“சசிகலா மீது எனக்குச் சந்தேகமும் இல்லை; வருத்தமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை நான்காண்டுக் காலம் சசிகலா சிறையில் இருந்திருக்கிறார். மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால், ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற தற்போதைய கட்சி அமைப்பை சசிகலா ஏற்றுக்கொண்டால், அவரை இணைத்துக்கொள்வதைப் பற்றிப் பரிசீலிக்கலாம்”-அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சமீபத்தில் உதிர்த்த வார்த்தைகள் இவை.
2017, ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பன்னீர் அணியின் சார்பாக மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சசிகலா - எடப்பாடி அணியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையைப் பிரசார வாகனத்தில் வைத்துக்கொண்டு தெருத் தெருவாக வாக்குச் சேகரித்தது பன்னீர் அணி. ‘ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலா சதி செய்துவிட்டார்’ என்று மேடைக்கு மேடை பேசினார்கள். அதன் பிறகு எடப்பாடி - பன்னீர் தரப்புகள் இணைந்தன. இவர்கள் நாடகத்தில் சசிகலா கழற்றிவிடப்பட்டார். அப்போதெல்லாம் சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசவில்லை பன்னீர்.
டபுள் ரோல் பன்னீர்
கடந்த ஜனவரி 27-ம் தேதி சிறையிலிருந்து சசிகலா விடுதலையானவுடன், அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டியதற்காக திருநெல்வேலி சுப்பிரமணிய ராஜா, தேனி சின்னராஜா, திருச்சி சாமிநாதன், மயிலாடுதுறை குத்புதின், கர்நாடகா யுவராஜ் ஆகியோர் அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். அந்த உத்தரவில் எடப்பாடியுடன் இணைந்து கையெழுத்திட்டதும் இதே பன்னீர்தான். அப்போதும் எதுவும் பேசவில்லை பன்னீர். ஆனால் இன்று, “சசிகலாவைக் கட்சியில் இணைத்துக்கொள்வதைப் பற்றிப் பரிசீலிப்போம், அவர்மீது சந்தேகமில்லை” என்கிறார். “சசிகலாவுக்கு அ.தி.மு.க-வில் நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை” என்று முதல்வர் பழனிசாமி, கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் சொன்ன பிறகும், பன்னீரின் இந்த நாடகம், எடப்பாடி முகாமில் பீதியைக் கிளப்பியிருக்கிறது!
அ.தி.மு.க-வின் இரண்டாம்கட்ட தலைவர் ஒருவரிடம் பேசினோம். “தி.மு.க தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் டம்மியான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க எதிர்பார்த்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி அவர்களுக்கு மறுக்கப்பட்டு, ஆயிரம் விளக்கு தொகுதி அளிக்கப்பட்டது. ஆயிரம் விளக்கு தொகுதியை பன்னீரின் ஆதரவாளரான ஆதிராஜாராம் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரை கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு எதிராகக் களமிறக்கியுள்ளனர். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கட்டமைப்பே இல்லாத பா.ம.க-வுக்கு அதை ஒதுக்கி உதயநிதியின் வெற்றிக்கு உறுதுணை செய்திருக்கிறார் பழனிசாமி. தி.மு.க-வில் தங்க தமிழ்ச்செல்வன் விரும்பாவிட்டாலும், போடி தொகுதியில் வற்புறுத்தி நிற்கவைத்திருக்கிறது தி.மு.க தலைமை. இதையெல்லாம் முன்வைத்து, எடப்பாடி தி.மு.க-வுடன் மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டாரோ என்று சந்தேகப்படுகிறார் பன்னீர்செல்வம்.
சசிகலா ஆதரவு ஏன்?
இன்னொரு பக்கம் சசிகலாவை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியதால், தென் மாவட்டங்களில் பன்னீருக்கும் அவரின் ஆதரவு வேட்பாளர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. 10.5 வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம், தேவேந்திர குல வேளாளர் பெயர் விவகாரத்தால் அதிருப்தியிலிருக்கும் பிற சமூகங்கள் உள்ளிட்ட பிரச்னைகளால் தென்மாவட்ட வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பைச் சந்திக்கிறார்கள். போடிநாயக்கனூரில் பன்னீரே தடுமாற வேண்டியிருக்கிறது. இவையெல்லாம், தனக்கெதிராகப் பின்னப்படும் சூழ்ச்சி என்று பன்னீர் நினைக்கிறார். தானும், தன்னுடைய ஆதரவு வேட்பாளர்களும் வெற்றிபெறவில்லை என்றால், கட்சியிலிருக்கும் ‘ஒருங்கிணைப்பாளர்’ பதவியைக்கூட இழக்க நேரிடும் என்பது பன்னீருக்கு நன்றாகத் தெரியும். இதனால்தான் சசிகலாவை ஆதரித்து, அவர் சார்புள்ள முக்குலத்தோர் சமூக வாக்குகளைத் தனக்கு ஆதரவாகத் திருப்பப் பார்க்கிறார் பன்னீர். இந்த வாக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் கிடைத்துவிட்டாலே பல தொகுதிகளைக் கைப்பற்றிவிடலாம் என்பது பன்னீரின் கணக்கு. இதற்காகத்தான் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கிறார்” என்றார் விரிவாக.
இரண்டாம்கட்டப் பிரசாரமாக கொங்கு மண்டலத்தில் சுற்றிவரும் பன்னீர், மார்ச் 24-ம் தேதி சேலத்துக்குச் சென்றார். அதற்கு முதல் நாள்தான் பன்னீரின் சசிகலா ஆதரவு பேட்டி ஒளிபரப்பாகியிருந்தது. அந்தப் பேட்டியில் சசிகலாவைப் பற்றிப் பேசியதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை பன்னீர்... “ஜெயலலிதாவுக்குப் பிறகு நிரந்தர முதல்வர் என்று யாருமே இல்லை. அவர் விரும்பிக் கேட்டுக்கொண்டதால்தான் இந்தமுறை முதல்வர் வேட்பாளராக அவரை முன்மொழிந்தேன்” என்று பன்னீர் பேசியதைக் கேட்டு பழனிசாமி பதறிவிட்டார் என்கிறார்கள். இதையடுத்தே அவசர அவசரமாக பன்னீரைச் சந்தித்தார் பழனிசாமி.
“நீங்க புத்திசாலி... நாங்க ஏமாளியா?”
இந்தச் சந்திப்பு குறித்தும் உள்விவரங்களை அறிந்தவர்கள் நம்மிடம் பேசினார்கள்... “பன்னீரிடம் பக்குவமாகவே பேசியிருக்கிறார் பழனிசாமி. ‘தேர்தல் நேரத்துல சசிகலா தொடர்பா எதுவும் பேச வேண்டாம்ண்ணே. தேவையில்லாம கட்சிக்காரங்க, மக்கள் குழப்பம் அடைவாங்க. நீங்களே நிலைமை தெரியாம பேசலாமா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு டென்ஷனான பன்னீர், ‘நீங்கதான் நிலைமை தெரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க. சசிகலா ஆதரவு இல்லாம தென்மாவட்டத்துல நாம கரைசேர முடியாது. நீங்க எடப்பாடியில ஜெயிக்குறதுக்காக பா.ம.க-வை கூட்டணிக்குள்ள கொண்டு வந்துட்டீங்க. அதுக்காக, 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டையும் கொடுத்தீங்க. இதனால தென்மாவட்டத்துல ஏகப்பட்ட கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கு. நீங்க புத்திசாலி... நாங்க ஏமாளியா?’ என்று வெடித்துத் தீர்த்துவிட்டார்” என்றார்கள்.
பன்னீருக்கு நெருக்கமாக இருந்து தற்போது எடப்பாடி பக்கம் அணி மாறியிருக்கும் மூத்த தலைவர் ஒருவர், “சசிகலாவை ஒருபோதும் கட்சிக்குள் பன்னீர் சேர்த்துக்கொள்ள மாட்டார். இரட்டை இலைச் சின்னத்துக்குக் கையெழுத்திடும் உரிமையை விட்டுக்கொடுக்க அவர் தயாராக இல்லை. இதனால்தான், இப்போதிருக்கும் கட்சி கட்டமைப்பை சசிகலா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று பன்னீர் கூறியிருக்கிறார். இப்போது சசிகலாவுக்கு ஆதரவாக அவர் பேசுவதெல்லாம், முக்குலத்தோர் வாக்குகளைக் குறிவைத்தும், எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைப்பதற்காகவும் நடத்தப்படும் நாடகம்தான்” என்றார்.
பன்னீரின் இந்த சசிகலா ஆதரவு நிலைப்பாடு ஒரு பொம்மலாட்டம்தான் என்றாலும், எடப்பாடி அண்ட் கோ-வை டென்ஷனாக்கி யிருப்பது என்னவோ நிஜம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்க பன்னீர் செய்யும் முயற்சியாகவே இந்த ஆட்டத்தை எடப்பாடி தரப்பு பார்க்கிறது. பன்னீர் எங்கு கரை ஒதுங்குகிறார் என்பது தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத் தெரிந்துவிடும்.
****
செக் வைத்த உதயகுமார்
10.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தால் தென்மாவட்டங்களில் அ.தி.மு.க அமைச்சர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்துவருகிறார்கள். திருமங்கலத்தில் பிரசாரத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இந்த உள் இடஒதுக்கீடு தற்காலிகம் தான். ஆறு மாதங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெற்று முடிந்த பின்னர், அதன் அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும்” என்று சொல்ல... வடமாவட்டங்கள் கொதிப்படைய ஆரம்பித்துவிட்டன. இதையடுத்து, பா.ம.க தரப்பிலிருந்து முதல்வருக்கு நெருக்குதல் கொடுக்கவே டென்ஷனான முதல்வர், உதயகுமாரைக் கடிந்திருக்கிறார். அதன் பிறகு நீண்டதொரு விளக்கம் உதயகுமார் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டது. இது குறித்து நம்மிடம் பேசிய ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர்கள், “இந்த இடஒதுக்கீடு விவகாரத்தைவெச்சுத்தான் வடமாவட்டத்துல சில அமைச்சருங்க தெம்பா இருக்காங்க. இங்க நாங்க நொந்து நூலாகிட்டு இருக்கோம். அதற்கு செக் வைக்கத்தான், இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது என்று உதயகுமார் கொளுத்திப் போட்டார். நாங்க திட்டமிட்டு தோற்கடிக்கப்படும்போது, அவர்கள் மட்டும் ஜெயிப்பது சரியாகுமா?” என்று பொருமுகிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/o-panneerselvam-favour-talk-about-sasikala
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக