கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்வி, தான் சார்ந்திருக்கும் தனியார் அமைப்பின் மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் ஊராட்சி ஒன்றைத் தத்தெடுத்து அதில் குறுங்காடுகள் அமைத்திருக்கிறார். மேலும் 65 ஆண்டுகள் தூர் வாராத குளத்தை தூர் வாரி, பல வகையில் அந்தக் கிராமத்தின் வளர்ச்சிக்குப் முக்கியப் பங்காற்றி வருகிறார். அவரது செயலை பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
கும்பகோணம் ரத்தினபுரி நகரைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். மகளுக்குத் திருமணமாகி விட்டது. மகன் படித்துக்கொண்டிருக்கிறார். `ரோட்டரி கிளப் ஆப் சக்தி - கும்பகோணம்' அமைப்பின் தலைவராக இருக்கும் பாண்டிச்செல்வி அதன் மூலமும், தனிப்பட்ட முறையிலும் பல்வேறு சமூகச் செயல்களைச் செய்து வருகிறார். குறிப்பாக, நிதிப் பற்றாக்குறையால் வளர்ச்சியடையாத ஊராட்சி ஒன்றைத் தத்தெடுத்து அதில் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காகப் பல்வேறு பணிகளை முன்னெடுத்துச் செய்து வருகிறார்.
ஆற்றங்கரையில் மரம் வளர்ப்பது, குறுங்காடு அமைப்பது, சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது, ஏழைப் பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து உதவுவது என, இவரது சேவை பலரால் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன; பலரது வாழ்வில் ஒளியேற்றியுள்ளன.
கும்பகோணம் அருகே உள்ள பொத்தங்குடி ஊராட்சியில் மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த பாண்டிச்செல்வியை சந்தித்தோம். ``சேவை செய்யுறதுக்கு மனசிருந்தா போதும், வேற எதுவுமே தேவையில்ல'' என உற்சாகமாக ஆரம்பித்தார் பாண்டிச்செல்வி.
``அந்த வைராக்கியம்தான் என்னை இந்த ஊராட்சிப் பணிகள் வரை கொண்டு வந்திருக்கு. பொத்தங்குடி ஊராட்சியில பொத்தங்குடி, குடிதாங்கி, தட்டுமால் ஆகிய கிராமங்கள் உள்ளன. போதுமான வருமானமும், விழிப்புணர்வும் இல்லாத கிராமம் என்பதால `ரோட்டரி கிளம் ஆஃப் சக்தி - கும்பகோணம்' அமைப்பின் மூலம் அந்த கிராமங்களைத் தத்தெடுத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துட்டு வர்றோம்.
குறிப்பா, ஒரு கிராமம் வளர்ச்சியடையணும்னா அந்த கிராமம் பசுமையாவும், சுகாதாரத்தில் சிறந்தும் விளங்கணும். அதனால, இந்த பொத்தங்குடி ஊராட்சியில கடந்த செப்டம்பர் மாசம் குறுங்காடுகள் அமைக்கும் பணியினை தொடங்கினோம்.15 வகையான மரக்கன்றுகள் சுமார் ஆயிரத்துக்கு மேல ஊன்றினோம். பாதுகாப்புக்காக சுற்றிலும் கம்பி வேலி அமைச்சோம். எங்க ஆர்வத்தை பார்த்த ஊர் மக்கள், மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றும் பொறுப்பை ஊராட்சி சார்புல ஏத்துக்கிட்டாங்க. இதேபோல, மண்ணியாற்றங்கரையோரத்துல 500 மரக்கன்றுகள் நட்டு வளர்த்துட்டு வர்றோம்.
குறுங்காடுகள்ல வைக்கப்பட்ட மரக்கன்றுகள் இப்போ அஞ்சு அடிக்கு மேல வளர்ந்து நிக்குறதைப் பார்க்கும்போது மனசு நெறஞ்சுபோச்சு. அந்த இடமே பசுமையா இருக்கு. மேலும், நாலு பொது இடங்கள்ல கழிப்பறை வசதிகள் செய்து கொடுத்தோம். அதோட, பெண்கள்கிட்ட கழிப்பறையைப் பயன்படுத்தச் சொல்லிக் கேட்டுக்கிட்டோம். இதெல்லாம், சுகாதாரத்தை முன்னிறுத்தி செஞ்ச பணிகள்.
விவசாயத்தையே உயிர்மூச்சா கொண்ட கிராமப்பகுதிகள்ல, நிலத்தடி நீர் என்பது எவ்ளோ அவசியமானது என்பதை உணர்ந்து, 65 வருஷம் தூர் வாரப்படாமல் இருந்த குளத்தை சுமார் 15 அடி அளவுக்குத் தூர் வாரி சீரமைச்சோம். இப்ப அந்தக் குளத்துல ஓரளவுக்குத் தண்ணி நிரம்பியிருக்கிறதைப் பார்த்து, அந்தப் பகுதி மக்கள் முகத்துல மகிழ்ச்சி வெள்ளத்தைப் பார்க்க முடியுது. இதேபோல இன்னும் ரெண்டு குளங்களைத் தூர் வாரும் பணியை மேற்கொள்ள இருக்கோம்.
தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வை தாய்மார்களுக்குச் சொல்றோம். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வர்றோம். கணவரை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் படும் துயரத்தை உணர்ந்தவ என்பதால, அவங்களுக்கு உறுதுணையா இருந்தும் பல்வேறு உதவிகளைச் செய்து வர்றேன்'' என்றவர் சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
``பார்வைக் குறைபாடுடைய இளம் பெண் ஒருவர், வயசான தன் பெற்றோரோடு, சாப்பிடக்கூட வழியில்லாம தவிச்சு நின்னார். நான் அந்தப் பெண்ணுக்குத் தையல் பயிற்சி கொடுத்து, அதுக்கான மெஷினையும் வாங்கிக் கொடுத்தேன். இன்னைக்கு அந்தப் பொண்ணு தன் சொந்தக் கால்ல நின்னு தன் குடும்பத்தைத் தனி ஒருத்தியா கவனிச்சுக்கிறாங்க. எனக்கு நன்றி சொன்னப்போ, நான் நெகிழ்ந்துபோனேன்.
இதேபோல், வறுமையில இருந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பிள்ளை மாற்றுத்திறனாளி. அவருக்கு செயற்கை கால் பொருத்தினால் நடக்க முடியும் என்ற நிலை. ஆனா அவங்ககிட்ட அதுக்கான வசதியில்ல.
அந்தப் பிள்ளைக்கு செயற்கை கால் பொருத்தினோம் மெல்ல அவன் நடக்கத் தொடங்க, அவன் அம்மாவுக்கு வானத்தை எட்டிப் பிடிச்ச சந்தோஷம். இதுபோல இதுவரை பலருக்கு செயற்கை கால் பொருத்தியிருக்கோம். அரசுப் பள்ளிகளுக்கு பிளாஸ்டிக் வாட்டர் டேங்க் வாங்கிக் கொடுத்திருக்கோம். ஆதரவற்ற பெண் ஒருவருக்கு ரூ. 70,000 செலவுல தாலி, பட்டுப்புடவை, சீர் வரிசைனு வாங்கிக் கொடுத்து திருமணம் செஞ்சுவெச்சேன்.
பழுதடைந்த வீட்டை சீரமைக்க முடியாம தவிச்ச பெண்களுக்கு அதைச் சீரமைச்சுக் கொடுத்திருக்கேன். என் சொந்த செலவுல மூணு ஏழை மாணவர்களைப் படிக்க வைக்கிறேன். போட்டோவுக்கு போஸ் கொடுக்காம முழு அர்ப்பணிப்போட நாங்க செய்யுற இந்தப் பணிகளை எல்லாம் பார்த்து எல்லாரும் பாராட்டுறாங்க. அது எங்களுக்கு உற்சாகம் கொடுக்குது, எங்க பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கு.
கொரோனா லாக்டெளன் நேரத்துல `அன்னபூர்ணா' என்ற திட்டத்தைத் தொடங்கி, யாரும் பசியோடு இருக்கக் கூடாதுனு நானே களத்தில் இறங்கி எல்லோருக்கும் உணவு கொடுத்தேன்.
இதுபோன்ற செயல்களை பெண்கள் முன்வந்து செய்யும்போது, மற்றவர்களுக்கும் அது உதாரணமா இருக்கும். உதவின்னு யாரு கேட்டு வந்தாலும் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஏதோ ஒரு வகையில அவங்களுக்கு உறுதுணையா இருக்கிறதை தொடர்ந்து செய்துட்டு வர்றோம். எங்க அமைப்பின் செயலாளர் ஜெயந்தி இந்தப் பணிகளுக்கு எல்லாம் பக்கபலமா இருக்காங்க. முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள்னு எல்லாரும் முழு ஒத்துழைப்பைத் தருகின்றனர்.
படிப்பும், கையில காசும் இருந்தாதான் நல்லது செய்ய முடியும்னு பலர் நெனைக்கிறாங்க. ஆனா சேவை செய்ய மனசிருந்தாலே போதும். உலகத்தை மாத்த முடியலைன்னாலும் ஒரு ஊரையாவது மாத்தலாம். அதை நோக்கியே என் பயணம் தொடருது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கணும்'' - உற்சாகமாகவும் உளபூர்வமாகவும் சொல்கிறார் பாண்டிச்செல்வி.
source https://www.vikatan.com/news/women/kumbakonam-pandi-selvi-who-doing-great-social-work-shares-her-story-she-inspires
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக