Ad

ஞாயிறு, 28 மார்ச், 2021

ஐந்தாண்டுகள்... அமைச்சர்கள் சேர்த்தது எவ்வளவு?

காமராஜர் மறைந்தபோது அவரது சொத்துகள் 10 கதர்ச் சட்டைகள், வேட்டி மற்றும் நூறு ரூபாய்! உள்துறை அமைச்சராக இருந்த கக்கன், தனது கடைசி நாள்களில் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்துபோனார். ஆனால் இன்றைய அமைச்சர்கள் தாக்கல் செய்திருக்கும் அதிகாரபூர்வமான சொத்து மதிப்பே தலை கிறுகிறுக்க வைக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் அமைச்சர்கள் சேர்த்திருக்கும் சொத்துகளைப் பார்த்து, ‘என்ன தொழில் செய்து இவ்வளவு சொத்துகளைச் சேர்த்தார்கள்!” என்று மலைக்கிறார்கள் மக்கள்.

ஓ.பன்னீர்செல்வம்

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த சொத்துப் பட்டியலில், அசையும் சொத்துகளின் மதிப்பு 3,14,16,006 ரூபாயாகவும், அசையாச் சொத்துகளின் மதிப்பு 4,66,50,580 ரூபாயாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது தாக்கல் செய்திருக்கும் சொத்துப் பட்டியலில் அசையும் சொத்துகளின் மதிப்பு 2,01,97,270 ரூபாயாகவும், அசையாச் சொத்துகளின் மதிப்பு 4,68,40,000 ரூபாயாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அசையாச் சொத்துகளின் மதிப்பு 1,89,420 ரூபாயாக உயர்ந்திருக்கும் நிலையில், அசையும் சொத்துகளின் மதிப்பு 1,12,18,736 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

இதற்குக் காரணம் இருக்கிறது. கடந்த 2016-ல் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த சொத்துப் பட்டியலில் எடப்பாடி பழனிசாமியுடன் அவரின் மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா, தாயார் தவசியம்மாள் ஆகியோரின் சொத்துப் பட்டியலையும் இணைத்திருந்தார். ஆனால், இப்போது தாக்கல் செய்திருக்கும் சொத்துப் பட்டியலில் பழனிசாமி மற்றும் அவரின் மனைவி ராதாவின் சொத்துகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. செல்லுமிடமெல்லாம் தன்னை விவசாயி என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் எடப்பாடிக்கு, சொந்தமாக விவசாய நிலமே இல்லை என்பதுதான் ஆச்சர்யம்!

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது. 2016-ல் 55 லட்சம் ரூபாயாக இருந்த அவரது அசையும் சொத்து, இப்போது ஐந்து கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அசையாச் சொத்துகளின் மதிப்பு 98 லட்சம் ரூபாயிலிருந்து 2.5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிடும் தி.மு.க-வின் தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி எதிர்க்கட்சியினர் வரை “கடந்த ஐந்தாண்டுகளில் 75,000 கோடி ரூபாய்க்கு பன்னீர் சொத்து சேர்த்துவிட்டார்” என்று குற்றம்சாட்டும் நிலையில், தற்போது பன்னீர் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள சொத்துகளின் மதிப்பெல்லாம் ஒன்றுமேயில்லை என்று சொல்லத் தோன்றுகிறது!

கே.சி.வீரமணி

தமிழக அமைச்சர்களிலேயே அதிக சொத்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி. இவரது சொத்து மதிப்பு உயர்ந்த வேகத்தை சக அமைச்சர்களே பொறாமையுடன்தான் பார்க்கிறார்கள். 2016-ல் 7.37 கோடி ரூபாயாக இருந்த வீரமணியின் சொத்து மதிப்பு, தற்போது 33,83,37,743 ரூபாய் எனக் கிட்டத்தட்ட நான்கரை மடங்கு உயர்ந்துள்ளது. இவருக்குச் சொந்தமாக ஏலகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் சொத்துகள் இருக்கின்றன. அறப்போர் இயக்கத்தினர் உட்பட அமைச்சரின் எதிர்முகாமைச் சேர்ந்த சிலரும் அமைச்சருக்கு எதிராகச் சொத்துக்குவிப்பு புகார்களைத் தொடர்ந்து முன்வைத்துவருவது தனிக்கதை!

விஜயபாஸ்கர்

வீரமணிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். 2016-ல் அவரது அசையும் சொத்துகளின் மதிப்பு 6,33,77,329 ரூபாயாகவும், அசையாச் சொத்துகளின் மதிப்பு 2,75,00,000 ரூபாயாகவும் இருந்தது. இம்முறை தாக்கல் செய்துள்ள சொத்துப் பட்டியலில் அவரது அசையும் சொத்து 37,92,88,792 ரூபாயாகவும், அசையாச் சொத்து 23,57,95,636 ரூபாயாகவும் பலமடங்கு உயர்ந்துள்ளது. விஜயபாஸ்கர் மீது ஏற்கெனவே குட்கா ஊழல், கொரானா சிகிச்சைப் பொருள்கள் வாங்கியதில் முறைகேடு என எதிர்க்கட்சிகள் புகார்ப் பட்டியல் வாசிக்கின்றன. வருமான வரித்துறையிலும் இவர்மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை முன்வைத்துப் பேசும் எதிர்க்கட்சியினரோ, “தேர்தல் ஆணையத்துக்குக் கணக்கு காட்டியதே இவ்வளவு சொத்து என்றால் கணக்கு காட்டாமல் இருப்பது எவ்வளவு இருக்கும்” என்று புருவம் உயர்த்துகிறார்கள்!

தங்கமணி

ஆளுங்கட்சியின் கஜானா பேர்வழிகளில் முக்கியமானவர் என்று வர்ணிக்கப்பட்டும் மூத்த அமைச்சரான தங்கமணியின் சொத்து மதிப்பில் கடந்த ஐந்தாண்டுகளில் பெரிய மாற்றம் இல்லை. அசையும் சொத்துகளில் 5 லட்சம் ரூபாயும், அசையாச் சொத்துகளின் மதிப்பு 18 லட்சம் ரூபாயும் மட்டுமே உயர்ந்துள்ளன. ஆனால், அவரைப் பற்றி அறிந்தவர்களோ, “பொதுவாகவே தனது பெயரில் அவர் சொத்துகளை வாங்குவதில்லை. அவரின் மகன் மற்றும் மருமகன் சொத்துப் பட்டியலை ஆராய்ந்தால், தங்கமணி சேர்த்த சொத்துகள் எவ்வளவு என்பது தெரியவரும்” என்று கண்சிமிட்டுகிறார்கள்.

வேலுமணி

மூத்த அமைச்சரான வேலுமணி தனது சொத்துக் கணக்கைக் காட்டியதில் கவனமாகவே இருந்திருக்கிறார். 2016-ல் அவரது அசையும் சொத்து 95,39,406 ரூபாயாகவும், அசையாச் சொத்து மூன்று கோடி ரூபாயாகவும் இருந்தது. இம்முறை அசையும் சொத்து 2,26,95,872 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அசையாச் சொத்தோ 3.25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. விவரமறிந்தவர்களோ, “உள்ளாட்சித்துறையில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், அமைச்சர்களின் உறவினர் உள்ளிட்ட பினாமிகளின் சொத்து மதிப்பை ஆராய்ந்தால், வேலுமணியின் உண்மையான சொத்து மதிப்பு தெரியும்” என்கிறார்கள்.

கனிம வளத்துறையுடன் சட்டத்துறையையும் கையில் வைத்திருக்கும் சி.வி.சண்முகம் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு ‘அநியாய’த்துக்கு வறட்சியாக இருக்கிறது! 2016-ல் 50 லட்சம் ரூபாயாக இருந்த அவரது அசையும் சொத்து இப்போது ஒரு கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2016-ல் 2,10,00,000 அவரது அசையாச் சொத்து, இப்போது அதில் 17 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது. “பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்பட்டுவரும் ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சியின் இயக்குநர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன். சண்முகத்தின் சொத்து மதிப்பு ஏறாமல் இருப்பதற்கு, அவரின் அண்ணனின் அசுர வளர்ச்சியும் காரணமாக இருக்கலாம்” என்கிறார்கள் சண்முகத்தின் எதிர்முகாமைச் சேர்ந்தவர்கள்.

சி.வி.சண்முகம்

‘அமைச்சர் பங்களாவே வேண்டாம்; எம்.எல்.ஏ ஹாஸ்டலே போதும்’ என்று வலம்வருபவர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். வருவாய்த்துறையைக் கையில் வைத்திருப்பவர் தாக்கல் செய்திருக்கும் சொத்து மதிப்பைப் பார்த்தால், வருவாய்க்கே திண்டாடியிருப்பதுபோல தோற்றம் அளிக்கிறது. 2016-ல் 23 லட்சம் ரூபாயாக இருந்த அவரது அசையும் சொத்து மதிப்பு கடந்த ஐந்தாண்டுகளில் 30 லட்சம் ரூபாய் உயர்ந்து, 53 லட்சம் ரூபாயாக இருக்கிறது. 2016-ல் 8 லட்சமாக இருந்த அசையாச் சொத்துகளின் மதிப்பு, 1,29,00,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்தமாக இவரது சொத்து மதிப்பு 2 கோடி ரூபாயைத் தாண்டவில்லை. இவரின் மனைவியின் சொத்து மதிப்பும் ஒரு கோடி ரூபாயைத் தாண்டவில்லை! “தமிழகத்துக்கே பட்டா கொடுக்கும் துறையை வைத்திருப்பவர், தனது சொத்துகள் சம்பந்தப்பட்ட பத்திரங்களையும் உறவினர்கள் பெயர்களில் ‘பத்திரமாக’ வைத்திருப்பார்” என்கிறார்கள் நக்கலாக!

ஆர்.பி.உதயகுமார்

இருமுறை தொடர்ந்து அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜூவின் அசையும் சொத்துகளின் மதிப்பு 2,60,00,000 ரூபாயும், அசையாச் சொத்துகளின் மதிப்பு 2.5 கோடி ரூபாயும் அதிகரித்திருக்கிறது. அ.தி.மு.க-வின் ஆல் ரவுண்டர் அமைச்சராக வலம்வரும் ஜெயக்குமார் தாக்கல் செய்திருக்கும் சொத்து மதிப்பைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. 2016-ல் 55 லட்சம் ரூபாயாக இருந்த அவரது அசையும் சொத்து மதிப்பு, ஐந்தாண்டுகளில் 1,33,00,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. 2016-ல் 27 லட்சமாக இருந்த அசையாச் சொத்துகளின் மதிப்பு இப்போது 45 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. பட்டினப்பாக்கத்திலுள்ள அவரது வீடும் அவர் பெயரில் இல்லை.

விரைவில் ‘வழக்குகள்’ களைகட்டும் என்று மட்டும் தெரிகிறது!



source https://www.vikatan.com/news/politics/tn-ministers-asset-value-of-five-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக