Ad

செவ்வாய், 30 மார்ச், 2021

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஆகிறாரா ரவிச்சந்திரன் அஷ்வின்?!

2021 ஐபிஎல் தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்க எல்லா அணிகளும் தீவிர பயிற்சியில் இறங்கிவிட்டன. அனைத்து அணிகளின் கேப்டன்களும் களத்தில் இருக்க, டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். அதனால், அந்த அணியின் புதிய கேப்டன் யார் என்கிற சஸ்பென்ஸ் நீடித்துவந்த நிலையில் அணியின் புதிய கேப்டன் யார் என்பதை இன்று அறிவிக்க இருக்கிறது டெல்லி அணி நிர்வாகம்.
கைப், பாண்டிங்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட்டை நியமிக்கலாம் என டெல்லி அணியின் உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். ஆனால், இம்முடிவுக்கு அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்ட்டிங் உடன்படவில்லை எனத் தெரிகிறது. "அனுபவம் வாய்ந்தவர் கேப்டனாக இருப்பதுதான் பலம். ரிஷப் பன்ட்டுக்கு இன்னும் காலம் இருக்கிறது" என பான்ட்டிங் டீம் மீட்டிங்கில் சொன்னதாகத் தெரிகிறது.

அட்டவணைப்படி, டெல்லி அணி இம்முறை லீக் போட்டிகளில் அதிகபட்சமாக 5 போட்டிகளை கொல்கத்தாவிலும், 4 போட்டிகளை அஹமதாபாத்திலும் விளையாடவிருக்கிறது. 3 போட்டிகள் மும்பையிலும், 2 போட்டிகள் சென்னையிலும் நடைபெற இருக்கின்றன. இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணிக்குமே ஹோம் கிரவுண்ட் அட்வாண்டேஜ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரவிச்சந்திரன் அஷ்வின்

கொல்கத்தா பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம். இங்கே 200 ரன்கள் எல்லாம் சர்வசாதாரணமாக அடிக்கப்படும். அஹமதாபாத் பிட்சோ எந்த நேரம் எப்படி மாறும் என்றே கணிக்கமுடியாததாக இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - இங்கிலாந்து தொடரில் முதல் போட்டியில் இந்தியா 124 ரன்கள்தான் அடித்தது. கடைசி டி20 போட்டியில் 224 ரன்கள் அடித்தது. அதனால் இந்த பிட்ச்களின் தன்மைக்கேற்ப உடனுக்குடன் முடிவெடுத்து பெளலிங் ரொட்டேஷன் செய்யவேண்டும். இதற்கு அனுபவம் வாய்ந்த கேப்டன் தேவை என விரும்புகிறார் ரிக்கி பான்ட்டிங்.

இதனால் ரவிச்சந்திரன் அஷ்வின், அஜிங்கியா ரஹானே, ஷிகர் தவான் என்கிற மூவரில் யாரிடம் கேப்டன் பதவியைத்தரலாம் என்கிற தீவிர அலசல் நேற்றோடு முடிவடைந்திருக்கிறது.

இதில் தற்போதைய நிலவரப்படி முதலிடத்தில் இருப்பவர் ரவிச்சந்திரன் அஷ்வின். 2018 மற்றும் 2019 சீசன்களில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தவர் அஷ்வின். இதற்கு முன்பாக 2009 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தவர், சூப்பர் கிங்ஸ் தடை செய்யப்பட்ட 2016 மற்றும் 2017 சீசன்களில் புனே அணிக்காக விளையாடினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இவருக்கு நீண்டகால அனுபவம் இருக்கிறது. பஞ்சாப் அணியின் கேப்டனாக 28 போட்டிகளில் தலைமையேற்று விளையாடி, 12 போட்டிகளில் வெற்றியும், 16 போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறார் அஷ்வின். இவர் கேப்டனாக இருந்த 2 சீசன்களிலும் பாயின்ட்ஸ் டேபிளில் 6 மற்றும் 7-வது இடங்களையே பிடித்தது பஞ்சாப் அணி. ஆனால், பெளலராகத் தொடர்ந்து ஐபிஎல்-ல் சிறப்பாகவே செயல்பட்டு வந்திருக்கிறார் அஷ்வின்.

சிறந்த விளையாட்டு வீரர் - ரவிச்சந்திரன் அஷ்வின்

கடந்த சீசனில் இரண்டாவது அதிகபட்ச ரன் ஸ்கோரர் ஷிகர் தவான். 15 போட்டிகளில் விளையாடி 618 ரன்கள் அடித்திருந்தார் தவான். ஆனால், இவருக்கு கேப்டன்ஸி அனுபவம் இல்லையென்பதால் அஷ்வினுக்கே டெல்லி அணிக்கு தலைமையேற்கும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

இன்னும் சற்று நேரத்தில் புதிய கேப்டன் யார் என்கிற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.



source https://sports.vikatan.com/ipl/ravichandran-ashwin-expected-to-the-captain-of-delhi-capitals

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக