``செய்வீர்களா..?”, ``என் அன்பு உடன்பிறப்புகளே...” போன்ற வார்த்தைகள் இடம் பெறாத இந்த சட்டசபைத் தேர்தலில் `துக்கடா அரசியல்வாதி’ என்ற வார்த்தை பேசு பொருளாகியிருக்கிறது. கோவை தெற்குத் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் போட்டியால் வெறித்தனமான போட்டி நிலவுகிறது.
Also Read: தேர்தலுக்கு பிறகு கமல் அரசியலில் தொடர்வது சந்தேகம்! - வானதி சீனிவாசன் ஆரூடம்
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, `கமல்ஹாசன் வானதியுடன் நேரடியாக விவாதம் செய்ய தயாரா?' என்று கேட்க, பதிலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர், வானதி சீனிவாசனை 'துக்கடா அரசியல்வாதி' என்று விமர்சித்துள்ளனர். இதனால், வானதி சீனிவாசன் மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல்ஹாசன் மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். பரபர பிரசாரத்தின் இடையே வானதி சீனிவாசனை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.
``துக்கடா அரசியல்வாதி விமர்சனம் எப்படி வந்தது..? அதற்கு உங்களின் எதிர்வினை என்ன..?”
``துக்கடா அரசியல்வாதினா, அதை என்ன மாதிரி எடுத்துக்குறதுனு எனக்குத் தெரியலை. என்னோட வேலைகளை ஒப்பிடும்போது, சமூகத்துக்கும் கட்சிக்கும் நான் நிறைய பங்காற்றியிருக்கேன். துக்கடா அப்படீன்னா, சின்ன சைஸ்னு அர்த்தமா..? எனக்கு அதுக்கு சரியான அர்த்தம் என்னனு தெரியலை.
நான் மக்கள் நீதி மய்யத்துக்கும் கமல்ஹாசனுக்கும் சவால்விடுறேன். கடந்த 5 வருஷத்துல நான் இந்தத் தொகுதி மக்களுக்கு என்ன செய்திருக்கேன் அப்படீன்னு பட்டியல் போட்டு எடுத்துக் காண்பிக்கத் தயார். அதேபோல, அவர் இந்தத் தொகுதி மக்களுக்கு என்ன செய்திருக்கார் அப்படீங்கிறதை சொல்லிட்டு, என்னை துக்கடானு சொல்லட்டும்.
தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகளைத் தாண்டித்தான் பெண்கள் அரசியலுக்குள் நுழைந்து, பல சவால்களைக் கடந்து உயர்ந்து நிற்கின்றனர். சின்ன கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அரசாங்கப் பள்ளியில் படிச்சு, வக்கீலாகி, 2016-க்கு அப்புறம் முழு நேரமா இந்தப் பகுதி மக்களுக்காக உழைச்சுட்டு இருக்கேன். கமல்ஹாசன், கட்சி ஆரம்பிச்ச பிறகாவது இங்கு ஏதாவது செய்தார் என அவரால சொல்ல முடியுமா?
ஏதோ ஊழலை எதிர்க்க இங்கு போட்டியிடுவதா கமல் சொல்றார். ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால், அவர் தி.மு.க போட்டியிடும் தொகுதியில்தான் நின்றிருக்க வேண்டும். ஊழலை எதிர்த்துப் போராடவாவது செய்திருக்கிறாரா..? கொரோனா காலத்திலும் இங்கு நான் ஏராளமான பணிகளைச் செய்துள்ளேன். அந்தக் காலகட்டத்தில் கமல் இங்கு ஏதாவது செய்திருக்கிறாரா?
மிகப்பெரிய கட்சியில், அகில இந்திய மகளிரணி தலைவராக இருக்கும் பெண் அரசியல்வாதியை, துக்கடா அரசியல்வாதி என்று கூறுயிருப்பது, பெண்களுக்கு அவர்கள் கட்சியில் எந்தளவுக்கு மரியாதைத் தருகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இது அவர்களின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது.”
``தி.மு.க ஊழல் கட்சி என்று சொல்கிறீர்கள். அ.தி.மு.க-விலும் ஊழல் நடந்திருப்பதாக உங்கள் மத்திய அமைச்சர் அமித்ஷா முதல் நீங்கள் வரை கடந்த காலங்களில் குற்றம் சாட்டியிருக்கிறீர்களே? தேர்தல் கூட்டணியால் அது மாறிவிட்டதா?”
``இந்த சிஸ்டத்தில் ஊழல் இல்லாத ஓர் அரசாங்கத்தைக் கொடுக்க வேண்டும் என்றுதான் நாங்கள் பேசுகிறோம். எங்கள் கூட்டணி, தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்காக அமைந்திருக்கிறது. மத்திய அரசாங்கம் எடுக்கிற பல்வேறு முயற்சிகளுக்குத் துணை நிற்கிற அரசாங்கத்தை அமைக்க முயல்கிறோம். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்காமல் இல்லை. எத்தனையோ அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடந்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழல் விவகாரத்தில் நாங்கள் எப்போதும் சமரசம் செய்து கொள்வதில்லை. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.”
``கமல் காலில் அடிபட்டபோது, `கோவையின் விருந்தாளி’ என நீங்கள்தான் தனிநபர் விமர்சனத்தைத் தொடங்கியதாகக் கூறுகின்றனரே?”
``நான் அவரை விருந்தாளி என்று சொன்னேன். ஆனால், கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லையே. சாதாரண குடும்பத்தில் பிறந்து பல தடைகளைத் தாண்டித்தான் இந்த இடத்தில் நிற்கிறேன். இந்தக் கருத்துகள் மூலம் பெண்களை அரசியலுக்கு வரவிடாமல் செய்கிறீர்களா. இல்லை களத்தில் உங்களுக்கு போட்டியாளராக நிற்கிற பெண்ணை இப்படித்தான் பேசுவீர்களா, இது உங்கள் தரத்தைக் காட்டவில்லையா? எப்போதுமே பெண்களுக்கு இதுபோன்ற சவால்களும் சிக்கல்களும் அதிகம்தான். ஆனால், இதைக் கடந்து வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.”
``உங்களது கட்சியில் உள்ள ராதாரவி, உங்கள் முன்னிலையிலேயே கமலை பெண்களுடன் தொடர்புப்படுத்தி விமர்சித்தாரே? அப்போது ஏன் நீங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை?”
``ராதாரவியே பல மேடைகளில், `வானதி அம்மா பத்திரமாகப் பேசுங்கனு சொல்லிருக்காங்க’ எனக் கூறியிருக்கிறார். பொதுவெளியில் பெண்களை அவமரியாதை செய்கிற விஷயங்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை. அது யாராக இருந்தாலும் சரி.”
source https://www.vikatan.com/news/tamilnadu/vanathi-srinivasan-answer-to-kamal-haasan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக