லோ பிளட் சுகர்... இன்று பலரையும் பயமுறுத்தும் பிரச்னை. வீட்டுக்கு ஒரு சர்க்கரை நோயாளி என்று ஆகிவரும் இன்றைய காலகட்டத்தில், ரத்த சர்க்கரை அளவு குறைந்தால் அதற்கான அறிகுறிகள் என்னென்ன, என்ன முதலுதவி கொடுக்கப்பட வேண்டும், சிகிச்சை என்ன என்பது பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமாகிறது.
அபாய அளவுகளில் ரத்த குளுக்கோஸ் அளவு குறைவதை 'ஹைப்போக்ளைசீமியா (Hypoglycaemia)' என்று சொல்வோம். 'ஹைப்போ' என்றால் குறைவு, 'க்ளைசீமியா' என்றால் ரத்த குளுக்கோஸ் அளவு என்று பொருள். ஹைபோக்ளைசீமியாவில் மூன்று படிநிலைகள் (Levels) உண்டு.
முதல் நிலை
70 mg/dl அல்லது 3.9 mmol/L அளவுக்குக் கீழ் ரத்த குளுக்கோஸ் அளவுகள் செல்வது. இந்த நிலையை எய்தும்போது நமது உடல் 'அலாரம்' அடிக்கத்தொடங்கும்.
- இதயத்துடிப்பு அதிகரித்தல்
- சோர்வு
- படபடப்பு
- நடுக்கம்
- வியர்த்துப்போதல்
- கோரப்பசி
- பதற்ற நிலை போன்றவை ஏற்படும்.
இதற்கடுத்த நிலை
LEVEL 2
இதில் ரத்த குளுக்கோஸ் அளவுகள் 54 mg/dl அல்லது 3 mmol/L என்ற அளவுக்குக் கீழ் செல்லும்.
இந்த நிலையின் அறிகுறிகள்
- குழப்பநிலை
- உளறுவது, அரற்றுவது போன்ற அசாதாரண நடவடிக்கைகள்.
- பார்வை மங்குதல் போன்றவை ஏற்படும்.
அதற்கடுத்த நிலையில் இன்னும் ரத்த குளுக்கோஸ் அளவுகள் குறைந்தால் வலிப்பு ஏற்படலாம். மயக்கநிலைக்குச் சென்று, இறுதியில் மரணம் சம்பவிக்கலாம்.
ஹைப்போக்ளைசீமியா யாருக்கெல்லாம் வரலாம்?
சிசுக்கள் மற்றும் முதியோர்கள் சரியாக உணவு எடுக்காத நிலையில் எளிதில் இந்த நிலை ஏற்படலாம்.
நல்ல உடல்நிலையில் இருக்கும் இளைஞர், இளைஞிகளுக்கு அவ்வளவு சீக்கிரம் ஹைப்போ ஏற்படாது. ஆயினும் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது அல்லது சாப்பிடாமல் மிக அதிக உடல் உழைப்பில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகள் ரத்த குளுக்கோஸ் அளவுகளை அபாய கட்டத்துக்குக் குறைக்கக் கூடும்.
ஹைப்போக்ளைசிமீயா ஏற்பட மிக அதிக வாய்ப்புள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள். நீரிழிவு நோய்க்கு மாத்திரையோ இன்சுலினோ எடுப்பவர்கள், சரியான கால இடைவெளியில், சரியான அளவுகளில் உணவு உண்ணாமல் இருந்தால் அவர்களுக்கு ரத்த குளுக்கோஸ் அளவு குறையும் வாய்ப்பு அதிகரிக்கும். இத்தகையோரை அதிக கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். நிச்சயம் முதியோர்கள், அதிலும் நீரிழிவு நோயாளிகள் இருக்கும் வீட்டில் குளுக்கோமீட்டர் (Glucometer) உபகரணம் இருப்பது சிறந்தது. இதன் விலை ஏறக்குறைய 1,000 ரூபாய்தான் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மேற்சொன்ன ஹைப்போக்ளை சீமியாவுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உடனே ரத்த குளுக்கோஸ் அளவுகளைப் பார்த்து, 70 mg/dlக்குக் கீழ் இருப்பதை உறுதி செய்தால் உடனடியாக 15 கிராம் அளவு குளுக்கோஸ் பொடியைத் தண்ணீரில் கலந்து பருகக் கொடுக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதும் ரத்த குளுக்கோஸ் அளவுகள் 70 mg/dl க்கு குறைவாக இருப்பின் மீண்டும் ஒருமுறை 15 கிராம் குளுக்கோசை தண்ணீரில் கலந்து பருகக் கொடுக்க வேண்டும்.
ஒருவேளை வீட்டில் குளுக்கோமீட்டர் இல்லாத நிலை இருப்பினும் ரத்த குளுக்கோஸ் குறைபாட்டுக்கான அறிகுறிகள் தென்படின் மேற்சொன்ன சிகிச்சையை வழங்கலாம். நீரிழிவு குறைபாட்டு நோய் இருப்பவர்கள் உள்ள வீடுகளில் கட்டாயம் குளுக்கோஸ் இருப்பது சிறந்தது. ஒருவேளை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குளுக்கோஸ் இல்லாவிடில், 15 கிராம் சீனி/ சர்க்கரையை நீரில் கலந்துகொடுத்து குளுக்கோஸ் அளவுகளை ஏற்ற முடியும்.
சாக்லேட், மிட்டாய்கள் நான்கை வாயில் போட்டுக் கரைத்தும் குளுக்கோஸ் அளவுகளை உயர்த்த முடியும். ஒருவேளை தாங்கள் காணும்போது நோயாளி மயங்கிய நிலையில் இருந்தால் உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அங்கு அவருக்கு ரத்த நாளம் வழியாக டெக்ஸ்ட்ரோஸ் திரவம் ஏற்றப்படும். உடனே நல்ல முன்னேற்றம் அடைவதைக் காண முடியும்.
ஹைப்போக்ளைசீமியாவை தவிர்ப்பது எப்படி?
* உணவை சீரான இடைவெளியில் உட்கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் ரத்த சர்க்கரை அளவுகள் அபாயகரமான அளவுகளில் குறைவது ஆபத்தானது. காரணம், ஒவ்வொரு முறையும் மயக்கம் ஏற்பட்டோ, தலைசுற்றியோ கீழே விழவும், அதனால் எலும்பு முறியவோ, தலையில் அடிபடவோ வாய்ப்பு உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தங்களின் உணவை தள்ளிப்போடக் கூடாது.
* உணவு உண்ணும் அளவுகளைக் குறைத்தால், உண்ணும் மாத்திரைகள் மற்றும் இன்சுலின் அளவுகளையும் மருத்துவர் அறிவுரையின் பேரில் குறைத்துவிட வேண்டும்.
* மது அருந்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்களுக்கு குளுக்கோஸ் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
* ரத்த குளுக்கோஸ் அளவுகள் குறைவதை சரியான நேரத்தில் உடனே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுப்பது சிறந்தது.
எல்லாவற்றையும்விட, ஹைப்போக்ளைசீமியா நிலை ஏற்படாமல் தொடர்ந்து பராமரிப்பது மிக முக்கியம்.
source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-the-symptoms-and-first-aid-of-low-blood-sugar-hypoglycaemia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக