முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. ஆ.ராசாவுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ` கண்ணியம் குறைவான பேச்சை தலைமை ஏற்காது’ என சூசுகமாக அறிவுரை வழங்கியிருந்தார். ஆனால், தனது பேச்சை வெட்டி ஒட்டி திரித்துப் பரப்புகின்றனர் என ஆ.ராசா விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் தேர்தல் பரப்புரையில் இது குறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்பட்டு தழு தழுத்தார்.
பரப்புரையில் பேசிய அவர், `` இதை நான் பேச வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் தாய்மார்களைப் பார்த்தால் பேசுகிறேன். எனது தாயைப் பற்றி கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் ஆ.ராசா.” என்றவர், சற்று உணர்ச்சிவசப்பட்டு தழு தழுத்து நின்றார்.
ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசிய அவர்,`` நான் சாதரண குடும்பத்தில் இருந்து வந்தவன். அதனால் தான் என்னைப் பற்றி இப்படி பேசுகிறார்கள். என் தாய் கிராமத்தில் வாழ்ந்தவர். விவசாயம் செய்தவர். இரவு பகலும் பாடுபட்டவர். அவர் இறந்துவிட்டார். அவரைப் பற்றி தரக்குறைவாக, இழிவாக பேசியிருக்கிறார்கள். முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், நாளை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பெண்களின் நிலை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.
Also Read: `என்னைப் பற்றி பேச முதலில் தகுதி வேண்டும்’ - ஆ.ராசாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!
நான் எனக்காக பேசவில்லை. ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் தாய்தான் உயர்ந்த ஸ்தானம். அப்படிப்பட்ட தாயைப் பற்றியே தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள். தாயப் பற்றி யார் தரக்குறைவாக பேசினாலும் அவர்களை ஆண்டவன் தண்டிப்பான்” என்றார்.
இந்த நிலையில் ஆ.ராசாவைக் கண்டித்து அ.தி.மு.க-வினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/edappadi-palanisamy-cries-on-insulting-speech-about-mother-by-a-raja
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக