதனால், பார்வைத்திறன் இழப்பு முதல் உயிரிழப்பு வரை விவரிக்க இயலாத சோதனைகளை கரடிகள் எதிர்கொள்ளும். இதையெல்லாம் தாண்டி உயிர் பிழைக்கும் கரடிகளையே வித்தை காட்டப் பயன்படுத்துவார்கள். இந்தக் காட்சிகளையெல்லாம் கண்கூடாகப் பார்த்து மனம் வெதும்பினோம். பின்னர், இந்தக் குற்றச் செயல்கள் குறித்து பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். படிப்படியாக நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு, தாங்கள் வைத்திருந்த கரடிகளையெல்லாம் எங்களிடம் நம்பி ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட கரடிகளை நாங்கள் மகிழ்ச்சியான சூழலில் வளர்க்கிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் கரடிகள் வித்தை காட்டும் செயலுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

ஒரு கரடி சராசரியாக 25 - 30 வயது வரை மட்டுமே உயிர்வாழும். இந்தியாவில் தற்போது 8,000 - 12,000 கரடிகள் மட்டுமே வாழ்வது குறிப்பிடத்தக்கது.

கரடிகள்

``வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், விலங்குகள் பாதை மாறி ஊருக்குள் நுழைவது அதிகரிக்கிறது. தவிர, கோடைக்காலம் உட்பட பல நேரங்களில் உணவு தேடி ஊருக்குள் நுழையும்போது அவை மனிதர்களாலும் பிற உயிரினங்களாலும் துன்புறுத்தப்படுகின்றன. இதில், மான், சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றன. இதேபோல வனப்பகுதியில் மற்றொரு விலங்கினத்தால் தாக்கப்பட்டும், நோய்வாய்ப்பட்டும் விலங்குகள் சிக்கல்களைச் சந்திக்கும். இதுபோன்ற காரணங்களால், உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படும் பெரும்பாலான விலங்குகளுக்கு வனப்பகுதியில் மீண்டும் இயல்பாக உயிர் வாழ்வது கடினம்தான்.

அந்த நேரத்தில் குழந்தைகளைப்போல பராமரித்தால் மட்டுமே குறிப்பிட்ட காலத்திற்காவது அவற்றால் மகிழ்ச்சியாக வாழ முடியும். அதற்கு வழிவகை செய்யும் கடும் சவாலான பணியைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். நாடு முழுக்கவுள்ள எங்களுடைய பல்வேறு மறுவாழ்வு மையங்களில் யானை, சிறுத்தை, காண்டாமிருகம், புலி, முதலை, நாய், பூனை, மாடு, கழுதை, குதிரை, ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள், பறவைகள் உள்ளிட்ட ஏராளமான வனவாழ் உயிரினங்களைப் பராமரிக்கிறோம்.

கீதா சேஷமணி

மூங்கில் தோட்டம், ஊஞ்சல் வசதி, தினமும் ஒரு மணிநேரக் குளியல், அன்றாடம் இரண்டு முறை நடைப்பயிற்சி, பிரத்யேக உணவுகள் என, உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் ஏராளமான யானைகளைப் பராமரிக்கிறோம். இந்த மையத்துக்கு அருகிலேயே யானைகளுக்கான பிரத்யேக மருத்துவமனையை நடத்துகிறோம். அதில், யானைகளுக்கு மிகச் சிக்கலான சிகிச்சை முறைகளை மேற்கொள்கிறோம்."

- இந்த அமைப்பினால் நாடு முழுக்க நிர்வகிக்கப்படும் பதினொரு மறுவாழ்வு மையங்களும், மத்திய அரசின் மேற்பார்வையிலும், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலும் இயங்குகின்றன. 400-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இந்தியாவில் வனவிலங்குகள் நலனுக்கான மிகப்பெரிய அமைப்பாகவும் இது திகழ்கிறது.

கீதா சேஷமணி

``மனிதர்களை குஷிப்படுத்த கரடிகள் துன்புறுத்தப்படுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டோம். ஆனால், மூட நம்பிக்கை உள்ளிட்ட பல காரணங்களால் யானை தந்தம், காட்டாமிருகக் கொம்பு, மான் கொம்பு, சில விலங்குகளின் தோல்களுக்குப் பெரும் சந்தை மதிப்பைச் சிலர் கட்டமைத்துள்ளனர். இதனால், சட்டத்துக்குப் புறம்பாக வனவிலங்குகள் கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்கவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்தியா முழுக்க அனைத்து வனவிலங்கு சரணாலயங்களுக்கும் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு வனப்பகுதியும் தனித்துவமானது. இயற்கையின் கொடையான வனங்களையும் வனவிலங்குகளையும் காப்பாற்ற முன்வராவிட்டாலும், அதன் நலனுக்கு எதிரான செயல்களைச் செய்யாமல் இருப்பதும் நன்மையாகவே அமையும். இதில் ஏதாவது ஒன்றை நாம் செய்தாலும்கூட விலங்குகளும் மகிழ்ச்சியாக வாழும்" என்று புன்னகையுடன் முடிக்கிறார் கீதா.

கீதாவின் விரிவான பேட்டியை இன்று வெளியான அவள் விகடன் இதழில் படிக்கலாம்.



source https://www.vikatan.com/news/environment/story-of-geeta-seshamani-who-rescued-wild-animals-from-cruelties

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக