Ad

ஞாயிறு, 28 மார்ச், 2021

சூழலியல் பிரச்னைகள்... அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைள் முன்வைக்கும் தீர்வுகள் சரியா?

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. வளர்ச்சி, முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வெளியிட்டிருக்கின்றன. கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்கட்டமைப்பு எனப் பல்வேறு துறை சார்ந்து, ஏராளமான அறிவிப்புகளும், வாக்குறுதிகளும் அந்த அறிக்கைகளில் காணக்கிடைக்கின்றன. இந்தப் பின்னணியில், சூழலியல் பிரச்னை சார்ந்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது, அவர்களது தேர்தல் அறிக்கைகளில் அவை எப்படி வெளிப்பட்டிருக்கின்றன என்பதை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஆய்வு செய்திருக்கிறது.

Also Read: அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை... நடைமுறையில் சாத்தியமா?

முன்னதாக, “சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை 2021” என்ற தலைப்பில் சூழலியல் சார்ந்து கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டியவற்றைப் பட்டியலிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கு பூவுலகின் நண்பர்கள் குழு வழங்கியிருந்தது. நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழகத்தின் தற்போதைய சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்துத் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெரிவிப்பதோடு, சுற்றுச்சூழலை பாதிக்காத நீடித்த நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கை கோரியிருந்தது. இந்த நிலையில், நான்கு கூட்டணிகளுக்குத் தலைமை வகிக்கும் அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க, ம.நீ.ம கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் சூழலியல் சார்ந்த அறிவிப்புகள் குறித்த விமர்சனத்தை இந்த அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

சூழலியல் பார்வையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் - சில முக்கிய அம்சங்கள்

1) அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க)
அதிமுக தேர்தல் அறிக்கை 2021

49 பக்கம் கொண்ட அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையைச் சுற்றுச்சூழல் அடிப்படையில் பார்க்கும்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எதிரான ஓர் அறிக்கை என்றுதான் இதைக் குறிப்பிட முடியும்.

நதிகளை இணைப்பதால் ஏற்படும் பல்லுயிர் பாதிப்புகள் குறித்துப் பல்வேறு அறிவியல்பூர்வ ஆய்வுகள் வந்துவிட்ட நிலையில், தொடர்ந்து எவ்வித தரவுகளும் ஆய்வுகளும் இல்லாமல் வெள்ளநீரை உபரிநீராகக் கருதி நதிகளை இணைப்பது பெரியளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும். சுற்றுச்சூழல் அடிப்படையில் பல எதிர்ப்புகளைச் சந்திந்து வருகின்ற நிலையில் தமிழகத்தின் அனைத்து ஆறுகளையும் இணைப்போம் என அறிவிப்பது நீர் மேலாண்மையில் அ.தி.மு.க-வின் அலட்சியத்தைக் காட்டுகிறது.

சுற்றுச்சூழலுக்கு நேரடியாக மாசு ஏற்படுத்தாத பொதுப் போக்குவரத்து திட்டத்திற்காக 5,000 மின்சாரப் பேருந்துகளை இயக்குவது, சூரிய மின் சக்தியில் இயங்கும் அடுப்புகள் வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

வறண்ட நில விவசாய ஆராய்ச்சிக் கூடம், நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம், மாநில வேளாண்மை ஆணையம் உருவாக்கல், பனை மர வளர்ப்பை ஊக்குவித்தல் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்க விஷயங்களாகும். கூடங்குளம் அணு உலைகள் விரிவாக்கம், எட்டுவழிச்சாலை, காட்டுப்பள்ளி துறைமுகம், செயல்பட்டுக்கொண்டிருக்கும் ‘ஹைட்ரோகார்பன் கிணறுகள்’ குறித்த எந்த நிலைப்பாடும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளித்தது. பொன்னேரியில் நடந்த பிரசாரத்தின்போது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்திற்கான அனுமதியை வழங்க முடியாது என்று கூறியதை வரவேற்கிறோம்.

2) திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க)
திமுக தேர்தல் அறிக்கை 2021

தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை 2021-ல், பூவுலகின் நண்பர்கள் முன்னெடுத்த சூழலியல் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன; பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இதனை வரவேற்கிறது!

வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன் எனும் தலைப்பில், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவது; வேளாண்மைக்கு என்று நிதிநிலை அறிக்கை தாக்கல்; சிறுதானிய வகைகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்வதோடு, சிறு தானியங்களை அரசே கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை; காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு மற்றும் ‘ஷேல்வாயு’ எடுக்கும் திட்டங்களைத் தடுத்தல்; தமிழகத்தில் மொத்த நிலப்பகுதியில் குறைந்தபட்சம் 33% காடுகள் உருவாக்க நடவடிக்கை ஆகியவை தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களில் சூழலுக்குச் சாதகமானவை.

சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்ற முயற்சிகள் குறித்த அறிவிப்பு; தென்னக நதிகளை இணைக்கும் திட்டம்; புதிய கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைச்சகம்; மாற்று எரிசக்தி அறிவிக்கப்பட்ட போதிலும், ஜெயங்கொண்டம் அனல்மின் நிலையம், உடன்குடி அனல்மின் நிலையம் போன்ற திட்டங்கள் ஆகியவை தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பாதகமான அம்சங்களில் சில.

மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

Also Read: ’காலநிலை மாற்றம் என்கிற சொல்லே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை!’ - பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

3) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க)
அமமுக தேர்தல் அறிக்கை 2021

அ.ம.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தின் முக்கியச் சூழல் பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் சரியாக முன்மொழிந்துள்ள இந்தத் தேர்தல் அறிக்கையில், சூழலுக்குக் கேடான அம்சங்களும் இருக்கத்தான் செய்கிறது.

கூடங்குளம் விரிவாக்க திட்டத்தைக் கைவிட குரல் கொடுப்போம் எனவும், பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி அணு உலை செயல்படும் விதம் பற்றிச் சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் துணிவாக எடுத்துரைக்கிறது அ.ம.மு.க-வின் தேர்தல் அறிக்கை.

புவி வெப்பமாதலை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்; இருக்கின்ற வனங்களை, இயற்கை வளங்களை, உயிரினங்களைப் பாதுகாக்கவும் காடுகளை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்; தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் மரம் நட்டு, பசுமை தமிழகம் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் வரவேற்கப்பட வேண்டியவை.

தமிழ்நாட்டிலுள்ள முக்கியக் கட்சிகள் பலவும் அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்க்கும் சூழலில், சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி, கொளச்சல், நாகப்பட்டினம் உள்ளிட்ட எட்டு துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை உரிய கட்டமைப்புகளோடு சர்வதேச தரத்துடன் உயர்த்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். துறைமுக விரிவாக்கதிற்காகப் போதிய நிலங்கள் அளிக்கப்படும். இது குறிப்பிட்ட துறைமுகத்தின் மேம்பாட்டிற்காக மட்டுமல்லாமல் துறைமுகத்தோடு தொடர்புடைய தொழிற்சாலைகள் அமைந்த தொழிற்பேட்டையாக அமையும் வகையில் இருப்பது உறுதி செய்யப்படும். அந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான அனுமதிகளை அந்தத் துறைமுக மேம்பாட்டு கழகமே அளிக்கும் வகையில் அதிகாரம் வழங்கப்படும் என்றெல்லாம் மீனவ மக்கள் நலனுக்கு எதிராக அமமுகத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

4) மக்கள் நீதி மய்யம் கட்சி (ம.நீ.ம)
மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை 2021

முதல்முறையாகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை 108 பக்கங்களில் வெளியாகியுள்ளது.

நீலப்புரட்சி என்கிற தலைப்பில் ஏரிகள், கண்மாய்த் தூர்வாரல், மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக நடவடிக்கைகள் குறித்துச் செயல்திட்டங்கள் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. என்றபோதிலும், பல்லுயிர் பெருக்கத்திற்கு எதிரான நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் எனக் கூறுவதைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியில் மாசு கண்காணிப்பில் உள்ளூர் மக்கள் பங்களிப்பு, உயிர்ச்சூழல் அமைப்புகள் பாதுகாப்பு குறித்த அறிவிப்புகள் வரவேற்கப்பட வேண்டியது என்றாலும் அதனைத் தொடர்ந்து கனிம வள ஏற்றுமதி 50% அதிகரிக்கப்படும் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கனிம வள உற்பத்தியை அதிகரிப்பது என்பது இயற்கை வள சுரண்டலை ஊக்குவிக்கும் என்பதால் இது எதிர்க்கப்பட வேண்டும்.

எரிவாயு திட்ட தலைப்பில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை டெல்டா மாவட்டங்களில் அனுமதிக்க முடியாது என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ஆழ்கடல் திட்டங்களை ஆதரிப்பது தவறான முடிவாகும். ஏழை எளிய மக்களுக்குச் சூரிய ஒளி மின்சாரக் கட்டமைப்பு உருவாக்கி அதன் மூலம் மூன்று LED விளக்கு ஒரு ஃபேன், ஒரு டிவி மற்றும் மொபைல் சார்ஜர் கொண்ட சோலார் கிட் வழங்கப்படும் என்கிற அறிவிப்பும் வரவேற்கத்தக்கதாகும்.

சூழலியல் பார்வையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் - பூவுலகின் நண்பர்கள்



source https://www.vikatan.com/government-and-politics/election/ecological-aspects-in-election-manifesto-of-tamil-nadu-political-parties-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக