Ad

சனி, 27 மார்ச், 2021

மைதா பர்பி | சாக்லேட் டிரஃபிள் | சாக்லேட் பால்... ஸ்வீட் எடு கொண்டாடு! - வீக் எண்டு ரெசிப்பீஸ்

வயிறு முட்ட சாப்பிட்டாலும், கடைசியாக இனிப்பைத் தேடும் வழக்கம் பலருக்கும் உண்டு. ஒரு துண்டு கடலை மிட்டாயோ, துளி வெல்லமோ... இனிப்பாக ஏதாவது உள்ளே போனால்தான் சாப்பிட்ட நிறைவே ஏற்படும் அவர்களுக்கு. இன்னும் சிலருக்கு இனிப்பு மட்டுமே போதும். விருந்தே வைத்தாலும் வேண்டாம் என்பார்கள். வார விடுமுறையில் வீட்டில் இருக்கும்போது வெறும் வாயை மெல்ல இனிப்பாக ஏதாவது என்பதுதான் பலரின் சாய்ஸும். அவசரத்துக்கு அப்படி எதுவும் கிடைக்கலியே என்று விரக்தியாக வேண்டாம். திகட்டத்திகட்ட வெரைட்டியாக வீட்டிலேயே செய்து ருசிக்க ஸ்வீட் ரெசிப்பீஸ் உங்களுக்காக...

தேவையானவை:

பிஸ்கட் - 32
டார்க் சாக்லேட் - 60 கிராம்
ஹெவி க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன்
கோகோ பவுடர் - தூவ (விருப்பப்பட்டால்)

பிஸ்கட் சாக்லேட் பால்

செய்முறை:

மிக்ஸியில் பிஸ்கட்டைச் சேர்த்து பவுடராக்கிக் கொள்ளவும். அடுப்பில் பேனை வைத்து க்ரீமைச் சேர்த்து 30 நொடிகள் சுட வைத்துக் கொள்ளவும். இதில் சாக்லேட்டைச் சேர்த்து அது கரையும் வரை நன்கு கலக்கவும். இதில் பிஸ்கட் துகள்களைச் சேர்த்து ஸ்பூனால் கலக்கி ஆற விட்டு, மூடி போட்டு ஃப்ரிட்ஜில் பதினைந்து நிமிடங்கள் வைக்கவும். பின்னர் எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும். உருண்டை பிடித்த உடன் கோகோ பவுடரை உருண்டைகள் மேலே தூவி விடவும். குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்கலாம், சின்ன பாப் ஸ்டிக்கை நடுவில் இணைத்து லாலிபாப் போன்றும் கொடுக்கலாம்.

தேவையானவை:

மைதா - 250 கிராம் + 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 180 கிராம்
தண்ணீர் - 125 மில்லி
நெய் - 60 கிராம்
சாக்லேட் துண்டுகள் - அரை கப் (உருக்கி வைக்கவும்)

மைதா பர்பி

செய்முறை:

மைதாவை சலித்து வைக்கவும். ஒரு தட்டில் சிறிது நெய் தடவி தனியாக வைக்கவும். வாய் அகன்ற கடாயில் நெய் சேர்த்து சூடானதும் அதில் மைதா மாவு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வறுக்கவும். வறுக்கும்போது மாவில் கட்டிகள் விழ ஆரம்பிக்கும். இதை மெதுவாக உடைத்துவிட்டுக்கொண்டே தொடர்ந்து வறுக்கவும். பின்னர் வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். அதே கடாயில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி ஒரு கம்பி பதம் வந்ததும் தீயை முற்றிலும் குறைத்து வறுத்த மாவை சர்க்கரையில் சேர்த்து, கட்டியில்லாமல் சில நிமிடம் தொடர்ந்து கிளறவும். ஒட்டாமல் திரண்டு வரும்போது, நெய் தடவிய பிளேட்டில் கொட்டி சமன்படுத்தவும். நெய் எடுத்த ஸ்பூனின் பின்புறத்தால் மாவுக் கலவையைச் சமன்படுத்தவும். பத்து நிமிடங்கள் இதை ஆற விடவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், இதன் உள்ளே சிறிய பாத்திரத்தை வைத்து இதில் சாக்லேட்டுகளைச் சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரின் சூட்டில் சாக்லேட் நன்கு கரைய ஆர்மபிக்கும். சாக்லேட் பாத்திரத்தை எடுத்து ஸ்பூனால் சாக்லேட்டை நன்கு கிளறி தட்டில் பரப்பிய மைதா கலவையின் மீது ஊற்றவும். இதை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். பின்பு வெந்நீரில் முக்கிய கத்தியால் பீஸ்கள் போட்டு தட்டில் எடுத்து வைத்து பத்து நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்.

தேவையானவை:

டார்க் சாக்லேட் - 500 கிராம்
ஃப்ரெஷ் க்ரீம் - 200 மில்லி
காபி டிகாக்‌ஷன் - 5 மில்லி
ஆரஞ்ச் எசன்ஸ் - 5 மில்லி
நட்ஸ் - விருப்பப்பட்டால்
கோகோ பவுடர் - சிறிதளவு
பேக்கிங் ஷீட் - 1

சாக்லேட் டிரஃபிள்

செய்முறை:

கனமான அடிப்பகுதியுள்ள சாஸ் பேனில் க்ரீமை சேர்த்து அடுப்பில் சிம்மில் வைத்துக் கொதிக்க விட்டு, தொடர்ந்து கிளறவும். உள்ளே படியும் ஏடுகளை எல்லாம் வழித்து, உள்ளேயே விட்டு மறுபடியும் கிளறவும். ஒரு பவுலில் டார்க் சாக்லேட்டை சேர்த்து, அதில் க்ரீம், ஆரஞ்ச் எசென்ஸ், காபி டிகாக்‌ஷன் சேர்த்து சில நிமிடம் விட்டு பின்பு நன்கு தொடர்ந்து கலக்கவும். சாக்லேட் உருகி, கலக்கும் பதத்துக்கு வந்திருக்கும். இதை ‘கனாஷ்’ என்பார்கள். கலவையை நன்கு ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும். பின்பு ஒரு ஸ்பூனால் கலவையை வட்டமாகத் தோண்டியெடுத்து அவற்றை உடனே உள்ளங்கையில் வைத்து சிறிய வட்டமாக உருட்டவும். சிறிது நேரம் கூடுதலாக வைத்திருந்தால் கூட, நம் உள்ளங்கை சூட்டில் உருண்டை உருகி விடும். பேக்கிங் ஷீட்டில் இந்த உருண்டைகளை வைத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் ஒரு நாள் இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் கோகோ பவுடரில் உருண்டைகளை உருட்டிவிட்டு, பின்பு எடுத்து நட்ஸ் தூவிப் பரிமாறவும். பரிமாறும் வரை பால்களை ஃப்ரிட்ஜிலேயே வைத்திருக்கவும்.



source https://www.vikatan.com/food/recipes/weekend-recipes-for-home-made-maida-burfi-chocolate-truffle-and-biscuit-chocolate-ball

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக