Ad

திங்கள், 29 மார்ச், 2021

இருள் கிராமங்களின் துயரம்... ரோடு போடாத அரசாங்கம் ஓட்டு போடச் சொல்லுது!

இலவச மின்சாரம், மும்முனை மின்சாரம் என்றெல்லாம் வண்ணவண்ணமாகத் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகின்றன தமிழக அரசியல் கட்சிகள். ஆறுவழிச்சாலை, எட்டுவழிச்சாலை என்றெல்லாம் புதிது புதிதாகச் சாலைத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், மின்சாரம், சாலையென எந்த வசதியும் இல்லாமல் பல கிலோ மீட்டர் கால்தேய நடந்தும், ஆபத்தான இரவுகளை எண்ணெய் விளக்கில் கடந்தும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்ற உண்மை தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தெரியுமா?

சேலம் மாவட்டம் கொளத்தூரிலிருந்து 80 கி.மீ தொலைவிலிருக்கிறது கத்திரிப்பட்டி. அங்கிருந்து கரடுமுரடான, செங்குத்தான மலையில் 8 கி.மீ பயணித்தால், கத்திரி மலையை அடையலாம். கிட்டத்தட்ட 6 மணிநேரம் நடக்கவேண்டும். உற்சாகத்தோடு நடந்த எங்களை ‘வழியில யானை நிக்கிது. கவனமா போங்க சாமி’ என எச்சரித்தார் தலைச் சுமையோடு குறுக்கிட்ட 60 வயது முதியவர். காய்ச்சலால் கொதித்த சிறுவனைத் தலையில் வைத்துக்கொண்டு பரபரப்பாகக் கீழிறிங்கினர் ஒரு தம்பதியினர். பாதம், கால், தொடையில் ஆயிரம் ஊசிகள் ஏற்றப்பட்டதைப் போன்ற பெரும் வலியுடன் ஒருவழியாக கத்திரிமலையை அடைந்தோம். கத்திரிமலையில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் வசித்து வருகின்றனர். மானாவாரி விவசாயம் மற்றும் ஆடு - மாடு - கோழி வளர்ப்புதான் வருமானத்திற்கான வழி.

கத்திரி மலை கிராம மக்கள்

60 வயதான சிக்குமாதி என்ற மூதாட்டியிடம் பேசினோம். “ரோடு வசதி, கரண்ட் இல்லாம ரொம்ப சிரமப்படுறோம். வயசான காலத்துல மலையில ஏறி, இறங்க முடியலை. அடைமழை பேஞ்சா வீட்டுல இருக்க முடியலை, குளிர் நடுக்கி எடுக்கும். ஏதாவது உடம்பு சரியில்லைன்னா ஆஸ்பத்திரி வசதிகூட இல்லை. தொட்டில் கட்டிதான் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போகணும். சத்தம் போட்டுகூட நாங்க கவர்மென்ட்கிட்ட எதுவும் கேக்கலை. சாமி கும்புடுற மாதிரி வணங்கித்தான் கேக்குறோம். இது ஊரா தெரியலையா... அரசாங்கத்துக்கு எங்க மேல என்ன கோவம்? பேசாம மருந்து வச்சி எங்களைக் கொன்னுட்டாகூடப் பரவாயில்லையே. யாரு வந்தாலும் செய்யுறேன்னுதான் சொல்லிட்டுப் போறாங்க. நீ போட்டோ புடிச்சிட்டுப் போய் எதுவும் செய்யலைன்னாலும் பரவாயில்லை. அந்த ஆண்டவனை நம்பி இருக்கோம். வழி வாங்கிக் கொடுத்தா கொடுக்கட்டும். வீடு, சோறு இல்லாட்டியும் நாங்க கீழ போக மாட்டோம். இருக்கிற காலத்தையும் இப்படியே ஓட்டிக்கிறோம்” என ஆவேசமானார்.

சிக்குமாதி, மாதன், ரோஜா, நாகம்மாள்

கத்திரிமலையில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இருக்கிறது. 300 கழுதைகள் மூலமாகப் பொருள்களைச் சுமந்து வந்துதான் 1993-ல் இந்தப் பள்ளியைக் கட்டியிருக்கின்றனர். தற்போது சுமார் 30 மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்துவருகின்றனர். இதில் 8-வது வரை படித்தாலும் பல மாணவர்கள், அதற்கு மேல் படிக்கச் செல்வதில்லை. சாலைப் போக்குவரத்து வசதியில்லாததுதான் இதற்கு காரணம்.

9-ம் வகுப்பு படிக்கும் நாகம்மாள், “அத்தாணி அரசுப் பள்ளியில் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறேன். ஸ்கூல்ல இருந்து கிட்டத்தட்ட 100 கி.மீ பஸ்ல வந்து, அதுக்கப்புறம் 8 கி.மீ மலையேறி நடந்து வந்தாதான் வீட்டுக்கு வர முடியும்” என்றார். 12-ம் வகுப்போடு படிப்பைக் கைவிட்ட ரோஜாவோ, “12-ம் வகுப்பு வரை பவானியிலுள்ள ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன். யானை, கரடி இருக்கும் காட்டுல ஒத்தையாப் போக பயந்துகிட்டு, லீவ் விட்டாக்கூட ஊருக்கு வர மாட்டேன். படிக்கணும்னு ஆசை இருந்தாலும், அதுக்கான சூழல் எங்க ஊர்க் குழந்தைகளுக்குக் கிடைக்கலை. கத்திரிமலையில 8-வது வரைக்கும் ஸ்கூல் இருக்கு. அதுக்கு ஒரே ஒரு டீச்சர்தான் போட்ருக்காங்க. இங்க படிச்சி இதுவரைக்கும் மேல்படிப்பு படிச்சு வேலைக்குன்னு யாரும் போனதில்லை. படிப்பு இருந்தாத்தானே முன்னுக்குப் போக முடியும்?” என்றார்.

இந்தத் துயரம் கத்திரிமலையுடன் முடியவில்லை. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவிலுள்ள கடம்பூர் மலையில் உள்ள மல்லியம்மன் துர்க்கம் கிராமத்திலும் இதே நிலைதான்.

மல்லியம்மன் துர்க்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, “ரோடு, கரன்ட்டுன்னு எதுவும் இங்க இல்லீங்க. மானவாரி விவசாயத்துல எங்க வயித்தை நெப்பிக்கிறோம். அதுபோக அரசாங்கத்துல ரேசன் அரிசி தர்றாங்க. அதையும் அடிவாரத்துக்குப் போய் வாங்கிட்டு 7 மைல் தலையிலதான் சுமந்துக்கிட்டு வரணும். காலையில 9 மணிக்குப் போனா, சாயங்காலம் 6 மணிக்குத்தான் வந்து சேர முடியும். ஒரு உப்புப் பாக்கெட் வாங்கிட்டு வரணும்னாகூட காட்டுக்குள்ள 7 மைல் நடந்து போகணும். போற வழியில கரடி, யானைன்னு நெறைய இருக்கு. ஏதாவது உடம்பு சரியில்லைன்னா உட்காந்து உட்காந்து தடியை ஊணிதான் மலை ஏறி இறங்கணும். நாங்க போற நேரத்துல டாக்டர் இல்லைன்னா, ரோட்டுல படுத்திருந்துதான் வைத்தியம் பார்த்துட்டு வரணும்” என்கிறார் வருத்தத்துடன்.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநிலப் பொருளாளர் ராமசாமி. “புலிகள் காப்பகம் வந்ததாலதான் மல்லியமன் துர்க்கத்திற்கு கரன்ட்டும், ரோடும் போடாம இருக்காங்க. அங்க விளையுற கொய்யாப்பழம், பலாப்பழம் எல்லாம் தலையிலதான் அந்த மக்கள் தூக்கிட்டு வர்றாங்க. அந்த மக்களுக்கு உடம்புக்கு எதுவும் முடியலைன்னா சிரமம்தான். 108 ஆம்புலன்ஸ் அந்த ஊருக்குப் போக வழியில்லை. 1989-ல் மல்லியம்மன் துர்க்கத்திற்குத் தேக்குமரக் கம்பங்கள் அமைத்து கரன்ட் கொண்டு போயிருக்காங்க. காட்டுத் தீயினால் அந்தக் கம்பங்கள் பாதிக்கப்பட, அதன்பிறகு அரசாங்கம் அதைச் சரிசெய்யவே இல்லை. இப்ப உள்ள தொழில்நுட்பத்தால், அரசு நினைச்சா கரன்ட் கொடுக்க முடியும். ஆனா, அரசு சீரியஸான நடவடிக்கை எடுக்க விரும்பலை” என்கிறார்.

மல்லியம்மன் துர்க்கம்

இதேபோல, சத்தியமங்கலம் திம்பம் மலையிலிருந்து தலமலை செல்லும் வழியில் உள்ள ராமரணை கிராமத்திலும் மின்வசதி இல்லை. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாதன், “மூன்று தலைமுறையா இந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் எங்களுக்கு கரன்ட், குடிநீர் என எந்த அடிப்படை வசதியும் இந்த அரசாங்கம் செஞ்சு கொடுக்கலீங்க. 1993-ல் ஒரு தண்ணி டேங்க் கட்டுனாங்க. கரன்ட் இல்லாததால அது இன்னிக்கு வரைக்கும் பிரயோஜனம் இல்லாமக் கெடக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கரன்ட் தர்றேன்னு பணம் கட்டச் சொன்னாங்க. தலைக்கு மூணாயிரம்னு 16 பேர் கட்டுனோம். கடைசியில ‘புலிகள் காப்பகம்ங்கிறதால வனத்துறை அனுமதி கொடுக்கலை’ன்னு சொல்லிட்டாங்க. கரன்ட் இல்லாத ஊரே இருக்கக்கூடாதுன்னு பிரதமர் மோடி சொல்றாரு. ஆனா, எங்க நிலைமை இப்படித்தான் இருக்கு” என்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மோகன்குமார், “வனத்துறையானது தன் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகக் கொடுத்தால் வனம் அழிஞ்சிடும்னு நினைக்குது. ஆனா, இந்திய அரசு இந்த லாக்டெளன் காலத்தில் மட்டும் கனிமங்களை எடுக்க, அணை கட்ட, பவர் ஸ்டேஷன் அமைக்க, சாலைகள் போன்ற சுமார் 15 வளர்ச்சித் திட்டங்களுக்காகப் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வன நிலங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இதில் பெரும்பான்மை யான திட்டங்கள் புலிகள் காப்பகப் பகுதிக்குள் வருகின்றன. ஆனால், இதே அரசு வனத்துக்குளேயே காலம் காலமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு, குடியிருக்கும் இடத்துக்குச் சாலை வசதிக்கு வன நிலத்தைப் பயன்படுத்தக் கூடாதெனத் தடை விதிக்கின்றது. இது பெரும் தவறு” என்கிறார் கொதிப்புடன்.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தைச் சேர்ந்த வி.பி.குணசேகரனோ, “கர்நாடகாவில் மாதேஸ்வரன் மலையில் கேபிள் மூலமாக மின்சாரம் கொண்டு போறாங்க. அந்த மாதிரியான விஷயத்தைச் செய்ய அரசாங்கம் ஏன் முன்வரலை? எப்போதுமே குறைந்த வாக்காளர்கள் இருக்குமிடத்தில், அரசின் கவனமும் குறைவாகத்தான் இருக்கிறது. கத்திரிமலை, மல்லியம்மன் துர்க்கத்தில் அரசு போட்டிருக்கும் சோலாரை அந்த மக்களுக்குப் பராமரிக்கத் தெரியலை. வனத்தில் பல இடங்களில் மரங்களையும் மூங்கிலையும் வெட்ட பல கூப்பு ரோடுகள் போடப்பட்டி ருக்கின்றன. மரங்களை வெட்டி வர கூப்பு ரோடுகளைப் போட அனுமதிக்கின்ற வனத்துறை, மக்களுக்கு ரோடு போட்டுக் கொடுத்தா அழிஞ்சிடும்னு சொல்வது என்ன நியாயம்?” என்கிறார் ஆவேசமாக.

இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் பேசினோம். “கத்திரிமலை மற்றும் மல்லியம்மன் துர்க்கமானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருக்கிறது. அங்கு வனத்துறையினுடைய அனுமதியில்லாமல் எதுவும் செய்ய முடியாது. கத்திரிமலை மக்களுக்கு 80 வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. அரசு போட்டுக் கொடுத்த சோலாரில் என்ன பிரச்னை இருக்கிறது என உடனே அதிகாரிகளை அனுப்பி சரி செய்யச் சொல்லுகிறேன்” என்றார்.

விவசாய நிலங்களை அழித்து, காடுகளை வெட்டி, மலையைக் குடைந்து எட்டுவழிச்சாலை போடத் தெரிந்த அரசாங்கத்திற்கு, கத்திரிமலைக்கும், மல்லியம் துர்க்கத்திற்கும் வெறும் ஏழு கிலோமீட்டருக்குச் சாலை போடக் கசப்பது ஏனோ..?



source https://www.vikatan.com/news/general-news/katari-hill-village-people-share-about-tragedy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக